ஒரு நள்ளிரவில் லண்டனின் தெருவோரமாகக் குப்பைத் தொட்டிக்கு முன் நண்பர்கள் சிலருடன் நல்ல சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்பட்ட ‘லண்டன்காரர்’ – விமர்சனம்- கலந்துரையாடலையிட்டு 10.10.2015 சனிக்கிழமை லண்டனில் …

london

‘அம்மா’ சஞ்சிகையை 1997ல் வாசித்த போது சேனன் யார்? என்ற கேள்வியைக் கேட்டேன்.சேனனது எழுத்துகளின் நக்கல், நளினம், உள்ளடக்கம், எழுத்தின் தனித்துவ நடை என்பனவற்றை அவரது சிறுகதைகளில்  படித்திருந்த எனக்கு பிறகு அவர் இலக்கியத்தை விட்டு வேறு களமிறங்கியது சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. அவரது சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் இன்னும் எழுதவேண்டும் என வாய்ப்புக்கிடைக்கும் போது சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் பல வருடங்களின் பின் ஒரு குறுநாவலையே நம்முன் வைத்துள்ளார். இது குறுநாவலானபடியால் பின்னால் பழைய சிறுகதைகளைத் தொகுத்தால் நல்லதெனச் சொன்ன போதும் அவை இக்கதையின் மனநிலையைக் குழப்பிவிடக்கூடும் என்ற தொனியில் உறுதியாக லண்டன்காரரை மட்டுமே குறுநாவலாக வெளியிட விரும்பினார்.
லண்டன்காரர் கதையாக எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலிருக்கலாம். 98 பக்கங்களாலான இக்குறுநாவல் சேனனால் சிந்திக்கப்பட்டது அதற்கும் கூடுதலான காலமாயிருக்கக்கூடும். இக்குறுநாவலை எழுதியபின் தன் நட்புகளிடம் கொடுத்துப் படிக்கச் செய்து திருத்தங்கள் செய்து திரும்பத்திரும்பச் செம்மையாக்குதலைச் செய்துகொண்டிருந்தார் சேனன். ஒரு அத்தியாயத்தை ஒரு நாளில் எழுதியதாகவும் பத்து நாட்களில் ஒரு புத்தகம் எழுதி முடித்ததாகவும் எழுத்தாளர்கள் சொல்வதை அறிந்த எனக்கு இவர் பெரும் சோம்பேறியாகவே தெரிந்தார். 28 /08/ 2014 அச்சுக்குத் தயாரென பேஸ்புக்கில் இவ்வாறு அறிவிக்கின்றார்.
‘நான்கு (3) வருடமாக எழுதிவந்த குறு நாவல் இன்று முடிந்து விட்டது. என்னே நிம்மதி. என்னே நிம்மதி. எனது வேதனையை பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
விரைவில் வெளிவந்துவிடும் என நம்புகிறேன். ( இனி பதிப்பகத்தாரின் பொறுப்பு)’-
ஆனால், ஒரு வருடம் தாண்டியபின் தான் அது புத்தகமானது.தேவையற்ற வழவழப்புகள் சளசளப்புகளில்லாமல் பகிடியும் கதையும் காரணங்களுமெனக் குறுநாவலைக் கொண்டு போகும் எழுத்து. சொற்களிலும் வசனங்களிலும் அர்த்தமில்லாமல் போகாது என்ற நம்பிக்கையில் இதைப் படிக்கலாம்.

 

londanarஇக்குறுநாவலை அச்சிற்கு முன் நண்பர் சேனன் கோப்பாக அனுப்பி வைத்த நேரம் வாசித்துக் கொண்டு போகும் போதே விமர்சனம் போல கேள்விகளை எழுதியனுப்ப நினைத்தால் எழுத்தாளரே அதையெல்லாம் கடைசியாகக் கேட்டிருக்கிறார். பிறகென்ன?

‘லண்டனர்’ தலைப்பு ‘டப்ளினர்’ என்ற ஜேம்ஸ் ஜொய்ஸ் எழுதிய தலைப்பைக் கொப்பியடிச்சு வைத்ததாக முதற்பக்கத்திலேயே அடிக்குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி அத்தியாயமான விமர்சனம் தன் மீதான சுயவிமர்சனமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுநாவலை வாசிப்பவர்கள் முடித்ததும் என்னென்ன கேள்விகளை முன்வைப்பர் என்ற முன்னனுமானத்துடன் நாவலாசிரியரே தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் எழுதியது, ஆவேசத்துடன் இதைப்படித்து முடித்துக் கேள்விகளைக் கேட்க நினைத்த வாசகருக்குப் படுதோல்வி. ஆனாலும் டாக்டர் தெய்வம் வைக்காத விமர்சனங்கள் வாசகருக்குச் சிக்குப்படவும் இன்னும் இடமுண்டு.

லண்டன்காரரில் குறைகள் கதைக்கச் சிலவுண்டு எனினும் அதற்குள் இருக்கும் கதையை வாழ்வைப் பாருங்கள் என்கிறார் சேனன்.
தர்மினி
Advertisements