– புஷ்பராணி-

mehar
‘மெஹர்’ என்ற டெலிபிலிம் மனச்சாட்சிகளின் உருவங்களாக மனிதர்களைத் திரையில் காட்டியது. பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதை,  இயக்குனர் தாமிராவின் கலைத்துவம் மிக்க காட்சிகளில், திரைக்கதை வசனங்களில் காட்சிகளாக மனதில் படிந்து சீதனம் வழங்க முடியாமல் துயருறும் இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்வின் ஒரு உதாரணமாக என்னை அலைக்கழித்தது.
 
பணப் பற்றாக்குறையால்  மகளின்  திருமணத்தை ஒப்பேற்ற  முடியாமல்  ,ஒரு   தாய்  படும்   உச்சகட்ட   மனவலியை    சல்மா தன்  நடிப்பின்  மூலம்  எம்மைக்   கலங்க  வைத்து  ,”எனக்கு   நடிக்கவும்   வரும்’ என்று   அந்தத்   தாயாகவே   எம்  கண்களுக்குள்  நிறைந்து   நிற்கின்றார். ‘மெஹர்’ என்ற   பெயரைக்   கொண்ட   இந்த  டெலி பிலிம் பல  சங்கதிகளை   எம்  நினைவுக்குக்  கொண்டு வந்து   எங்கோ  இழுத்துச்  செல்கின்றது.
 உடன்  பிறந்த   சகோதரிகளுக்காகத்   தமது   சகல   இன்பங்களையும்  பறிகொடுத்து….விரக்தி  கொண்டலையும்   பல   அண்ணன் தம்பிகளை   நினைவுறுத்தும்   ,துயர்மிகு   பாத்திரத்தைத்   தனது   அதியற்புத   நடிப்பால்    எம்  முன்னே   நிறுத்துகின்றார்   மகன்   பாத்திரத்தில்   நடித்தவர்.  சீதனக்  கொடுமையால்   பெண்கள்  மட்டுமல்ல  ,அவர்களோடு   கூடப்   பிறந்த  ஆண்களும்   நிறையவே   பாதிக்கப் படுகின்றார்கள்  என்பதும்   எம்  சமுதாயத்தின்  சாபக் கேடுகளில்  ஒன்றாகும்.  காலத்துக்குக்   காலம்   இந்நிலைமை   மோசமாக  வளர்ந்துகொண்டே  போவது   பெருங் கொடுமை.
திருமணம்  ஆகாததால்   வீட்டுக்குள்ளேயே    முடங்கிச்  சிறையிருக்கும்  முஸ்லீம்  சமூகத்தில்  பிறந்த   ஒரு  பெண்   21 வயதுக்குள்ளேயே   மனமொடிந்து   போகின்றார்.  அவருக்கு   இப்போதுள்ள   பெரிய   ஆசையே   வெளியே  சென்று   வர வேண்டும்  என்பதே.அவரது   விரக்தி  நிலை  கண்டு   வேதனை  வந்தாலும்   ,இன்னோர்  பக்கம்   எரிச்சலும்   வருகின்றது.அந்த  இளம்   பெண்ணுக்கு முன்னாலேயே    தாய்   எந்த  நேரமும்   கலங்கி  அழுவதும் ,சோகமாக    உட்கார்ந்திருப்பதும்   ஒரு வகையில்  ,அந்த   மகளின்   ஆசைகளை   ..மனக்கவலைகளைத்  தூண்டும்   கருவியாகவே   தெரிகின்றது…
எப்படியாவது  பணத்தைப்  புரட்டி   ,மகளின்  திருமணத்தை   நல்ல  இடத்தில்  செய்து  வைக்க  வேண்டுமென்று  மகனை   எந்த  நேரமும்   நிர்ப்பந்திப்பதால்  ,அந்த  நல்ல  மகன்   எப்படித்  திசைமாறித்  தவறான  வழிக்குள்  வீழ்கின்றான்  என்பதை    இத்திரைக் கதை  மூலம் அழுத்தமாக   மனதில்  பதிய வைத்துப்  பெரும்  படிப்பினை  ஒன்றைத்  தருகின்றார்கள்.இப்படத்தில்  வரும்  வசனங்கள்  பல   பட்டென்று  மனதில்  பதிகின்றன. ‘பணம்  இருக்கிறவங்க  மனசு   இரும்புப் பூட்டாலே   பூட்டப்பட்டிருக்கு’  ,  ‘உலகத்திலேயே   கஷ்டமான   விஷயம்   பணமில்லாதவன்   பணம்  புரட்டப்  புறப்படுவது ‘ , ‘மார்க்கம்  சரியாக  இருக்க  வேண்டுமென்றால்   எல்லோரும்   அதைச்  சரியாகக்  கடைப்பிடிக்க வேண்டும்’  இப்படி  உதாரணத்துக்குச்  சில.  
 வட்டிக்குப்  பணம்  வாங்குதல்   மார்க்கத்துக்கு   எதிரானது  என்று  தெரிந்தும்   ரஷீது  ,எப்படியும்   பணம்  புரட்டி  அக்காவின்  திருமணத்தை   நடத்தி  ,அவளுக்கு  விடுதலை  அளிக்க  வேண்டும்  என்பதற்காக   ,வேறு  வழியின்றி  வட்டிக்குப்  பணம்  தேடி  அலைவது  பெரும்  துன்பத்தைத்  தருகின்றது.  
 
