-புஷ்பராணி-

Jeyakanthan-10

எம்மை   ஊடுருவி …எம்மோடு  இரண்டறக்  கலந்த  இயல்பான   எழுத்துநடையால்   மனதைச்   சிறகடிக்க வைத்த   எழுத்தாளர்களையும்,  மிகச்  சிறந்த   கலைஞர்களையும்   அவர்கள்   உயிரோடு   இருக்கும்    காலங்களில்,  கண்ணெடுத்துப்   புகழ மறக்கும்   நாம்   ,அவர்கள்   மறைவுக்குப்  பின்னரே  தூக்கத்தில்   இருந்து  திடுக்கிட்டு  எழுந்தவர்  போல்  அவர்தம்  நினைவுகளையும்,   அவர்கள்மேல்   நாம்  கொண்ட  உண்மையான  நேசிப்பையும்   உணரத்  தலைப்படுகின்றோம்.  பேசவும்  புறப்படுகின்றோம்.
                  உயிரோடு  அவர்கள்   கோலோச்சிய   காலங்களில்    அவர்களுக்கே    தெரியாமல்   பலர்  நெஞ்சங்களில்   பதிந்திருந்த   அவர்கள்   பற்றிய    அற்புதமான   நினைவுகளையும்  ,கைகொள்ளாத   மாண்புமிகு   பாராட்டுக்களையும் அதிசிறந்த   மதிப்பீடுகளையும்   அவர்கள்   அறியாமலே   போய்விடுவது அந்த   உன்னதமானவர்கள்    மறைந்ததைக்  காட்டிலும்  பெரும்  துயரமாகும்.
      ஜெயகாந்தன்   உயிரோடு   இருக்கும்போதே   அவர்பற்றி  முகநூலில்   எழுதிப்  பெருமைப்படுத்தியிருக்கிறேன்.  இறந்தபின்   புனைந்து   புளுகுவதைவிட   உயிருடன்  இருக்கும்  காலத்தில்   உண்மையான   பற்றும்   நேர்மையுமாக அபிமான எழுத்தாளரைப் புகழ்ந்தேன்.
         அவர்  மறைந்தபின்   இப்போதும்   அவர்பற்றி   எழுத   நேரிடுவது    பசப்பற்ற    உண்மை  பகர்தலாக….அவர்  எழுத்துகள்மீது    நான்  கொண்ட தீவிரமான   பற்றின்  வெளிக்காட்டுதலாக  ….அவரின்   தனித்துவக்  குணங்களை    மேலும்   ஊன்றிக்   கவனிக்க  வைத்துக்    கொஞ்சமேனும்  அவற்றைக்  கொட்டவேண்டும்  என்ற  விருப்புடன்  மனம்   பரபரக்கின்றது.
     தான்   கம்பீரமானவன்   என்று  இவர்  தனது  செய்கைகளால்  …நடையுடைபாவனைகளால்   காட்டிக்கொண்டவர்.  எழுத்தாளர்கள்,  கலைஞர்கள்  கொஞ்சம்  . . .அதிகம்   கர்விகள்  என்பது  புதிதானதல்ல.   அது  தம்  திறமையின்மீது   கொண்ட   நம்பிக்கையின்   இன்னோர்  பக்கமாகும். ஆனால்,  இவர் மாபெரும்   கர்வி என்று   நெருங்கிப்   பழகியவர் களுக்குத்  தெரியும்.  அதற்குப் பின்னே  ஒளிந்திருக்கும்   அன்பும்   அவர்களுக்குப்  புரியும். தனக்குள்   இருக்கும்   மென்மையான   இரசனைகளைக்  கூட ,அகங்காரம்  என்னும்   போர்வை  கொண்டு  இவர்  மூடியிருந்த  போதிலும் ,  அவரறியாமலே    அவை  வெளிப்படுகின்றதைப்   பல  இடங்களில்  கவனிக்கமுடிகின்றது. இது  வெளிப்பூச்சு   என்பதை  ஆழ்ந்து  நோக்குகையில்  கண்டறியலாம்.
