-புஷ்பராணி-

pushparani    

மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் படித்தபோது, என்னைப் பிரமிப்படைய வைத்த ,கணிகையர் குலத்துதித்த முத்துப்பழனி, அஞ்சுகம் போன்றோரின் அறிவாற்றலும்,கரைகடந்த கல்வித் திறனும் நம்பமுடியாத அளவுக்கு ,அந்த நாட்களிலேயே [17ம், 18ம் நூற்றாண்டில்] சிறந்தோங்கி இருந்திருக்கின்றது.
”சமய சாத்திரங்களின் பெயராலும், கடவுளின் பெயராலும் பகிரங்கமாக விபச்சாரம் செய்யும் பெண் சமூகம் ”புண்ணிய பூமி ”என்று போற்றப்படும் இந்தியாவில் தான் இருந்திருக்கின்றது. இதைப்போல உலகில் வேறெங்கும் காண முடியாது. ”என்று ஆ.ராமாமிர்தம்மாளின் ,”தாசிகள் மோசவலை அல்லது ,மதிபெற்ற மைனர் ” ‘என்ற நாவலின் முன்னுரையில் கூறுகின்றார். செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார்.
ஆரியப் பார்ப்பனர்களின் பெண் அடக்குமுறையின் வெளிப்பாடே இந்தத் தேவதாசிகள் முறையாகும்.தங்களின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் பெண்களைப் போகப் பொருளாகவும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதற்குக் கோவில் திருப்பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவதாசிகள் என்று இவர்கள் வித்தைகள் பல செய்தாலும் ,அந்தப் பெண்கள் தாசிகள், விபச்சாரிகள் என்றே பொதுவழக்கில் சொல்லப்பட்டார்கள்.
கோவில்களில் தொண்டு செய்யவென்று அழைக்கப்படும் இந்தப்பெண்கள் ,”கணிகையர் ”என்ற மாறாத பட்டத்துடன் , ஆண்டவனுக்கு என்று கூறிப் பூவும் ,பொட்டும் .தாலியும் சூட்டப்பட்டுப் பொதுவுடமையாக்கப்பட்டு ,பகிரங்கமாக நடன விருந்தளிப்பவராகவும்,பெரும் பண முதலைகளின் நிரந்தர வைப்பாட்டிகளாகவும் முத்திரை குத்தப்பட்டனர்.
அன்றைய பண்ணையார்கள் ,ஜமீன்தார்கள், வர்த்தகர்கள் என்று கொழுத்த பணம் படைத்தோர் இத்தகைய பெண்களைத் தமக்கே உரியவர்கள் ஆக்கி இன்பம் கொண்டாடியிருக்கின்றனர். ”இவர்தான் எனக்கு எல்லாமே” என்று உண்மையாக வாழ்ந்த பல கணிகையர் குலப் பெண்கள் ,அந்த ஆண்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் மூத்தாள் பிள்ளைகளாலேயே விரட்டியடிக்கப்பட்ட பரிதாப சம்பவங்களும் நடந்ததுண்டு.
இந்தக் கணிகையர் குலத்தில் பிறந்த ஆ.ராமாமிர்தம்மாள் மற்றும் செ.வெள்ளைத் துரைச்சி நாச்சியார் ஆகியோரோடு தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னன் பிரதாபசிம்மனின் அரசவையில் பெண் புலவராகவும் ,நடன மங்கையாகவும்,இசை ஞான மிக்கவராகவும் திகழ்ந்த முத்துப்பழனி [1730–1790] மற்றும் பலமொழித் தேர்ச்சியும் கல்வியாற்றலும் மிகுந்து விளங்கிய அஞ்சுகம் ஆகியோர் பற்றி நித்தியானந்தன் தரும் விபரங்கள் எல்லோரும் அறியாதவை.
அந்தப் பதினேழாம் ,பதினெட்டாம் நூற்றாண்டுகளிலேயே இந்தப் பெண்கள் எழுதியவை நம்புவதற்குக் கடினமானவையாகும். முத்துப்பழனி எழுதிய ,”ராதிகா சாந்தவனம் ”என்ற சிருங்கார ரசம் ததும்பும் நூலில் வரும் வரிகளைப் படித்து ஆச்சரியப்பட்டுப்போனேன். அந்தக் கவிதை வரிகள் இதோ…
             இதழ்களில் ஈரமிடு -அவளின் இதழ்களை
             உன் நாவின் முனையால்
              ஈரமிடு.
           அழுந்தக் கடித்து
           அவளை அச்சுறுத்தி விடாதே.
          அவளின் கன்னங்களில்
           மோஹனமாய் முத்தமிடு.
         உனது கூர்மையான நகங்களால் அவளைக் கீறி விடாதே…
என்று தொடர்கின்றது கவிதை .இக்கவிதை வரிகளைப் படித்துவிட்டுத் தெலுங்கின் முன்னோடி நாவலாசிரியரான கந்துகூரி வீரேசலிங்கம் மிகக் கடுமையாகக் கண்டித்து, ”இந்த முத்துப்பழனி ஒரு பரத்தை.விபச்சாரக் குலத்தில் பிறந்த ஒருவரிடமிருந்து, பாலியல் பற்றிய பச்சையான கவிதைகள் வருவதில் ஆச்சரியமொன்றுமில்லை.”என்று தன் எதிர்ப்பைக் கோபத்துடன் தெரிவித்தார்.

