‘ஒவ்வா’இரசனையும் பகிர்வும்

-புஷ்பராணி-

 

ovva 1
நான் அடிவானத்திலிருந்து வந்தவள் 
சூரியனின் பூச்சரம்
இரவைப்பூட்டுகின்ற சாவி
இறக்கைகளுடன் புறப்படுகின்றவள்..
. என்ற ‘ஒவ்வா’ கவிதைத்தொகுப்பின் முதலாவது கவிதையே ஸர்மிளா ஸெய்யித் வித்தியாசமான சிந்தனைகளையுடைய ஒரு பெண் என்பதை அடையாளப்படுத்துகிறது. இக்கவிதை வரிகளே அவரின் தன்னம்பிக்கையின்…. தன்னைத்தானே நேசித்து உயர்வாக கருதும் ஓர்மத்தைக் காட்டி அழகுச்சொற்குவியல்களாக எம்மை ஈர்த்து நிறுத்த முடியாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கின்றன.
                     இவரின் கற்பனைக்கு எல்லை தான் ஏது?அடக்குமுறைகள் சூழ நின்று வெருட்டுகையில் பீறிடுகின்ற எதிர்ப்புணர்வுக் கோபத்தில் சமராடவேண்டுமென்ற வெறியில் தோன்றும் எண்ணங்கள் வார்த்தைகளாக வெடிக்கும் போது இவை வெறும் கற்பனையல்ல.எல்லாம் உண்மை என்றே நிரூபிக்கின்றன.அடுத்ததாக ஒரு கவிதை
ஞாபகமிருக்கிறது
நான் ஒரு கல்லறையிலிருந்து எழுந்து வந்தேன்…ன்று தொடரும் வரிகளில் பெண்ணென்ற பிறப்புக்காய் யாரது கைகளுக்குள்ளும் அகப்படமுடியாத தன் சுதந்திரமான எண்ணங்களுக்கு வரையறை கிடையாது என்ற வீறாப்பில் பிறந்த கற்பனை இதுவென்றான போதும் இது பொய்யல்ல உண்மை என்று நம்ப வைக்கும் நம்பகத்தன்மை எம்மையறியாமலே எமக்குள் புகுந்துவிடுகிறது.
இதிலே தொடரும் அடுத்தடுத்த வரிகள்
உண்மையிலே நானொரு மாந்தளிர்
வியப்பூட்டும் வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவள்…
போன்ற வரிகளை நான் முன்பு படித்த போது ஒரு விதமான சினமேற்பட்டது ‘இவ்வரிகள் மிகையாகப்பட்டன’. ஆனால் தொடர்ந்து அவரின் கவிதை வரிகளைப் படித்த போது ஆழ்ந்து இரசிக்கலானேன்.இலண்டனுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ரயிலில் வைத்து ஒவ்வாவைப் படிக்க ஆரம்பித்தேன். என் பயணக் களைப்பே என்னை விட்டு ஓடிப்போனது.
கவிதைகள் ஒவ்வொன்றோடும் என் நேரம் கடுகதியில் பறந்துவிட்டது. அடக்குமுறைகள் மிகுந்த சமூகத்தில் பிறந்த ஒரு இளம்பெண்ணுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? என்ற பிரமிப்பு ஏற்பட்டது. மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ …அன்றேல் உள்ளுணர்வாகவோ செல்லமாகவோ இவரின் பெற்றோரின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது என்பது என் கருத்து.சமுதாயத்தின் ஏச்சுப்பேச்சுகளுக்கு மனம் ஒடுங்காமல் இவர் முன்னேறி, ஒவ்வொரு தருணத்தையும் செறிவு மிக்க வரிகளில் துணிந்து கொட்டும் ஓலங்கள் கதைப்பிளக்கின்றன.
பக்கம் 14 ல் இப்படியாக ….
நிலவொளியால் ஆக்கப்பட்ட என்னை
நீங்களும் ஒருவரும் அறிந்ததேயில்லையா
நான் ஒளி
சுழலும் அலைகளில் 
விளக்குகள் ஏற்ற இறங்குகின்றேன்
என்னை இப்படியே விட்டு விடுங்கள்
என் மனதில் ஒன்றுமில்லை 
எனக்கு மனதேயில்லை
எனக்கு உயிரில்லை
என்னைக் கொல்ல முடியாது
எனக்கு உடல் இல்லை 
என்னைப் புதைக்க முடியாது-
     எத்துணை ஆவேசமான வரிகளிவை. அடக்குமுறைகள் கூடக்கூடக் கொந்தளிக்கும் ஒரு பெண்ணின் நெருப்பு மொழிகளிவை.
16ம் பக்கத்தில்…..
-வாழ்வை விருந்தாட உருவாகியவள் நான்
என்ற வசனத்தில் போராட்டவாழ்வும் இவரால் உக்கிரமான ருசியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெண் என்பவள் உயர்ந்தோங்கி வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அடக்குமுறையாளர்களை இவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கால் அடிக்கின்றன.
