பலவந்தமான திருமணம் : எனக்கு விருப்பமில்லாத ஓர் ஆணோடு வாழ என்னால் முடியாது!

voix de femmes
      விடுமுறைக்  காலங்களில்,பெண் பிள்ளைகளைத்   தங்கள்  நாட்டுக்குக்  கூட்டிப்போய்,வற்புறுத்தித் திருமணம் செய்து  வைத்தல்  இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் நாட்டைச்  சேர்ந்தவர்களிடம்  பரவலாக  நடைபெறுவதை   அடிக்கடி  கேள்விப்படுகின்றோம்.  Liberation என்ற பத்திரிகையில்வெளிவந்த Mariage  force : << Je ne peux  pas  vivre   avec  un   homme  que je n , aime  pas >>   
பலவந்தமான திருமணம் : எனக்கு  விருப்பமில்லாத  ஓர்  ஆணோடு  வாழ   என்னால்  முடியாது என்ற  தலைப்பில்  வந்த   கட்டுரையும்   இவற்றை  அப்படியே ஒத்ததாகவிருக்கின்றது. 17 யூலை 2015ல் வெளிவந்த இக்கட்டுரையைப்   படித்து   ஆச்சரியம்   ஏதும்  ஏற்படவில்லை. ஏனென்றால்     புலம் பெயர்ந்த  நாடுகளில் எம்மவர்  மத்தியில்   இத்தகைய   சம்பவங்கள்   நடந்து கொண்டேதானிருக்கின்றன.
            பலவந்தத்   திருமணங்களை   எதிர்த்துப்   போராடிவரும்   ‘பெண்களின்   குரல்’பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் Elsa MAUDET எழுதிய கட்டுரையின் சாராம்சத்துக்கு   வருவோம்.
 voix de femmes2
     வந்திருக்கும்  செய்திகளின்படி நீண்ட  விடுமுறைக் காலங்களான யூன்-யூலை -ஓகஸ்ட்  மாதங்களில் இப்படியான   சம்பவங்கள்  அதிகமும்  நடைபெறுகின்றன. விரைவில்   20  வயது  ஆகப்போகும்   அல்ஜீரியாவைச்   சேர்ந்த  சைமா  என்ற  இளம்  பெண்  ஒருவரிடமிருந்து ,அதிகாலை   ஒருமணி  அல்லது  இரண்டு  மணியளவில்  அவரின்  ‘Educatrice  க்கு  [குழந்தைகள், இளம் வயதினருக்கான  சமூக சேவை  உத்தியோகத்தர்]  ஒரு  செய்தி  வந்தது….ஜூன்  மாத  நடுவில்  அல்ஜீரிக்கு   அனுப்பப்பட்ட   இவர்  ,அவருடைய   கடவுச் சீட்டு  மாமன்  பொறுப்பில்  இருக்க  ,வெளியில்  போவதற்கு   அனுமதியின்றியும்   ஒருவித  வீட்டுக் காவலில்   இருந்திருக்கின்றார். சைமாவின்   ஒன்றுவிட்ட  சகோதரன், அல்லது   மைத்துனனுக்குத்  திருமணம்   செய்வதற்கான   ஏற்பாடுகள்   நடைபெறுவதாகவும்   அச்செய்தி கூறியது.
       இப்படி  ஏராளமான  பெண்கள்  அச்சுறப்படுத்தப்பட்டு  வற்புறுத்தல்  திருமணம்   செய்து  வைக்கப்படுகின்றனர்.  2003இல் இருந்து  70,000க்கு  மேற்பட்ட   இத்தகைய   திருமணங்கள்   நடந்ததாக   வெளிவந்தாலும்  சரியாகக்  கணிப்பிட்டுச்  சொல்ல  முடியாது.
             பெண்களுக்கான   அமைப்பொன்றைச்  சேர்ந்த  சாரா  ஜாமா  என்ற  அதிகாரியின்   கூற்றுப்படி, விடுமுறைக்  காலங்களிலேயே   இப்படியான   ஏமாற்றுத்  திருமணங்கள்   நடைபெறுகின்றன  என்பது  தெளிவாகத்  தெரிய  வருகின்றது.
