பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை” அழிய வேண்டும்

 

பெண் ஏன் அடிமையானாள்? (பத்தாம் அத்தியாயம்)

தந்தை பெரியார்

Sep15

 

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும்,முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக்கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள்.ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல்,மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது  நமது அபிப்பிராயம். எதுபோலென்றால் திராவிட மக்கள் விடுதலைக்குப் பார்ப்பனரும்,பார்ப்பனர் தான் இந்நாட்டுப் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும்  அந்நிய நாட்டினர்களும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக எப்படி நாளுக்கு நாள் திராவிட மக்களுக்கு அடிமைத்தனமும்,என்றும் விடுதலை பெறமுடியாதபடி கட்டுப்பாடுகளின் பலமும் ஏற்பட்டு வருகிறதோ அது போலவும்,சமூக சீர்திருத்தம் சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் ஆரிய புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து  வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும்,உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும்,மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.

அன்றியும்,ஆண்கள்,பெண்கள் விடுதலைக்குப் பாடுபாடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன.பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும்,பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு,கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவதுவெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.அப்படி ஒருக்கால்  ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும் கூட  ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது.அந்த “ஆண்மை” உலகத்தில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால்’ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.”ஆண்மை”யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்.சுதந்திரம்,வீரம் முதலிய குணங்களை உலகத்தில் “ஆண்மை”க்குத் தான் அவைகள் உண்டென்றுஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றியும்,இந்து மதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ,சுதந்திரமோ எத்துறையிலும்அளிக்கப்படவே  இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணர வேண்டும்.

பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவதென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்து விட்டார் என்பது ஆகச் சொல்கின்றதுடன்,அதனாலேயே பெண்கள் எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக் கூடாது என்றும்,குழந்தைப் பருவத்தில் தகப்பனுக்குக் கீழும்,வயோதிகப் பருவத்தில்(தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. “பெண்கள், ஆண்களும்-மறைவான இடமும்-இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்க முடியும்” என்று அருந்ததியும்,துரோபதையும் சொல்லி,தெய்வீகத் தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.
இன்னும் பலவிதமாகவும், மத சாஸ்திர ஆதாரங்களில் இருக்கின்றன.இவற்றின் கருத்து ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டுமென்பதல்லாமல் வேறில்லை.

எனவே,பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலே தான் ஏற்பட்டது என்பதும்,அதுவும்’ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும்,ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது.பொதுமக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால்,எப்படிக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ,அது போலவே,பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெற வேண்டுமானால்,’ஆண்மையும், பெண்மையும்”கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.
பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள்.ஏனெனில்,இன்னமும் பெண்களுக்கு,தாங்கள் ஆண்களைப் போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை.தங்களுடைய இயற்கை அமைப்பின் தன்மையே தங்களை ஆண் மக்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.எப்படியெனில்,பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்.ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள்.அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால்,பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால்,தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழமுடியாது என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள்.ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்லும் இடமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

அன்றியும்,பிள்ளை பெறும் தொல்லையானால் தங்களுக்கும் பிறர் உதவி வேண்டியிருப்பதால்,அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகிவிடுகிறது.எனவே,உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை வைத்தக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்து விட முடியாது என்றே சொல்லுவோம்.இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாததனால்,நாம் இப்படிச் சொல்லுவதைப் பெரிதும் முட்டாள்தனம் என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள். இருந்தாலும்,இந்த மார்க்கத்தை தவிர,-அதாவது,பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர-வேறு எந்த வகைமையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது.சிலர் இதை இயற்கைக்கு விரோதமென்று சொல்ல வரலாம்.உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள் ஜீவப் பிராணிகள் முதலியவைகள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மனிதர்கள் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றார்கள்.அப்படியிருக்க இந்த விஷயத்திலும் நன்மையை உத்தேசித்து இயற்கைக்கு விரோதமாய் நடந்து கொள்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர,பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், ‘உலகம் விருத்தியாகாது,மானிடவர்க்கம் விருத்தியாகாது” என்ற தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்?மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடும்?அல்லது இந்த’தர்ம நியாயம்” அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால் பேசுபவர்களுக்குத் தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை.இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மை தான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை.

பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை.அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது.இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை . ஆனால்,நாம் இச்சமயத்தில் அதைப்பற்றிச் சிறிதம் கவலை கொள்ளவில்லை.பெண்களைப் பற்றியே கவலை கொண்டு சொல்லுகின்றோம்.

தற்கால நிலையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேற விதமான முயற்சி செய்தாலும் சிறித சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம்.ஆனால்,இந்தக் காரியத்தில் அதாவது,பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும்,நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு  இஷ்டமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.எப்படியெனில்,ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கியமாகவும்,சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும்,பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும்,முறைகளையும் விரிக்கில் பெருகும் என்று இத்துடன் முடித்துக்கொள்கின்றோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s