    அடித்தள   மக்களின்   வாழ்க்கை  ஓட்டங்களைத்  தன்  எழுத்துகளில்  உயிர்த்துடிப்போடு    கொண்டுவரும்   ஒருவன்   எப்படி   மென்மையற்றவனாக  …இரசனையற்ற  மண்ணாக   அடிப்படையில்    இருக்கமுடியும்?   வெறும்  வீம்புக்குத்  தன்னையொரு   கடுமையானவனாகக்   காட்டுவதிலேயே    தன்  வாழ்நாளைக்   கழித்திருக்கின்றார்.  இவர்  இரசனை  மிகக்  கொண்டவர்…ஆழ்ந்த   இரக்க சுபாவம்  கொண்டவர்.
   ‘மணிக்கணக்காகத்   தென்னை  மரங்களைப்   பார்த்துக்கொண்டிருப்பது    எனக்குப்  பிடிக்கும்.  மயிலின்  தோகை மாதிரி  அவை  சிலிர்க்கும் .மந்தகாசத்  தென்றலில் சிட்டுக்குருவிகளுக்கு   ஊஞ்சல்  கட்டித்  தாலாட்டும்   புயல் காற்று  வந்துவிட்டால்   தலைவிரித்து  நின்று  ஆடும்…மாரிகாலத்தில்   ,மழைபெய்து  ஓய்ந்த பின்னர் ,சரம் சரமாக  முத்துக்கட்டி  நின்று  ..நிலாக்  காலமும்  சேர்ந்துவிட்டால்   ஜகஜ்ஜாலம்  காட்டி  ஜொலிக்கும்’  என்று   ஜெயகாந்தன் வர்ணிக்கும்  இந்த  வரிகளை  நான்  இரசித்ததால்   அப்படியே  போட்டுள்ளேன்.அவர்  இரசனைக்கு   இது  ஒன்றே  போதுமே.
            குடும்பநிலை   காரணமாகச்   சிறு  வயதிலேயே   படிப்பைத்  தொடர  முடியாமல்   போன  இவர்  சுயம்புவாகத்   தன்னைச்  செதுக்கி ,நுண்ணிய   தன்  அறிவை  வளர்த்தவிதம்   பிரமிப்பூட்ட   வைக்கின்றது.’பதினேழு   வயதுக்குள்ளாகவே   சகல  கெட்ட  பழக்கங்களையும்   மிச்சம்  விடாது   கைக்கொண்டேன் ‘  என்று  ஒளிவு  மறைவின்றிக்   கூறும்  இவர்  அதனுள்ளேயே   மூழ்கி   நாறிப்  போகாமல்  இருக்கப்   பலவிதமான   அறிவுடையோர்   நட்புகள்  இவருள்  தீராமல்   ஒளிந்திருந்த   அறிவுப்  பசிக்குத்  தீனியாகி… பலவிதமான   நூல்களைப்  படிக்கவைத்துத்   தமிழையும்   விருத்திசெய்து   ….எல்லோரும்  வியக்கும்  வண்ணம்  தனித்துவமான   மாபெரும்   எழுத்தாளனாக   …நிகரற்ற   உயர்  பீடத்தில்  வைத்துப் பல  விருதுகளுக்கும்  சொந்தக்காரராக்கியிருக்கின்றது.   இவரிடமுள்ள   சிறப்பம்சங்கள்    மட்டுமே   என்  கண் முன்னே  விரிகின்றன .
         என்  வாசிப்புத்  தீவிரமடையத்  தொடங்கிய  காலத்தில்  என்  அண்ணன்  தியாகராஜா    மூலம்  சாண்டில்யன், மு. வரதராசன்  ,அகிலன்  ,கல்கி, நா. பார்த்தசாரதி ,[மணிவண்ணன்],காண்டேகர்  ,டால்ஸ்டாய்   என்று படிக்க  ஆரம்பித்தேன்.  இதன்  பின்னான  நாட்களில்  என்  சகோதரன்  புஷ்பராஜா    மூலம்  எனக்கு   ஜெயகாந்தனின்   நூல்கள்   அறிமுகமாயின.  வீட்டில்  எனது  தம்பி  ,தங்கைகளும்  ஜெயகாந்தனின்  எழுத்துகளுக்கு   அடிமைகளானார்கள். அப்போது  ,எமது   இயக்க  நண்பர்கள்   சிலரும்  ஜெயகாந்தனின்    பிரிக்கமுடியாத    தீவிர   வாசகர்களே  …இன்றுவரை.
