சக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம்

sathikoothu2
    பிரசன்னா இராமசாமியின் சக்திக்கூத்து பாரிஸில் 3 நாட்களுக்கு நடைபெறப்போகின்றது என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்து ஆர்வமிகுதியோடு காத்திருந்தேன். இவர் 24 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்-உருது மற்றும் ஆங்கிலத்திலும் முழுநீளநாடகங்களோடு நாடகவாசிப்பு-பயிற்றுவித்தல் என நாடகம் தொடர்பான ஈடுபாட்டோடு வாழும் பிரசன்னா இராமசாமியை நாடகத்தோடு இணைந்த பெயராய் தான் அறிந்திருந்தேன்.யுத்தம் அதனால் குழந்தைகளும் பெண்களும் படும் துயரங்கள்-பிரிந்து சென்ற தாய்நிலம்-புதிய வாழ்வு எனப் போர் விளைவித்த இரு பக்கங்களும் பேசப்படும் படைப்புகளை உருவாக்குகிறார். நாடகங்களின் உள்ளீடுகள் பெரும்பாலும் கவிதைகள் கிரேக்க-தமிழ்க்காவியங்களின் சில பகுதிகளை உள்வாங்கியவை. செவ்வியல் பிரதிகளைத் தற்போதைய வாழ்வின் துயரங்களும் மகிழ்வுகளும் பிரதிபலிக்கும் விதமாக அன்றைய – இன்றைய கதைகளைப் பிணைத்தும் விலத்தியும் செய்யும் படைப்புகள் மனிதநேயமும் கலைநேர்த்தியும் மிக்கவை.இசையையும் நடனத்தையும் இவர் கையாளும் விதம் சுவாரசியமானது. இரசனைக்குரியது. அழகியல் கொண்ட அரசியலால் எம்மனங்களை அசைத்துவிடுகிறார் பிரசன்னா இராமசாமி.
     கடந்த யூன் மாதம் 26ம் திகதி மாலை 8.30க்கு எதிர்பார்ப்போடு நாடக அரங்குக்கு சென்றேன்.வாசலில் நின்று நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார் பிரசன்னா இராமசாமி. அடையாளங்கண்டு அரவணைத்தார்.பேஸ்புக்கிற்கு நன்றி. அரங்கினுள் நுழைந்து இருக்கை தேடி அமர்ந்த போது அரங்கின் சூழ்நிலையே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். வாசுகனின் ஓவியங்கள் அரங்கில் தொங்கிக் கொண்டிருந்தன.அவை சக்திக்கூத்திற்கு எம்மைத் தயார்ப்படுத்தும் மனநிலையைத் தருவதற்கான ஆயத்தமாக இருந்தன.நாடகம் நடக்கும் நிலப்பரப்பைவிட பார்வையாளர்களின் இருப்பிடம் சிறியதாகவிருந்தது.50பேர் அமரக்கூடிய அரங்கது.மூன்றாவது நாளான அன்று சக்திக்கூத்து ஆரம்பமாகும் போது ஒரு இருக்கை கூட வெறுமையாயில்லை. தமிழ்மொழி பேசுவோர் மட்டுமின்றி பிரெஞ்ச் மொழி பேசுவோரும் அங்கே எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
sathikoothu
     மேடை என்ற அமைப்பின்றி பார்வையாளருக்குச் சமமாக நிலத்தில் ஆற்றுகை நடைபெற்றது. பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான இடைவெளி மிகக்குறைவு.கலைஞர்கள் மனசுக்கு நெருக்கமான மனநிலையைத் தந்தனர். உடல் முழுவதும் துணி சுற்றிய பெண்ணுடல் நிலத்தில் புரண்டபடி அரங்கமெங்கும் அலைந்தது.பேரொளி தொடர்ந்த அவ்வுருவம் ரோகிணி. ஆரம்பமே பார்வையாளர்களது புலன்களைக்குவியச் செய்தது.ரேவதி குமாரின் ஆலாபனை இசையலைகளாய் அப்பெண்ணுருவைத் தொடர்ந்தன. மெதுமெதுவாய் உடல் சுற்றப்பட்ட துணியிலிருந்து விடுபட்டு எழுந்த உடல் வேகமெடுத்து ஓடி-துள்ளி-சுழன்று-பொங்கி அதிர்ந்தது. ஆற்றுகையின் இறுதி நிமிடம் வரை ரோகிணியின் சக்தியின் அளவு சற்றும் குறையவில்லை.அவ்வரங்கை விட்டு ஒரு செக்கனும் அவர் விலகவுமில்லை.ஏறத்தாழ 85 நிமிடங்கள் நாடகம் இடைவேளையற்று நடைபெற்றது.
                  ‘நான் திரௌபதி’ என்ற சுயஅறிமுகத்தோடு அறிமுகமாகும் அப்பெண் பாத்திரம் கேட்கிறார். நான் திரௌபதி பாத்திரம் ஏற்கிறேன். உங்களுக்குத் தெரியும் எனக்கு நீளமான கூந்தலில்லை.இந்த விக் தேவையா? எனக் கையிலிருந்த நீளத் தலைமுடியைக் காட்டிக் கேட்டுவிட்டு ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிடுகிறார்.