17ம் பக்கத்தில் வருகின்ற
சற்றேனும் சாயமற்ற என் வார்த்தைகள் 
வாளற்ற நாகமென அவர்களைச்சுற்றிக்கொள்வதிலிருந்து
தப்பிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்…
இச்சொற்களில் கனன்று தொனிப்பதை அவதானிக்கலாம்.
ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளைப் பற்றிக்கொள்ளும் பெருமிதம் கூட மிக அதிகமாகவே தெரிகிறது. அவனைப்பற்றிய அக்கறையும் கவலையும் தொனிக்கும் கவிதையொன்றின் இறுதிவரிகளின் வலியிவை.
இருள் கவிந்த இந்தத் திகில் வழியில் 
என்னைத் தள்ளி விட்டவர்களுக்குத் தெரியாது
எனக்கொரு பையன் இருக்கின்றான்
அவனுக்கொரு உலகம் இருக்குதென்று.
    ஸர்மிளா தன் கற்பனைக்கேற்றவாறு பெண் கடவுளையும் படைத்துவிட்டார்.
-சுதந்திரத்திற்குக் காத்திருக்கும் என்னை உச்சி கொஞ்சி
வாழ்வின் வழி நெடுகிலுமான
காதலின் தடயங்களில்
கைப்பிடித்து நடக்கின்றாள்…என்று தொடரும் கவிதை வரிகளில் இவரின் சுதந்திரபூர்வமான எண்ணங்கள் கம்பீரமாய் நிற்கின்றன.
பூந்தையலிட்ட படுக்கையில்
ஒட்டுமொத்த இரவையும்
ருசிகரமாகக் கழித்த பின்
தொன்மையான மிருதுவான
இசைக்காற்றில் மிதக்க 
என்னை நழுவிப்போகச்செய்கிறாய்…
என்னை முத்தங்களுடன் என்னை விட்டுச்செல்கிறாய்…
  இவற்றில் வெளிப்படும் காதல் வலி உண்மையானதா?…இல்லை இதுவும் கற்பனையின் கண்டுகளிப்பா? என யதார்த்தம் மின்னும் வரிகள் சந்தேகங் கொள்ளச்செய்கின்றது.இவை இத்தொகுப்பில் இன்னும் தொடர்கின்றன.
      புதிரான கவிதைகளும் புரிந்து கொள்ள முடியாத வரிகளும் இவரால் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளன.
பொருள் புலப்படாத சில கொஞ்சம் அயர்ச்சியைத்தர மேலே தொடருகின்றேன்.
ஆஹா! எல்லாம் விளங்குகின்றதே… என்று புளுக மனம்வரவில்லை.
          இரவு பகலென்று பாராமல் கூடிக்கும்மாளமிட்டுக் கோலாகலமாகக் கழித்த நாட்களெல்லாம் நம் நாட்டில் கனவாகப்போய்விட்டன.இரவு வந்தாலே பயமும் கூடவே வந்து ஒட்டிக்கொள்கிறது என்பதைச்சொல்லும் ஸர்மிளாவின் வரிகள்…
இரவிலே தான் ஆக்கிரமிப்பு
அரங்கேறுகிறது
ஆயுதங்கள் ஓய்வின்றி
இணக்கமற்ற குரல்கள் இரக்கமின்றி
அமைதியை இடைஞ்சல் செய்கின்றன
இப்போதெல்லாம்
இனிய இராகங்களை இசைப்பதேயில்லை இரவு
முன்பு நிலாச்சோறுண்டு
கதை கேட்டபடி 
முற்றத்தில் உறங்கினோம்
அப்போது இரவின் கண்களில் 
ஒளி நிறைந்திருந்தது
கதவுகள் தாளிடப்பட்டிருந்த போதும்
நடுக்கத்துடன் பதட்டத்துடன்
கேட்கின்றோம் இரவின் கதைகளை….
    யுத்தகால நாட்டின் நிலமைகளை நன்றாகவே காட்சிப்படுத்துகின்றன இவ்வரிகள்.