       2013ம்   ஆண்டிலிருந்து  நடைமுறைக்கு   வந்திருக்கும்  சட்டத்தின்பிரகாரம்,  வெளிநாடுகளுக்குக்   கூட்டிப்போய்   தம் பெண்பிள்ளைகளுக்கு விருப்பமற்ற   திருமணம்  செய்து  வைப்போருக்கு  மூன்று  வருடங்கள்   சிறைத்தண்டனையும்   45 000 யூரோ  அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.
           சைமாவின்   சிறிய  சகோதர ,சகோதரிகளைக்  கவனிப்பதற்காக நான்கு   வருடங்களுக்குமுன்   சைமா   தாயினால்   பிரான்சுக்கு   வரவழைக்கப் பட்டிருந்தார். சைமா  படிக்கப்போய்   வீட்டுக்குத்  திரும்புவதற்கு  மட்டுமே  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஆனாலும்  ,படிக்கும்  காலத்தில் ,ஆண்கள் உட்படப்  பலரோடும்  சைமா  பழகுவதைப்  பொறுக்காத  தாய் ,சைமாவுக்குத்  திருமணம்  செய்து  வைக்க  முடிவு  எடுத்து  அவரின்  படிப்பையும்  குழப்பி  ,அல்ஜீரியாவில்  காத்திருக்கும்   உறவுப் பையனுக்கு   மணம்  முடித்து  வைப்பதற்கு  அங்கே  அனுப்பிவிட்டார்.
          சமூக  நல  அமைப்பினரின்  உதவியால்  இப்போது  சைமா  பிரான்சுக்கு  வந்துவிட்டார். இப்போதும்   அவரின்  மாமா   அடிக்கடி  கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். மைத்துனர்  பரிசுப்பொருட்கள்   அனுப்புகின்றார். சினம்  கொண்ட  சைமாவின்  தாய் ,சைமாவுக்குப்  பதிலாக  அவருடைய  தங்கைக்குத்   திருமணம்  செய்து  வைக்கப் போவதாக  மிரட்டுகின்றார்.
             இவ்வளவையும்  கடந்த  சைமா  ,இன்று  வாழ்க்கையில்  பலவற்றை  இழந்ததாகவே  கருதுகின்றார்.  இப்படியான  பெண்களின்   கல்வியும் கெட்டு  ,அவர்களின்  மென்மையான   காதல்  உணர்வுகளும்  நொருக்கப்பட்டு  விருப்பற்ற  உறவுக்குள்   பெற்றோரால்   தள்ளப் படுகின்றனர்.  கலாசாரம் என்றபெயரால்   துவேஷமும்  இங்கே  ஓங்கி  வளர்க்கப்படுகின்றது  என்கின்றார்  சமூக  நல  அமைப்பாளர்   சாரா  ஜாமா.
                      செனகலைச்  சேர்ந்த   மரியம்  என்ற  சிறுமிக்கு   13 வயதில்  பிரான்சிலிருக்கும்  ஐம்பதோ அறுபதோ வயதுடைய  ஆணுக்கு   நாலாவது  மனைவியாக  மரியத்தின்  சிறிய தாயால்   நிச்சயிக்கப் படுகின்றது. இதில்  மரியத்தின்   விருப்பம்   யாருக்குமே   ஒரு  பொருட்டல்ல. ’20..21 வயது  தாண்டினால்  ,ஆண்கள்  திரும்பியும்  பார்க்க  மாட்டார்கள் …இதுதான்  சரியான  வயது’  என்று  சொல்லி  மரியத்தை   உறவினர்கள்   வற்புறுத்துகின்றனர்.ஒரு  மாமனின்   ஏற்பாட்டால்   பிரான்சுக்கு  15 வயதில்  வந்திருக்கும்   மரியம்  இப்போது  படிக்கப் போகின்றார்;  இருக்க  விடுதி  கிடைத்துள்ளது.
