மாங்கிளைகள் முறிய
தென்னங்கன்றுகள் புகைய
வீடும் எரிந்தடங்க
வேலிக் கருக்குகள் கீறக்குருதிக்கால்களோடு
ஊர் விட்டுத் தப்பிய நினைவு.
.
அலைச்சலின் களைப்போடு சில மாதங்கள் கடந்து
ஊர் மீண்டதாய் நினைவு.
.
மண் குழைத்து நிலம் பூசி
பனையோலைக் குடிலொன்று இணக்கி
செத்தைப் பல்லிகள்
சாரைப்பாம்புகள்
இரையும்வண்டுகளோடு  
மழை இரவில் மரமொன்று பாறிச் சரிய
அணிலரித்த குரும்பை நிலம் அதிர்த்த
கூதலுக்குக் கணகணப்பாய்
ஓலைப்பாயில் உறங்கி ,விடிந்தெழும்பி
தாவாரத்தில் ஓடும் வெள்ளம்
தாண்டக் கடுதாசிக் கப்பல் விட்டதாக நினைவு.
 .
உறக்கமில்லா ராப்பொழுதாய் ஒரு நாள்.
மார்கழி மாசச் செக்கலில் வீடு எரிந்தடங்க
மீண்டும்….. வீடிழந்த நினைவு .
.
கிடுகுகள் இழைத்து
பனையோலைகள் மிதித்து
சாம்பல்மேடு தவிர்த்து
கிணறு,கடப்பு வடக்கு,கிழக்குத்திசை பார்த்து                               வாசல்செதுக்கிக் குடிலொன்றெழுப்பி
 ‘வீடெனில் …..இனிக் கல்லால் மட்டுமே’
குடியெழுப்பும் மனிசரை எரிக்கும் கோபத்தோடு அம்மா சொன்னதாக ஞாபகம்.
 .
அம்பலவி துளிர்த்து
செவ்விளநீர் மரம்  குலைகள் கனக்க
நெல்லி முற்றி  நிலம் பரவ
வீடு வெளிச்சமான ஞாபகம்.
.
குசினிக் கரை வாடாமல்லி நிறம் வெளுத்து உதிர முன்னர்
ஆமி வரப்போகுதென்று  கதைவர
 வளவுமூலையில் பங்கர் வெட்டிய நினைவு.
.
வடக்குத் தெற்காகப் பெரும்பச்சை அலையாக எழும்பி
வான் முழக்கமிட்டு ஊருக்குள் ஆமி வந்தது.
.
கரி கொண்ட காணி!
சாம்பற் பறக்கக் கிடந்ததைக் கடைசியாகப் பார்த்தது நினைவாயுண்டு.
.
‘கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா? ‘                         நட்புகள் விசாரணை.
அங்கிருக்கும்  ஊரில் எங்கிருக்கிறதென் வீடு?
தர்மினி
Advertisements