 ஜெயகாந்தன்   தவிர   வேறு  யாருமே  என்னை  முற்றாகக்   கவரவில்லை. எத்தனையோ  பேரின்  எழுத்துகளைப்   படித்துக்கொண்டே   இருக்கின்றேன். ஜெயகாந்தனின்    இயல்பான  …அழகியல்  தெளிவான    வேகநடைக்கு    எதிராகச்    சமனாக   எவரையும்   நிறுத்திப் பார்க்க என்னால்  முடியவில்லை. அது  முடியவும்   முடியாது.  தன்  மிகச்  சிறந்த  எழுத்துநடைக்கு    ஈடாக   ஜெயகாந்தனாலேயே    ஒரு  கட்டத்துக்குமேல்    எழுதமுடியவில்லை. புதுமைப்பித்தன், மு.வரதராசன், பிரபஞ்சன்  என்று  பலரின்  நூல்களை  இன்று  படிக்கவே  முடியவில்லை..
ஜெயகாந்தனின்   படைப்புகள்  எம்  நினைவில்  இன்றும்  அப்படியே  மெருகு  கலையாமல்  பதிந்திருக்கின்றனவே….. சினிமாவுக்குப்  போன  சித்தாளு , யாருக்காக   அழுதான்…  ஜோசப். அக்கினிப்பிரவேசமாகட்டும்,பாரிசுக்குப் போ,கருணையினால்   அல்ல,ஒரு பிடி  சோறு,கங்கை   எங்கே  போகின்றாள் , சில நேரங்களில்   சிலமனிதர்கள் ,ஒரு  நடிகை  நாடகம்  பார்க்கின்றாள்  ,யுகசந்தி ,ஆடும்  நாற்காலிகள் ஆடுகின்றன , வாழ்க்கை  அழைக்கின்றது ,பாட்டிமார்களும்   பேத்திமார்களும் ,ஒரு மனிதன்  ஒரு  வீடு  ஒரு  உலகம் …….இப்படியே   இன்னும்  பட்டியல்  நீளும் .எதையும்   இத்தனை  வருடங்கள்  கடந்தும்   மறக்க  முடியவில்லையே!
இன்றைய   கால  கட்டத்துக்கும்  சற்றும்  பிசகாமல்   அவர்  எழுத்துக்கள்  புதுமை…எளிமை..வேகம்  எதிலுமே  கொஞ்சம்  கூடச்  சறுக்கவில்லையே.அவர்  படைத்த  பாத்திரங்கள்   அனைத்துமே   சாகாவரம்  பெற்றவை. என்றும்  என்றும்  எனக்குப்  பிடித்த  நூல்கள்  ஜெயகாந்தனுடையவையே.
   அவர்   தன்னுடைய   சிறுகதை யொன்றில் ,’நாம்  கிழிக்கும்  தேதிகள்   நம்  காலடியில்  குவிந்து  குவிந்து  பெருகி  நம்மையே   மூடிக்கொள்கின்றது.  பிறகு  நாம்  அவற்றைக்  கிழிப்பதேயில்லை. நம்மைப் பொறுத்தவரை  …நாம்  மூழ்கிப்  போனபிறகு  …தேதிகளால்   ,நாட்களால்  நமது  வாழ்நாள்  மூழ்கடிக்கப்  பட்டபிறகு  நமக்கும்  தேதிக்கும்  சம்பந்தமே   அற்றுப்  போகின்றது.நாம்  கிழித்தெறிந்த  தாள்கள்  உதிர்ந்ததுபோல   நாமும் உதிர்ந்து  போகின்றோம்’ என்று  குறிப்பிட்டது  போல   உதிர்ந்துபோய் விடவில்லை  அவர் . எம்  நினைவுகளில்   என்றும் பொலிவோடு   வீற்றிருப்பார்.
Advertisements