இன்றைய கவிதாயினிகளான குட்டி ரேவதி, லீனாமணிமேகலை, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகளைப் படித்துவிட்டு எமது ஆண் எழுத்தாள நண்பர்கள் பலர் கூறிக் கொண்டேயிருக்கும் வசைமொழிகள் வீரேசலிங்கத்தின் வசை மொழிகளுக்குக் கொஞ்சமும் குறைந்தவையல்ல. இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்னும்கூட ஆண் திமிர்த்தனம் மாற்றுக் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது.

coolitamil-15256
மலையக இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடிப் பெண் ஆளுமையான கணிகையர் குல வழிவந்த க. அஞ்சுகம் அம்மையாரே எம் மனதெங்கும் நிறைந்திருக்கின்றார். மலையக மக்கள் பட்ட நாம் கேள்வியுறாத பல துன்பங்களைத் துயர்மிகு வரலாறாக எம் முன்னே திறம்பட வைத்த நித்தியானந்தன் தன் நூலான கூலித் தமிழில் இந்தக் கணிகையர் குலத்தில் பிறந்த ஆற்றல்மிகு அறிவொளிப் பெண்களை எமக்கு அடையாளம் காட்டி நாம் அறியாத பல பக்கங்களுக்கு இட்டுச் செல்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குப் பொருள் தேடப் புலம் பெயர்ந்தோரில் கூலித் தொழிலாளர்கள் மட்டுமன்றி, தேவதாசிகளும் ,இசை நடனக் கலைஞர்களும் ,நிறைய இடம்பெற்றுள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களினதும், ஆதீன கர்த்தாக்களினதும் வேண்டுகோளுக்கமைய யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுமாகத் தேவதாசிகள்,”இறைப்பணி”புரிய வந்துள்ளனர்.
தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த க. அஞ்சுகம் யாழ்ப்பாணம் கைதடியில் வளர்ந்து,கொழும்பு சிவனாலயத்தில் ”பொட்டுக்கட்டிய’ தேவதாசியாகத் திகழ்ந்து, க.சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமானப் பெண்மணியாக வாழ்ந்து ,’உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு’என்னும் அரிய நூலினை ஆக்கி, தான் பிறந்த கணிகையர் குல சரித்திரத்தைப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியையாக நிமிர்ந்து நிற்கின்றார்.