    இதைக்   கண்ணுற்றபோது  ,புகலிடத்தில்   வாழும்   எம் இளைஞர்கள்  பலரின்   துன்பங்கள்   என்  கண்  முன்னே  விரிகின்றன. இங்கு  வசிக்கும்   இளைஞர்கள்   எத்தகைய   இடர்களோடு   …ஓர்     அறைக்குள்   பலராக   வாடகையைப்   பகிர்வதற்காக   மூச்சு  முட்ட   வாழ்ந்து  …கடினமான  வேலைகளைத்   தூக்கம்  துறந்து   அளவுக்கு  அதிகமான  நேரங்கள் வேலை செய்து   ஊருக்குப்   பணம் அனுப்புகின்றார்கள்   என்பதை   அவர்களின்   பெற்றோர்களும்  ,உறவினர்களும்   சிறிதளவேனும்   உணர   மறுக்கின்றார்கள்.
நோட்டுக்களை   அச்சடிக்கும்   இயந்திரங்களாக   மகன்களை எண்ணி   ஈவு  இரக்கம்  ஏதுமின்றித்  தாமும்  ஆடம்பரமாகக்  குதிபோட்டுத்   தம்   பெண்பிள்ளைகளுக்கும்   காசைத்   தண்ணீராக்கி   ,மணவிழா   நடத்தி  உல்லாசம்  கொள்கின்றனர்,
எனக்குத்   தெரிந்த   உறவினர்  பையன்  ஒருவன்  தூக்கம்   குறைத்து  ,இரண்டு   இடங்களில்  வேலை  செய்து  பெற்றோருக்குப்   பணம்   அனுப்ப….அங்கு  அவரின்   சகோதரிகளின்   திருமணம்   நில  பாவாடை  விரித்துச்   சில்லறைகள்  தூவி   அட்டகாசமாக   நடந்திருக்கின்றது.   தன்   கடும்  உழைப்பு,   சில்லறைகளாக  வீசியெறியப்படும்   காட்சியை  வீடியோவில்  பார்த்த   அந்தச்  சகோதரன்   மனம்  உடைந்து  போய்விட்டார்.  அவர் அளவுக்குமீறித்   தன்னை  வருத்தி  வேலை  செய்ததால்   கைகால்கள்  இழுத்து,  நரம்புகள்  பாதிக்கப்பட்டு  முடமாக   இன்று  தன்  மனைவி  ,மக்களுக்குப்   பாரமாக  இருக்கின்றார்.   இப்படி   நிறையக்   கதைகள்   சொல்லிக்கொண்டே   போகலாம். 
பிள்ளைகளுக்குத்   தம்  துன்பங்களைத்    தினமும்   சொல்லி,அவர்களைத்  தப்பான   பாதைக்குத்   திருப்புவதை   அவர்களே   அறிவதில்லை. இப்படத்தில்   மட்டுமின்றி   ,நேரடியாகவும்   கேட்டு   அறிந்திருக்கின்றேன்.
