fish tank
நேற்று மாலை, பாரீஸ் நகரில் நடைபெற்ற வாசிப்பு-மனநிலை-விவாதம் 19 வது தொடரில் கனடாவில் காலமாகிய கவிஞர் திருமாவளவனுக்கான நினைவுகூரல் முதல் நிகழ்வாக இடம்பெற்றது.
கவிஞர் நெற்கொழுதாசனின் அஞ்சலி உரையின் முடிவில், திருமாவளவனால் எழுதப்பட்ட கவிதையொன்று வாசிக்கப்பட்டது. இது இலங்கையில் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது என்ற தகவலை அப்போது தான் அறிந்தேன். புலம்பெயர்வாழ்வில் அகதிகளின் வாழ்வு எவ்வகையானது என்பதை அக்கவிதை சொன்னது.
1.
இருப்பு – திருமாவளவன்
சிறுதொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
நஞ்சு நீக்கி வடிகட்டிநிரப்பிய நீர்
நீரிடை மிதக்கும் செயற்கைத்தாவரங்கள்
மட்டுப்படுத்தப்பட்ட மின்வெளிசச்ம்
மின்சூடாக்கியின் கணகணப்பு
பதனிட்டு தயார் செய்யப்பட்ட உணவு
நேரம் தவறாத உபசரிப்பு
சொகுசு சிறைக்குள்ளிருந்து
தன் வாழ்வின் துயரைப்பாடுகிறது
மீன்குஞ்சு.
(பின்பனிக்காலம் 2001)
                சிறுதொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி –

என்ற வரிகள் அடைபட்டுக்கிடக்கும் இடத்தின் விசாலிப்பை உணர்த்த, செயற்கையான வாழ்வில் போலிகள், காலநிலைக்கேற்ப வசதிகள், நினைத்தநேரம் கிடைக்கும் பதனிட்ட உணவுகள். இவை போன்ற வளமான வாழ்வு எனப்படும் மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்குஞ்சுகளாய் அகதிகளாகிப் பொருளாதார முன்னேற்றமடைந்த நவீனங்களாலான நாடொன்றில் வாழ்ந்தாலும் அது சொகுசுச்சிறை என்றெழுதினார் திருமாவளவன். அத்தனையும் வெளிப்பார்வைக்குச் செழிப்பைக் காட்டுவது போலத் தோன்றினாலும் மீன்குஞ்சு அதனுள்ளிருந்து தன் துயரைப் பாடுகின்றது என்ற இக்கவிதை வாசிப்பைக் கேட்ட அந்நேரத்தில் கவிஞர் காலத்தச்சன் எழுதிய கவிதையொன்று நினைவில் வந்தது. இன்னுமொரு மீன்தொட்டியும் அதற்குள் அலையும் மீனும் ஞாபகத்திற்கு வந்தன. இருவேறு மீன்தொட்டிகள். இருவேறு மீன்கள்.தேடியெடுத்து மீளவும் படிக்கத்தோன்றியது.
2.
காலத்தச்சன் கவிதை-
செவ்வகக்கடலில்
தனித்தலைகிறான்
ஃபைட்டர்
ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை
அவன்
வண்ணஞ்சிதறும்
துகள் மீன்களை
தனையொத்த
பலசாலிகளையே
அவன்
விரும்பினான்
அவன்
உடலுக்குள்ளிருந்துதான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இதை
இங்கு
எனக்கும்
தாளமுடியாத் தனிமை
தனித்தலைந்து
எனக்கும் வேண்டும்
எனையொத்த
ஒன்று
இந்த
செவ்வகக்கடலுக்குள்
விழுந்தால் போதும்
இதைப்படிக்கும்
யாரேனும் .
(31 டிசம்பர் 2013)
செவ்வகக்கடலில்
தனித்தலைகிறான்
பைட்டர்..
எனத் தொடங்கும் கவிதையைக் கிட்டத்தட்ட இரு வருடங்களின் முன்னர் படித்திருந்தேன்.செவ்வக்கடல் என்ற உவமிப்பு சடாரென ஒரு மீன்தொட்டியை முன்னால் வைத்தது. அதன் பிரமாண்டமோ குறுக்கமோ வரையறுக்க முடியாததாக இருக்கிறது.கடல் என்ற பின் எவ்விதம்?எவ்வாறு எக்கடலை முன்னிட்டு அளவை நிர்ணயிக்கமுடியும்?
அச்சண்டைக்கார மீன் தனித்தலைகிறது. தனையொத்த மீனொன்றை அவாவுகின்றது. சின்னஞ்சிறு வண்ண மீன்கள் அதற்கொரு பொருட்டல்ல.அதற்கு நிகரானவையல்ல. கவிஞன் தானே அம்மீனாகி அதுவே நானென்கிறான். இவ்வாறே இருப்பு கவிதையில் திருமாவளவனும் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டுள்ள கண்ணாடித்தொட்டியினுள் மீன்குஞ்சு தன் துயரைப்பாடுகிறதென, ஓர் அகதியின் அடைபட்ட அந்தரிப்பை வாழ்வின் வளமெல்லாம் சொகுசுச் சிறையென்ற வார்த்தைகளால் தத்தளிக்கும் மீனாகி, அவரே தன்னையிட்டு எழுதுவதாய் தோன்றந்தருகிறது.
காலத்தச்சனின் கவிதையில் மூர்க்கமான மீன் தானே என்கிறார். தாள முடியாத் தனிமை தரும் இன்னோர் சிறையது.வாழ்வது கடலாயினும் உள்ளே தனியே உலைகிறது மீன்.
இந்த
செவ்வகக்கடலுக்குள்
விழுந்தால் போதும்
இதைப்படிக்கும்
யாரேனும்-
என்று இறுதியாக முடியும் சொற்கள் கவிதையின் கனதியைத் தாங்கிக்கொள்கின்றன.
இரு கவிதைகளும் தவிப்பும் துயரும் செய்த மீன்தொட்டிகள். இரு வேறுலகுகள். ஒன்று வசதி, வளம், போலி, செயற்கை என அலங்கரிக்கப்பட்ட சிறை. அதனுள்ளிருந்து தப்ப வழியின்றித் துன்பங்களைப் பாடுகின்ற மீன்குஞ்சு அங்கிருக்கிறது என்கிறது.
மற்றையது, அழகுச்சொற்கள் எனப்படுபவற்றைத் தவிர்த்துத் தனிமையின் அளவைக் கடலுக்கு இணையாக்கி, செவ்வகக்கடல் எனும் ஒரு சொல்லில் மீன்தொட்டியின் வர்ணிப்பைச் செய்கிறது.அத்தொட்டியை எவரும் ஊகிக்க முடியாது.செவ்வகக்கடலைக் கற்பனை செய்த கவிஞரின் உத்தி புதிதாயிருக்கிறது.ஒரு சொல்லில் மீன்தொட்டி வர்ணிக்கப்பட்டது.
                இங்கும் தனிமை.ஆனால் இது சண்டைக்கார மீன்.பலசாலி மீன்.தாளாத் தனித்தலைவு.யாரேனும் அதனுள் விழ வேண்டுமென வேண்டும் அம்மீனும் தன் துயரவாழ்வைத் தான் சொல்கிறது.
                  மீன்தொட்டியினுள்ளான இருவேறு இருப்புகள். அதனதன் முட்டி மோதல்கள் அடைபட்ட கண்ணாடிகளைத் தீண்டுவதோடு தீர்வதில்லை.
தர்மினி
Advertisements