என்னிடமிருந்து இரவையும் சொற்களையும்

பிரித்துவிடுங்கள்

கனவுகளை நடித்துப்பார்க்கும் ஆசை

இருளின் அரங்கில் அசைகின்றது.

—————————————–

கவிதையொன்றை எழுதிப்பார்த்தேன்

மூன்று வரிகளுடன் அது முடிந்து போனது

உம்மை நோக்கி நான் பேசும் வார்த்தைகள்

தெரிந்தெடுக்கப்பட்டு
நாகரிகம் அளந்து
அந்நியன் ஒருத்தனுடன் கண்ணியமாய் உரையாடும்
பழக்கமாகிப்போனது
வெளியில் கேட்காத சொற்களைக் காகிதத்திலோ
கணினியிலோ கடத்திவிடுவதாக முடிவெடுத்து
உண்மையாய் ஒரு வாழ்த்தைச் சொல்வதென்று கவிதை
எனும் தலைப்பிட்டுக் கனிவாய் சிலதைச் சொல்ல நினைத்தால்….
உமக்கொரு அஞ்சல் என்றதும்
‘இரகசியக் கதவொன்றை கொண்டிருந்தேன்
அதொன்று இருப்பதாக எவருக்கும் நான் சொன்னதில்லை
கனவுகளின் போறணையை அது காவல் காத்தது….’
விரல்களும் மனமும் ரைப்செய்து கொண்டிருந்தன
கதவுடைத்த வீராதிவீரனென்று இதென்ன கதையென்று இகழ்ந்து அழித்தது என் கீபோர்ட்.
 ——————————————–
 இரவோடு கதைத்துக் கொண்டிருக்கிறேன்
அன்றொலித்த கனவின் குரலாய் அது முணுமுணுக்கிறது
மணிக்கூடு பார்த்துப் பார்த்து முடிந்து கொண்டிருக்கிறது இரவு.
சன்னல் இடுக்கில் கசிந்தழுதது என்னோடு கோபித்த நட்சத்திரம்.
தன்னைப் பருகச் சொல்லும் இரவைக் குடித்துவிட்டு
உறங்கி எழுவதற்குள்
ஒரு காலை விடிந்திடுமோ எனப் பயமாயிருக்கிறது.
————————————————————
தன்னோடு பேசச் சொல்கிறது இரவு
இரகசியங்களை எழுதி வைப்பது அதற்குப் பொறுக்காது.
ஆனால் ஒவ்வொரு சொல்லும் முகம் பட்டுத் தெறித்து
என்னோடு சண்டை பிடித்துத் தன்னை எழுதச் சொல்கிறது.
நம் வெட்கத்திற்கான விசயங்களை விட்டுவிட்டு
நாகரிகமாக நாலு வார்த்தை எழுதச் சொல்லப் போகிறது நாளை ஒலிக்கும் தொலைபேசி மணி.
——————————————————

 சாமம் தாண்டிய நேரம்

சில வரிகளை எழுதவெண்ணிக் கரும் பேனா தேடி

கசங்கலில்லாக் கடுதாசி எடுத்து

தலையணையை முதுகிட்டு

கவிதை போல மனசு கனக்குதெனக் கை வழி இறக்க நினைத்தால்

அன்பு அப்பிய முகமெனவொன்று குலைத்தது சொற்களையெல்லாம்.

சாகஸம்-நடிப்பு மெதுமெதுவாய் உதிர உதிர

அன்பை அன்பெனச்சொல்லிட முடிவு!

அது தானிப்போது அலை தள்ளிவி்ட்ட  துணிக்கையாய்

உம்முன் உதிர்கிறது.

தர்மினி

Advertisements