பரிசாக இரு சொற்கள்!

IMG_20151224_0001

மேலேயுள்ள கிழிந்த கசங்கிய வெள்ளைக்கடுதாசி நேற்றிரவு எனக்குக் கிடைத்த பரிசு. கண்களை மூடச்சொல்லி கைகளை நீட்டச்சொல்லி இந்தக் கடுதாசியை வைத்தார்கள்.பெறுமதியான வார்த்தைகளவை.
              எங்கள் நாட்டில் இருக்கும் போது புத்தாடை என்பதைத் தவிர நான் கொண்டாட எதுவும் கிறிஸ்மஸ் நாளில் இருந்ததில்லை.ஒரு புது உடுப்பு கிடைப்பதற்கான நாள் வருடத்தில் இதைப்போல கோயிற்பெருநாள் மற்றும் புத்தாண்டு தான். ஆனால், புலம்பெயர்ந்து வந்த பின் புத்தாடையை எந்தவொரு நாளை முன்னிட்டும் நான் வாங்கியதில்லை. எப்போது கோடைகால/குளிர்கால ஆடைகள் கிழிந்தோ நிறம் மங்கியோ போகிறதோ அது தேவைப்படும் போது ஒரு உடுப்பை வாங்குவது தான் என் ஆடைகளை வாங்கக் காரணங்களாகின்றன. காலணி பிய்ந்து போனால் அதையும் அப்போதைய காலநிலைக்குத் தேவைப்பட்டால் போல வாங்கிக் கொள்வது என எளிமையாக கொண்டாட்டங்களின் ரென்ஷனில்லாமல் வாழ்வது செலவில்லாமலும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வீட்டில் இதையே பழக்கிவிட்டதால் யாருக்கும் எதுவும் பிரச்சனையில்லை.ஒரு நாளுக்காக நாங்கள் என்றில்லாமல் எங்களுக்காக ஒரு நாளை வசதிப்படி உருவாக்குவது தீவுகளாய் வாழும் இப்புலம்பெயர்ந்த வாழ்வில் ஏற்பட்ட சாதகமான சில விடயங்களில் ஒன்று.
                 எப்போது இலக்கியக்கூட்டம் நடந்தாலும் அது தான் கொண்டாட்ட மனநிலையை இப்போது தருகின்றது. மார்ச் மாதம் 26-27 ஒரு கொண்டாட்டம் நடக்கப்போகிறது. நண்பர்கள் அயல்நாடுகளிலிருந்து வருவார்கள் என்பது ஒரு கொண்டாட்டத்தை எதிர் நோக்கிய ஆவலாயுள்ளது.
                          பிள்ளைகளுக்கு பரிசுகள் அதுவும் அவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி. பள்ளிக்கூடங்களில் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிப்பதைப் போல தாமும் வீடுகளில் செய்ய விரும்பும் அவர்கள் கூட சில வருடங்களில் அதை சலித்துப் போய் ஆர்வம் காட்டாமல் விடுகிறார்கள். குளிரில் வெளியே போய் விளையாட முடியாத காரணத்தால் வீட்டிற்குள்ளே அவர்கள் இருந்து விளையாடுவதற்காகவும் குளிரைத் தாங்குவதற்கான கொழுப்புடைய உணவுகளை உண்பதும் காலநிலையை முன்னிட்டதாகவே தோன்றுகிறது. இங்குள்ள குளிர்காலத் தனிமையினால் ஏற்படும் வெறுமையான மனநிலையை நண்பர்களை சந்தித்து ஒன்றாய் கூடி மகிழ்வதற்கும் இதுவே காரணம்.கோடை காலத்தில் திரும்பியும் பார்க்காமல் ஆளுக்காள் ஒவ்வொரு வெய்யிலான இடமாகப் பார்த்துப் போய்விடுகிறார்கள்.
                           எல்லா மரங்களும் இலைகள் உதிர்த்து குச்சிகுச்சியாக நிற்கும் போது இந்த ஒரு மரம் மட்டும் இலைகளை இழக்காமல் பசுமையாக ஆண்டு முழுதும் நிற்கிறது என்ற காரணத்தால் அதை அலங்கரிக்கிறார்கள். சொக்லட்கள் ,பரிசுகள் எனத்தான் கடைகளில் அமளிப்படுகிறது. பரிசுகளை ஆளுக்காள் வழங்குவது தான் இங்கு பிரதானவிடயமே.பிள்ளைகள் தங்களுக்குத் தேவையான விளையாட்டுப்பொருட்களைப் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதைப்பயன்படுத்தித் தமக்குத்தேவையான விளையாட்டுப் பொருளை வாங்கிவிடுகிறார்கள்.யேசு பிறந்தது-மாட்டுக்கொட்டில் கதைகளைக் கணக்கிலெடுப்பதாக இல்லை என்பது குறிப்பிடவேண்டியது.
             இந்த நாளும் வழமை போல தான் என நல்ல நித்திரையாயிருந்த என்னை விடிகாலையில் எழுப்பி வாழ்த்துத் தெரிவித்து, ‘கோயிலுக்குப் போகவில்லையா?’ எனக் கேட்டுச் சினத்தை ஏற்படுத்தி இதை எழுதக் காரணமான நட்புக்குக் கடுப்பான நன்றி.

தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s