aann-koni.JPG2_-225x300

த.உருத்திராவின் ‘ஆண்கோணி’ கவிதைத்தொகுப்பு படிக்கக்கிடைத்தது. மட்டக்களப்பைச் சேர்ந்த இக்கவிஞர் தன் தொகுப்புப் பற்றி எழுதிய குறிப்பில் -கவிதைகள் வெட்டும் அச்சுகள் என்னிடம் இருக்கவுமில்லை.-தொகுப்புக்காகக் கவிதைகளை எழுதாமல் எழுத வந்து 24 வருடங்களில் வெளியாகும் முதற் தொகுப்பு இது என்கிறார்.பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் வாழ்வின் துயரங்கள் தொனிக்க உறவுகளின் நெருக்கத்தையும் விலகலையும் அதிகமாக எழுதியிருக்கும் இத்தொகுப்பில் எளிய சொற்களைக் கையாளும் அதே நேரம் புதிய வார்த்தைகளையும் கவிதைகளுக்குள் இயல்பாக எடுத்தாண்டு விடுகிறார்.தொகுப்பிலிருந்து மெல்லிய விசும்பலைப் போன்ற கவிதையொன்று…
காதலின் பரப்பளவு
————————————
முதலைகள் கரையொதுங்கும் பொழுதுகளிலும்
நீ மட்டும்
ஆற்றங்கரை மணற்திட்டில்
இணைபிரியாத்தோழர்களோடு-
பியர் போத்தலால் நிரம்புகிறாய்.

கண் அயர்கையிலும்
முன்வாசல் விளக்கும் கைத்திறப்பும்
பற்றியே
கனவுகள் வரும், நீ திரும்பும் வரை

ஒற்றை யன்னல் சமையலறையில்
காலையுணவில் உனக்கு விருப்பமானது
எதுவாயிருக்கும் என்பது பற்றியே
பொழுதுகள் தொடங்கும்.

ஆயினும்
நீ, களவாடுவதும்
நான், கண்டுபிடிப்பதுமான
விளையாட்டில்
புரிவதேயில்லை
நம் இருவருக்குமான எல்லைகள்

எல்லாப் பகல் பொழுதிலும்
உன் பின்னிருக்கையில் அமர்ந்து
தோள் பற்றி உரச
புரிகின்றது:
நாமிருவரும் யோசிக்கத்தவறிய
‘எனது விருப்பங்கள்’ பற்றி.

Advertisements