             நெல்லை மணிகண்டனின் தப்பு மற்றும் உறுமியின் இசை அதிர்வுகள் ரோகிணியின் குரலுக்கும் கூத்திற்கும் இசைந்து நாடகத்தின் தொனியை உயிர்பாக்கியது. நெல்லை மணிகண்டனது இசைக்கருவிகள் மட்டுமே அங்கிருந்தவை. தப்பும் உறுமியும் முன்னும் பின்னுமாக உபயோகிக்கப்பட்டது கூத்தின் உணர்நிலையை உச்சம் நோக்கி எடுத்துச்சென்றன. ரேவதி குமாரின் ஆலாபனைகளும் பாடலும் என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு அந்த இரசனையில்லாமலிருக்கலாம். ரோகிணியின் நடையும் ஆடலும் கவிதை வரிகளைப் பாடிய குரலும் கம்பீரமும் பெரும்பங்கான தனியொருவரது நடிப்பென்ற சலிப்பைத் தரவேயில்லை. அவ்வரங்கிலிருந்த தூணைக் கூடத் தன் அரங்காடலுக்கு ஒரு கருவியாக உபயோகித்தார் ரோகிணி.கோபமும் வேகமும் கொண்ட பெண்ணாக யுத்தத்தின் விளைவுகளை விபரித்தார். போர் பெண்களையும் குழந்தைகளை ஏதுமறியாதவர்களை என்னசெய்கிறது? அவர்களது குரல் எவ்விதமாய் ஒலிக்கிறது? சக்திக்கூத்து சமகாலம், கிரேக்கக் காவியப் பாத்திரம், திரௌபதி எனப் பாடல்களும் வசனங்களும் அதிர்வுகளுமாய் பெண்களின் துயரத்தைப் பிரவாகித்தது.
பீஷ்மராக உருவகப்படுத்தியிருந்த விளக்குமாறும் பலரது கவனத்தையும் கவர்ந்தது.அந்த அரசமுடியை எள்ளிநகையாடும் வடிவமாகத்தெரிந்தது.
 sakthi coothu 1
              திரைப்படங்களில் எம்மைக் கவர்ந்த ரோகிணியின் நடிப்பும் குரலும் இன்னும் அதிகமதிகமாய் இங்கு வெளிப்பட்டது. நான் எந்தவொரு சினிமாவிலும் பார்த்திராத ரோகிணியின் திறமையை இங்கு கண்டேன். அவர் சக்தி வடிவாயிருந்தார். நெல்லை மணிகண்டனும் ரேவதி குமாரும் அவரைச் சன்னதங்கொள்ளச் செய்யும் இசைகளை வழங்கியபடி தம் பங்கை வழங்கினர்.ஒரு அலை போலவும் காற்றுப்போலவும் அவ்வப்போது பாடியபடியே சுழன்று கொண்டிருந்தார் ரேவதி குமார். இவர்கள் மூவரோடு இசைந்த ஒளிச்சேர்க்கைகளை ஒரு    மூலையிலிருந்து ஓவியர் வாசுகன் வழங்கினார்.ஸ்பீக்கர் , மைக் என எதுவுமற்று மூவரும் தம் இயற்கையான இசையை- பேச்சை- பாடலை உணர்வுகள் வழியாக உரத்தும் பலத்தும் கலையாக்கினர். அவர்களோடு பாரிஸில் வாழும் கலைஞர்கள் நான்கு பேர் சிறு பங்களிப்பொன்றையும் அழகாக வெளிப்படுத்தினர்.
                      பாரதியார் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் பாடல்கள் சேரன், அவ்வை, திருமாவளவன்,சுகுமாறன், அகிலன் ஆகியோரின் கவிதைகளும் அத்துடன் பிரசன்னா இராமசாமியின் வசனங்களும்  எனப் பெண்ணுடலை முன்வைத்து நடக்கும் பாலியல் வன்முறையைப் பேசின.ரோகிணியின் உச்சரிப்பில் அவையெல்லாம் வேறொரு வடிவங்கொண்டனவாய் எம் மனமும் உடலும் அதிரும் வண்ணமாயின.
sakthi coothu2
                       ‘ மகாராஜாவுக்கு மகளாய்ப் பிறந்து ஐந்து மகாராஜாக்களுக்கு மனைவியாக வாழ்ந்த திரௌபதிக்கே துகில் களையும் ஆணுலகம் பெண்களையும் முதியவர்களையும் அது மட்டுமின்றிக் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்வது கடினமா?’ பாலியல் வன்கொடுமை செய்வது கடினமா?’என்ற தொனிபட யுத்தத்துக்காளான நாடுகளிலும் நம் சமூகத்திலும் பெண்மீதான பாலியல் வன்முறைகளையும் திரௌபதியின் அந்தரித்த நிலையையும் கலையாக்கி அவர்கள் பெண்ணென்ற உடல் கொண்ட காரணத்தால் வன்முறைக்காளாவதை ஆவேசமும் கோபமும் கொண்ட பெண்சக்தியாய் அவ்வரங்கில் பறையும் உறுமியும் அதிர அதிர நிலம் நடுங்கக் கூத்தாடிய சக்தியின் சொரூபமாய் தன் உடலாலும் குரலாலும் ரோகிணி கூத்தாடினார்.
என் விழிகளைத் துடைக்கும் போது யாராவது கவனிக்கின்றார்களோ என்ற வெட்கத்தில் அக்கம்பக்கம் திரும்ப இயக்குனரான பிரசன்னா இராமசாமி தன் கண்களிலிருந்து நீர்வழிய அதைத் துடைத்தபடியிருந்ததையும் அவதானித்தேன். பெண்ணுடல் மீதான போரின் விளைவுகள் மற்றும் ஆணுலகின் அதிகாரத்தைக் கேள்வி கேட்ட கலையொன்றை உடல் நடுக்கத்துடனும் உள்ளச்சிலிர்ப்புடனும் அனுபவித்த அன்றைய அரங்காடல் கலையின் தரிசனத்தைத் தந்தது.
தர்மினி
நன்றி : ஆக்காட்டி7 யூலை-ஓகஸ்ட் 2015
 புகைப்படங்களுக்கான நன்றி வாசுகனுக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s