 தன்மீது    அளவுகடந்த   நம்பிக்கை   வைத்திருக்கும்   முதலாளியின்   பணத்திலிருந்து ,   தன்  சகோதரியின்  திருமணத்துக்காகப்   பணத்தைத்   திருடியபின்   ஒவ்வொரு  கணமும்   அந்த   இளைஞன்  படும்  அவஸ்தையும்  …மனப்பதட்டமும்   இயல்பாகக்   காட்சிப்படுத்தப்   பட்டிருக்கின்றது.
மகன்   திருடி   மறைத்து  வைத்த  பணத்தைக்   கண்டுபிடித்த   தாய்   ,அதை  எடுத்துக்கொண்டு   நேரே   போலிஸ்  நிலையம்    சென்று  ஒப்படைப்பது   நடைமுறைக்குச்   சரிவருமா?…இது   கொஞ்சம்  இடிக்கவே  செய்கின்றது.  படத்தில்  வரும் போலீஸ்காரர்களும்  ,முதலாளியும்   வாலிபனை    மன்னித்து   வெளியே  விடுவதுபோல்   உண்மையிலே  நடக்குமா?…என்னென்னவோவெல்லாம்    நடந்திருக்குமே…..நான் அந்தத்  தாயின்  இடத்தில்  இருந்திருந்தால்   ,பணத்தை  மகனின்  கையில்  திணித்து   ,’எடுத்த  இடத்தில்   மரியாதையாக   வைத்துவிடு ‘என்று  கடுமையாகக்   கண்டித்து அனுப்பியிருப்பேன்.  வெளியில்  தெரிந்தால்   குடும்பமானம்   சந்தி  சிரிக்கும்  என்று   அஞ்சுபவர்   என்ன   துணிவில்   …எந்த   நம்பிக்கையில்   நேரே   பொலிஸ்நிலையம்   செல்வார்? …
இதில்  போலிஸ்காரராக   வரும்  பவா செல்லத்துரையின்  நடிப்பும்  மனதில்  இடம் பிடிக்கின்றது.  நல்லதொரு  போலீஸ்காரர்   இப்படித்தான்  இருக்கவேண்டும்  என்பதை  முன்னுதாரணம்  காட்டும்  நல்லதொரு   பாத்திரப்படைப்பு.
  முஸ்லீம்களும்   ,இந்துக்களும்  ஒரு  தாய்  பிள்ளைகள்  போல்   ஒன்றுக்குள்  ஒன்றாக   …உறவுமுறை   சொல்லி  அன்புடன்   வாழ்ந்தார்கள்   என்பதை  இப்படத்தில்  வரும்   ஒரு  போலீஸ்காரர்   மூலம்   ஞாபகப்படுத்துகின்றார்கள்.  சின்னையா. சித்தி.அண்ணா  ,தங்கச்சி  என்று  இரண்டு   பிரிவினரும்   கூடிக்குலாவி   உண்டு   மகிழ்ந்ததை   …இரண்டு  பக்கத்திலுமுள்ள   மதவெறியர்கள்   எப்படியெல்லாம்   குலைத்துவிட்டனர்   என்பது   மனதையறுக்கும்    துயரமாகும்.  இந்த  ஒற்றுமை   இன்னும்   முழுதாகச்   சிதைந்துபோய்  விடவில்லை.  இது   முன்னைய  காலங்கள்போல்   தளிர்  விட்டு  வளர  வேண்டும்.   
 
