உமா(ஜேர்மனி) 

நெஞ்சுடைந்து வார்த்தைகள் தொலைந்து நின்றோம்

கவிதைகளும் கனவுகளும் தம் அர்த்தத்தை இழக்க

அழகாய் புலர்ந்த பொழுதுகளின் குரூர கணங்களில்

நாம் மரணித்தோம்.

 

தெய்வமென்றும் மலரென்றும் பதுமையென்றும்

பெருங்கதை பேசிய சம்பிரதாய வேலிகளிற்குள்

எங்கள் உடல்களும் உணர்வுகளும் சிதைக்கப்பட்டன.

 

ஒரு நான்கு வயதுக்குழந்தை

ஒரு பள்ளிச்சிறுமி

ஒரு தாய்

ஒரு கன்னியாஸ்திரி

ஓர் அறுபத்தைந்து வயது மாது

இதில் நாங்கள் யாராகவிருந்தாலும்…..

ஆதிக்கச்சுவடுகளைத் தொடர்ந்த கற்கையின்

ஆண்மையின்குறி

கடித்துத் துப்ப

இரு முலைகளும் ஒரு யோனியும்

கொண்ட சடங்களானோம்.

 

கையை விரித்து

சுதந்திரமாய் காற்றைப் பிடித்து விளையாடி

எமது இருப்பை உணர்தல் என்பதும்

இருளில் சங்கமித்தல்

பிடித்த ஆடைகளை அணிதல்

கோபத்தை வெளிக்காட்டல்

குற்றப்பத்திரிகையின் அங்கமாய்

மரணத்தாலும் அத்துமீறல்களாலும்

தண்டிக்கப்பட்டன.

காலகாலமாய்

குருதியும் நிணமும் தோய்ந்து

சிதைந்த உடலமாய்

நாற்றம் பிடித்த

விசாலமான சுவர்களிற்குப் பின்னும்

பாழடைந்த கிணறுகளுக்குள்ளும்

மௌனித்திருந்த எம் ஆன்மாவை

மீட்டு வருவோம்

சுயத்துடன்

பெண்ணிற்கான

ஒரு வெளியைச் சிருஷ்டிப்பதற்காக.

 

Advertisements