இந்த நூல் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈழத்தின் மிகப்பெரிய தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றமை அஞ்சுகத்தின் மிகச் சிறந்த தமிழ்ப் புலமைக்குச் சாட்சியமாகும். ஒரு பெண் …அதுவும் தேவதாசியாகத் திகழ்ந்த ஒருவர் இத்தகைய பாராட்டுக்களைப் பெற்றது அந்தநாட்களில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இன்றைய நவீன காலத்தில்கூட இது குதிரைக் கொம்பான விடயமாகும். எம்மிடையே புகழ் பெற்ற இன்றைய ஆண் எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பெண்களின் திறமைகளை எப்படியெல்லாம் கொச்சைப் படுத்துகின்றனர் என்பதை நாளாந்தம் கவனித்துச் சலித்துப்போய் இருக்கின்றோமே!
தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தன் தாய் கா.கமலாம்பிகை அம்மையார் வேண்டுகோளுக்கமையத் தொகுத்துத் தந்திருக்கும் அஞ்சுகத்தின் ஆழ்ந்த புலமையும் ,தெளிந்த அறிவும் எவராலும் நினைத்தும் பார்க்க முடியாததாகும். பரவையார், பொன்னணையார் , மாணிக்கவல்லி, மானந்தை, மாணிக்க நாச்சியார்,ஞானவல்லி,அருணகிரியாரின் தாயார், சோமி,வெள்ளையம்மாள், கூத்தாள், மாதவி, சித்திராபதி, மணிமேகலை,போன்றோரின் வரலாற்றை எழுதி,அவர்களையும் யாரும் மறக்கமுடியாதபடி செய்துள்ளார். ‘ உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு’வரலாற்றை எழுதுவதற்கு அஞ்சுகம் அம்மையார் பயன்படுத்தியிருக்கும் இலக்கிய ,இதிகாச நூல்களின் பட்டியல் இன்னும் மலைப்பைத் தருகின்றன. சிவஞானதீபம்,சிவஞான சித்தியார்,சித்தாந்த சிகாமணி,இறையனாரகப்பொருள்,ஆசௌச் தீபிகை, திவருட்பா ஆகிய வைதீக சித்தாந்த நூல்களைத் திறம்படக் கையாண்டிருக்கின்றார். இதைவிட ,இவர் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப் புலமைக்குப் பெரும் எடுத்துக்காட்டாகும்.
சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், புராணங்கள், இராமாயண பாரத இதிகாசங்கள் போன்ற அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து ,உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டை அஞ்சுகம் படைத்துள்ளார் . இவ்வளவு அறிவாற்றலும் தெளிவும் கொண்ட இவரைப் படித்து ஆச்சரியப்படும் அதேவேளை, சில விடயங்களில் இவருடன் ஒத்துப் போக முடியவில்லை.
இந்து சனாதன மரபைப் பரிபூரணமாக நம்பி,அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் இக்கணிகையர் கதாசாரத் திரட்டிலே வெளிப்படுத்துகின்றார்.
கணவன்/நாயகன் இறந்ததும் அவனோடு ,அவனது பத்தினியும் உடன்கட்டை ஏறுவதே உத்தம பத்தினிக்கு அழகு என்றும்,அதனைக் கணிகையர் குலமும் கைக்கொள்ள வேண்டுமென்றும் அஞ்சுகம் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளதை அறிகின்றோம். இதைக் கைக்கொள்ளாத அதாவது உடன்கட்டை ஏறாத பெண்கள்,”சுவாலித்து எரிகின்ற கொடுநரகம் சென்று துன்பமடைவர் என்றும் …இத்தகைய தீயொழுக்கம் கொண்ட பெண்கள் [உடன் கட்டை ஏறாதோர்] நாய்,நரி,பேய்,புலி,கூகை,பன்றி,மலப்புழு ஆகிய இழிந்த பிறப்புக்களை எய்துவர் என்றும் நீதி நூல்கள் [?] கூறுவதாகக் கூறி,”உடன்கட்டை ஏறும் பத்தினிப் பெண்கள் கணவனோடு சுவர்க்கலோகப் பேறு பெறுவர் என்றும் ,கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தபோதிலும் ,அவனுடன் உடன்கட்டை ஏறினவள் கற்புடையவள் என்று கண்டு யமன் பின்னொதுங்கி ஓடி விடுவான் என்றும் அஞ்சுகம் தீர்க்கமாகச் சொல்லுகின்றார். அதுவும் மிக வலியுறுத்தி…இவ்வளவும் சொன்ன அஞ்சுகம், 25 வருடங்கள் அவரைச் செல்வச் செழிப்புடன் சீராட்டித் தன் அபிமான நாயகியாக்கி அவருடன் வாழ்ந்த வர்த்தகர் க.சின்னையாப்பிள்ளை இறந்தபோது உடன்கட்டை ஏறாதது ஏனோ?…இந்த மட்டுக்கு இவர் நிதானமாகி உடன்கட்டை ஏறாதது நல்லதுதான்.