ஒரு பெண்ணால் சுதந்திரமாக எதையும் செய்யவோ இரசிக்கவோ சொல்லமுடியாமலிருக்கும் அளவிற்கு ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே அவள் நிறுத்தப்பட்டுள்ளாள். அவளுடைய குதூகலங்கள் அமுக்கப்பட்டே அவள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளாள். கணவன்-குழந்தை-வீடு இவை மட்டும் தான் உலகம் என நம்பப்படும் அளவிற்கு பழக்கப்பட்டுவிட்டு ஒரு பெண்ணை நம் கண்முன்னே நிறுத்தும் கவிதையொன்று…
இலக்கற்று அலையும் பார்வையுடன் 
விரல் சூப்பும் குழந்தையைச்சுமந்து
நடக்கின்றாள் அவள்
மணலில் புரளும் நீண்ட புர்காவை 
ஒரு கையால் தூக்கிப்பிடித்திருக்கின்றாள்
அருகே அவள் துணைவன்
புரண்டும் வரும் அலையை உதைத்து
குதிக்கிறான்
அரண்டு அழும் குழந்தைக்கு
பால் புட்டியைத் திணித்தபடி
வியர்வை வழியும் முகத்துடன் 
கரையோர மணல் மேட்டில் 
குந்தியிருக்கிறாள் அவள்…
     கவிஞரின் கவனிப்புகளில் இதுவுமொன்று.
 காலத்திற்குக் காலம் மதத்தின் பெயரால் புதிது புதிதான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் மிக இறுக்கமாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றன.பிறப்பிக்கும் புதிதான சட்டங்களும் பெண்களுக்கெதிராகவே இயற்றப்படுவதைக் கவனித்துக்கொண்டு தானிருக்கின்றோம்.இதற்கு எதிராகக் குரல் எழுப்பிச் சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களை அடங்காப்பிடாரிகள் -ஒழுக்கங்கெட்டவர்கள் என்று சொல்லிப் புறந்தள்ளப் பார்ப்போரை நேருக்குநேர் …துணிச்சலாக…அழுத்தமாகக்கேட்கிறார் இப்படி..
வேதங்களைக்கொஞ்சம்
தள்ளி வை
நேரே வந்தமர்
முழுசாய் திற என் போல
அடிகளின் கதை தெரியுமா
உனக்கு
என்ன சொல்வாய்
புராதனமானது
போற்றுதற்கரியது
இப்படித்தானே….
    ஆணாதிக்கத்தை நிராகரிக்கும் திருத்தமான சொற்களிவை. பெண்ணென்ற ரீதியில் ஏற்படும் சமுதாய மற்றும் மதஞ்சார்ந்த ஒடுக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாலும் அதை மீறி முன்னேறிச் செல்வதாலும் அவரும் அவரது குடும்பமும் சந்தித்த பாதிப்புகளும் மனவுளைச்சல்களும் ஏராளம். ஆனாலும் பிடிவாதமாகத் தன் சுயசிந்தனைகளை முன் வைப்பதால் அவரைக் கற்பனையில் கொலைசெய்து கூட சிலர் மகிழ்ந்தனர். அதற்குச் சவால் விடும் எழுத்துகள் அவருடையவை.
பக்கம் 48ல்….
அவர்கள் சொல்கிறார்கள்
என்னை ஒழுக்கங்கெட்டவள்
தேவடியாள் என்று
காதல் அடிமையாய் இருக்கலாம்
புணர்ச்சியைப்பேசுதல் குற்றமென்கிறார்கள்
பிள்ளை பெறலாம்
எந்தத்துவாரம் வழி அதுவென
கூறுதல் குற்றமென்கிறார்கள்
துல்லியமாய் சொல்வதானால்
உச்சபட்சமாக
மரணதண்டனையே எனக்கு
என் உடலிலிருந்து
தலையை அறித்தெறிய முன்
இறுதி மில்லி வினாடி வரையும்
நான் வாழ்வேன்…..
     நிராகரிக்கப்பட்டு….அதையும் மீறித்திமிறலான ஆங்காரத்தோடு முன்னேறத்துடிக்கும்…முன்னேறிக் கொண்டிருக்கும்….முன்னேறி உயரே போய்விட்ட பல உன்னதப் பெண்களின் துணிச்சல் மிகு எக்காளக் குரலாக எம் காதுகளில் விழுகின்றன.
               மேலும், ஈழப்போரின் காரணமாக தம் சொந்த ஊர்களை விட்டுவிட்டு அந்நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் பலரின் மனநிலையை ஸர்மிளா ஸெய்யித்தின் கீழ்வரும் கவிதை வரிகள் மிகத் துன்பியலோடு இவ்வாறு சொல்கிறது…
இனி எதுவும் சொல்வதற்கில்லை
என் காலணிகளை அங்கேதான் விட்டு வந்திருக்கின்றேன்
என்றென்றைக்குமாக!
    ‘ஒவ்வா’ தொகுப்பிலுள்ள 42 கவிதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இரசிக்க வைக்கின்றன. கேள்விகளும் எழுப்புகின்றன. அவற்றை உள் வாங்கிச் சிந்திக்க வைக்கின்றன. சிலதோ புரிந்து கொள்ள முடியாமல் ஊகங்களை விட்டுச்செல்கின்ற போதிலும் மொத்தத்தில் பாராட்டுக்குரிய கவனிக்கப்படவேண்டிய கவிதைத் தொகுப்புத்தான் இது.
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 65ரூ
முதற்பதிப்பு 2014
 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s