              மரியம்  சொல்கின்றார்,”திருமணம்  பற்றி  நான்  எதுவும்  அறிந்திருக்கவில்லை. எனது  பக்கத்து  வீட்டுப்பெண்  ஒருவரின்  எச்சரிக்கையால்  ,போலீசாரோடு  தொடர்பு  கொள்ள  முடிந்தது. எனக்கு  விருப்பமில்லாத   ஆணை   என்னால்  ஏற்றுக் கொள்ளமுடியாது. என்  வாழ்க்கையையும், விருப்பத்தையும் வேறு  யாரும்  முடிவெடுக்க    ஒரு  நாளும்  அனுமதிக்கப்  போவதில்லை” மரியத்தின்  குரல்  திடமாக  ஓங்கி  ஒலிக்கின்றது.
               சமீராவுக்கு   இப்போது  21 வயது. இவர்  14  வயதாக  இருக்கும்போதே   திருமணம்  பற்றிய  பேச்சுக்கள்   இவர்  காதில் விழுந்தன. 18  வயதாயிருக்கும்போது,  இவரின்  சகோதரியின்  கணவனின்   சகோதரனைச்  சந்தித்துக்   காதலில்  விழுந்தார்.இதனால்   இவரின்  தாய்   தன்  தாயின்  கைத்தடி கொண்டு  மரியத்தை   அடித்தார். பின்  எந்த  ஆடம்பரமுமின்றி   இவரின்  திருமணம்  நடந்தேறியது..அப்போது   ,திருமணத்தின்  மூலம்  குழந்தைகள்  பெறலாம்  என்ற  ஆர்வம்  இவரிடம்  மிகுந்திருந்தது.   ஆனால்  ,எல்லாமே  இப்போது  முடிந்துவிட்டது.  இவர்  இப்போது  கணவனின்  வன்முறை  ,அடக்குமுறை  இவற்றிலிருந்து   விடுதலை  பெறவேண்டி  விவாகரத்துக் கோரி  நிற்கின்றார்.
 Mariage-force
            சமீரா  ,மரியம்  இருவருமே   தாங்கள்  பட்ட  துன்பங்களிலிருந்து   வெளிவந்துவிட்டனர்.  அவர்கள்  சந்தித்த  துன்பங்கள்  இன்று  ஆண்களை  வெறுக்கும்  நிலைக்குத்  தள்ளிவிட்டது. திருப்தி  கிடைக்காத   அவர்களின்  வாழ்வின்  சூழல்  குழந்தைகள்  பற்றி  அவர்கள்  கொண்டிருந்த  கனவுகளையும்   கனவாக்கியே   விட்டது.தனிமையே   இவர்களுக்கு   இப்போது  உறவாகி விட்டது.
         இப்படியான   பலவந்தத்  திருமணங்களைத் தடுத்து  நிறுத்துவதைக்  கருத்தில் கொண்டே  ஒரு  மையம்  இயங்குகின்றது.
அதன்  தொலை பேசி  இலக்கம் : 01. 30. 31. 05. 05
இந்த  மையம்  பெண்களுக்கு   உதவுவதற்கான  குரலாகவே இயங்குகின்றது.  பல  பெண்  பிள்ளைகள்  இங்கு  தொடர்பு கொண்டதன் மூலம் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர்.
  VOIX DE FEMMES  என்ற அமைப்புத் தரும் இச்செய்திகள் சில உதாரணங்கள் மட்டுமே.புலம்பெயர்ந்த எம்மவர் மத்தியிலும் இத்தகைய வெறுக்கத் தக்க விடயங்கள் இரகசியமாகவும் அமைதியாகவும் நடைபெறுகின்றன.பொதுவாக நோக்கும் போது பெண்பிள்ளைகளுக்கான திருமணம் என்பது  இனம், கலாசாரம், பண்பாடு, மதம் போன்ற காரணிகளைக் காரணங்காட்டி பெற்றவர்களால் வலிந்து திணிக்கப்படுகின்றன.’ஆக்காட்டி’ இதழில் புஷ்பராணி அவர்களால் எழுதப்பட்ட முள்வேலி என்ற கட்டுரை ஏற்கனவே இவ்விடயத்தைப் பேசியுள்ளது என்பதையும் இதனோடு இணைத்து நாம் படிக்கலாம்.
‘முள்வேலி’ கட்டுரைக்கான இணைப்பு:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s