17ம்  18ம் நூற்றாண்டுகளில் அதியற்புத கல்வியறிவு கண்டு வாழ்ந்த அஞ்சுகம் அம்மையார் போன்ற கணிகையர் குலப் பெண்கள் அப்படி இருந்தது பிரமிப்பான விடயமுமல்ல என்றும் இன்னோர் பக்கத்தில் உறைக்கின்றது. பாழாய்ப்போன இந்துப் பாரம்பரியத்தில் ,கல்வியைத் தொடரவும்,இசை,நடனம் போன்ற கலைகளைக் கற்கவும் சாதாரணக் குடும்பப் பெண்களுக்கு அனுமதி இல்லாதபோது ,கணிகையர் குலப் பெண்களுக்கு இந்த வாய்ப்புகள் அவர்களின் அபிமான நாயகர்களின் ஒத்துழைப்போடும் ,செல்வம் கொழிக்கும் உதவியோடும் மிகுந்திருந்தன.
ஆரியப் பார்ப்பனர்களின் பெண் ஒடுக்குமுறைதான் இதற்கான மூல காரணமாகும். கணிகையர் குலமாதர்கள் தங்களை உரிமையாக்கிக் கொண்ட பண்ணையார்கள், ஜமீந்தார்கள் வர்த்தகர்கள் ஆகியோரின் செல்லம் கொஞ்சும் போகப்பொருளாகவும், ஆடல் பாடல்களினால் அவர்களைப் பரவசப்படுத்துபவர்களாகவும் ,ஓய்வு நேரங்களில் அந்தச் சீமான்கள் கண்மூடி மயங்கிக் செவி வழி கேட்பதற்குப் பல்சுவை நூல்களைப் படித்தும் ,விளக்கியும் காட்டும் மேதைகளாகவும் .அந்த ஆண்களின் விருப்பங்களைப் பல வடிவங்களில் நிறைவேற்றும் கடப்பாடுடையவர்களாகவும் பரிணமித்திருக்கின்றனர். ஆண்களின் சல்லாபங்களுக்காகவே அவர்கள் எல்லாவற்றுக்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தாலி கட்டி மனைவியாக வரிக்கப்பட்டவள் எப்போதும் தன் காலடியிலேயே அடிமையாகக் கிடப்பாள்….அவளுக்குத் தன்னை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது என்ற துணிவும் இந்த ஆண்களுக்கு இருந்தது.இந்தக் குடும்பப் பெண்களைக் கல்வியில் சிறக்க வைத்தால் தம்மை மிஞ்சி விடுவார்கள் என்ற பயமும் இருந்ததால்தான் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள்.குடும்பப் பெண்களின் அழகும் பொருட்டாக மதிக்கப்பட்டதில்லை.
நான் எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது. அன்றைய கணிகையர் குலப் பெண்களில் எல்லோருமே பிரமிப்பூட்டும் அழகிகளாக இருந்ததில்லை.ஆனால் ,ஆண்களின் கண்களுக்கு அவர்கள் ஒப்புவமையற்ற மின்னும் நட்சத்திரங்கள் போலவும் அவர்களைத் தங்கள் உடமைகளாக மாற்றுவது பெரும் கனவாகவும் இருந்திருக்கின்றது.
இத்தகைய கணிகையர் குலப் பெண்களைத் தம் சொந்தமாக வரித்துக் கொண்ட செல்வந்த ஆண்கள் ,தம்மை விட்டு அவர்கள் வேறு ஆடவர்களை நாடாதிருக்க வேண்டிப் பெரும் செல்வத்தை இறைத்தும் ,அந்தப் பெண்களின் எண்ணங்களுக்கமைய இயைந்து குழைந்தும் விலகாமல் இருந்திருக்கின்றனர்.
மேட்டுக்குடி ஆண்களின் சிருங்கார சுகபோகங்களுக்கு விருந்தளிக்கப் பிறந்தவர்கள் என்று கணிக்கப்பட்ட கணிகையர் குலப்பெண்கள் கற்றுத் தேர்ந்து அதி மேதாவிகளாக மிளிர்ந்தது பெரிய அதிசயமுமில்லை. ஏனென்றால் அவர்கள் கற்பதற்கு எல்லா வழிகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் ஆண் வர்க்கத்தின் தேவைக்காக ….இதற்கு இறைப்பணி என்று  சாட்டு வேறு.
உலகெங்கும் இன்றுகூடப் பெண்கள் சுயமாக முன்னேறவும் கல்வியில் மேம்படவும் தடைகள் பெருகிக்கொண்டு தானிருக்கின்றது. இந்த இலட்சணத்தில் அன்றைய நாட்களில் சாதாரணப் பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா?

ஆசிரியர் :மு.நித்தியானந்தன்
கூலித்தமிழ்
வெளியீடு : க்ரியா
முதற்பதிப்பு :ஒக்ரோபர் 2014
பக்கங்கள் : 179
விலை : ரூ.400

(27 யூன் 2015 அன்று பாரிஸில் நடைபெற்ற மு.நித்தியானந்தன் அவர்களது கட்டுரைத்தொகுப்பான ‘கூலித்தமிழ்’ வெளியீட்டு நிகழ்வின் அறிமுகவுரையின் எழுத்துவடிவம்.)

நன்றி : ஆக்காட்டி  

Advertisements