 கட்டுப்பாடுகள்   நிறைந்த   …ஏழ்மையான    முஸ்லீம்   இளம்  பெண்   எப்படி இருப்பாரோ   அதைச்  சரிவர  நடித்து   ஒப்பேற்றியிருக்கின்றார்   மகளாக   நடித்த ஸான்ரா. மாப்பிள்ளை   வீட்டுக்கு  வரும்போது   மறைந்திருந்து    பார்த்து   வெட்கப்படுதல் ,பணம்  தர முடியால்  திருமணம்  நின்று விடுமோ   என்ற  கேள்விக்குறி  வரும்போதெல்லாம்  கலங்கி ஏங்குதல்  எல்லாம்   இயல்பாகவே  இருக்கின்றது.
சமுதாயக்  கட்டுப்பாடுகள்   மதத்தின்  பெயரால்   கூடிக்கொண்டே    பின்னோக்கிச்   செல்வதால்   சிக்குண்டு   போகிறவர்கள்   பெண்களே  . .பாதியில்   கல்வி  தடைப்படுதல்….வெளியுலகைக்   கண் குளிரப்    பார்க்க  முடியாமை….சீதனச்  சந்தையில்  விலை  நிர்ணயிக்கப் படுதல்  ….ஆண்களின்   தேவையற்ற  கட்டுப்பாடுகளுக்கெல்லாம்   அடங்கிப்  போகவேண்டிய   கட்டாயம்   என்று   நீட்டிக்கொண்டே    போகலாம் .இப்படத்தைப்  பார்க்கும்போது  இவையெல்லாம்   எம் முன்னே  வரிசை  கட்டி  நிழலாடுகின்றன. இந்த  டெலி பிலிமைக்  கூர்ந்து  கவனித்தபோது    எனக்குத்  தோன்றியவை, முகம்மது   நபியின்   மனைவி   கதீஜா  வணிகத்துறையில்   சிறந்த  எடுத்துக்காட்டாக   விளங்கியிருக்கின்றார்.முகம்மது   நபியின்   மறைவுக்குப்பின்   அவரது   இரண்டாவது   மனைவி   ஆயிஷா   கணவனின்   வழியில்   அரசியலைச்   சிறப்பாக  நடத்தியிருக்கின்றார். பெண்கள்   வீட்டுக்குள்ளேயே     முடங்கியிருக்க  வேண்டுமென்று   இஸ்லாம்   வற்புறுத்தியிருந்தால் இவையெல்லாம்   சாத்தியப்பட்டிருக்குமா   என்ற  கேள்வியும்   எழுவதைத்  தடுக்கமுடியவில்லை. காலத்துக்குக்  காலம்   மதத்தின்  பெயரால்   அவரவர்  போடும்  புள்ளிகள்   நாளுக்கு  நாள்   வரைபடமாக்கப்பட்டிருக்கின்றன.  அவையே உண்மையென்றும்    வலியுறுத்தப்படுகின்றன.

.”மெஹர்”கொடுத்தே   ஒரு  பெண்ணைத்  திருமணம்  செய்ய  வேண்டும்  என்று   இஸ்லாத்தில்   சொல்லப்பட்டிருப்பதுபோல   இனி  வரும்  சந்ததியினர்   செய்வார்கள்  என்பதை  மாப்பிள்ளையாகப்  போகின்றவர்   இறுதியில்  குறிப்பிடுவது  .ஏனைய சமூகத்தவராலும்   கடைப்பிடிக்கப்பட்டால் …..நினைக்கவே   மகிழ்ச்சி  நிறைகின்றது.

நன்றி : ஆக்காட்டி 8 (செப்ரம்பர்-ஒக்டோபர் 2015)

Advertisements