kasakaranam
சில புத்தகங்கள், அவற்றைப் படித்தவுடன்  மற்றவர்களுடன் பகிரச் சொல்லுகின்றன. ஒரு புத்தகம் அது தானாகவே என்னைத் தொடர்ந்து வாசிக்க வைப்பதைப் போல, பிறரோடு அதைப் பற்றி உரையாடவேண்டும் என்ற மனநிலையில் மதிப்புரையோ விமர்சனமோ அறிமுகமோ ஏதாவதொரு பெயரில் எழுதச்செய்கிறது. இன்னும் சில புத்தகங்களைப் பற்றி எழுத நினைத்தாலும் எவ்விதம் அதை எழுதுவது என்ற பாரமோ போதிய எழுத்து வல்லமை இல்லையென்ற உணர்வோ அமைதியாக இருக்கவும் செய்திருக்கின்றன.
                      விமல் குழந்தைவேல் எழுதிய ‘கசகறணம்’ நாவல் என் வாசிப்பிற்குக் கிடைத்துச் சில ஆண்டுகளாகி விட்டன. உடனே படித்தும் விட்டேன். ஆயினும், அதை முன் வைத்து விமர்சிப்புகள் வந்த போது , திரும்பவும் எதை நான் எழுதப்பேகிறேன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. மேலும், கசகறணத்திலே இரண்டாம் அத்தியாயத்தின் அரசியல் தொடர்பான விடயங்களெல்லாம் மனதிற்குக் கனதியைத் தருவதாயிருந்தன.  மட்டக்களப்பு மாவட்டத்தின் பேச்சொலியின் இனிமை கதையோடு இழுத்துச்சென்றது. அதை விமர்சனத்தை முன்னிட்ட வாசிப்பாக என்னால் மேற்கொள்ள முடியவில்லை. அவர்களது பேச்சுத் தமிழும் சொற்களும் ஒரு விதமான இரசிப்பு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியது எனலாம். எப்போது உரையாடினாலும் மட்டக்களப்பு நண்பர்களின் கதை சங்கீதம் போலிருப்பதாக எனக்குத் தோன்றும். வாசித்துவிட்டு வைத்த கசகறணத்தைப் பற்றி உடனடியாக எழுதாமல் போனது கூட நல்லதென, இப்போது திரும்பவும் நாவலை எடுத்து வாசித்த போது தோன்றியது. இந்தக் கால இடைவெளி இன்னுமதிகமான தெளிவைத் தந்ததாகவே கடந்துள்ளது.
                     ‘கசகறணம்’ என்ற சொல் புதிதாயிருந்தது. அதன் அர்த்தத்தைத் தேடிய போது இந்நாவலின் கடைசிப் பக்கத்திலிருந்த பின்னிணைப்பின் இறுதியான நூறாவது சொல்லாக அது -‘தொடர்ச்சியான தொந்தரவு’ ‘முடிவுறா இன்னல்கள்’ எனப் பதிலைத் தந்தது.
          சிறியதொரு தீவான இலங்கையிலுள்ள மற்றொரு மாவட்டத்தின் பேச்சு வழக்கு எனக்கு அந்நியமாகவா இருந்தது என்றால் ஒரேயடியாக அவ்வாறு சொல்ல முடியாது. மிகச்சில சொற்களே அறியாதவையாகவோ நான் புழங்காதவையாகவோ இருந்தன. அதிகமும் எமது பேரன்-பேத்தி பேசிய சொற்களை ஞாபகப்படுத்தின. சில சொற்களை கண்ணால் பார்த்து வாசிக்கும் போது அந்நியம் போலிருந்தாலும், அதை ஒரு தரம் வாயால் உச்சரித்து வாசித்துப் பார்க்க  இது நான் கதைத்த சொல் தானே எனத்தோன்றுவதாக இருந்தன. அவ்வாறாகப் பல சொற்களை உச்சரித்துப் பார்த்தேன்.

                   அக்கரைப்பற்றுச் சந்தையில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை  அங்கு போய் தூர நின்று, மனிதர்களையும் சம்பவங்களையும் உற்றுக்கவனித்து இரசித்த ஒருவரது எழுத்தாக இது இருக்கிறது. சந்தையில் தம் விளைபொருட்களை விற்கும் சிறு வியாபாரிகளான இக்கதையின் பிரதான மாந்தர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதும் கேலியும் கிண்டலுமாக கதைப்பதும் மனிதர்கள் இனவேறுபாடற்று வாழ்ந்த அந்தக்காலத்து அழகை, அந்நியோன்னியத்தைக் காட்டுகின்றது. அக்கால வாழ்வும் இனங்களுக்கிடையிலான உறவுகளும் பற்றி அறியாத ஒரு தலைமுறையாக இப்போது இருக்கும் எமக்கு மட்டக்களப்பில் மூன்று இனங்களும் பக்கத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஒருவருக்கொருவர் நட்போடு வாழ்ந்தனர் என்பதெல்லாம் ஆச்சரியமாகவேயிருக்கும்.

                    வெள்ளும்மா, மைலிப்பொத்தா, குறட்டைக்காக்கா, குலத்தழகி என்ற நான்கு பேரில் ஆரம்பிக்கும் முதலாவது வரியிலிருந்து கதை சொல்லத் தொடங்கி விடுகிறார் நாவலாசிரியர். உவமான உவமேயங்களும் பழமொழிகளும் சிலேடைகளுமாக அவ்வெளிய மனிதர்களின் கதைகள், உறவுகள், வாழ்க்கை முறைகள் என அச்சந்தையைக் களமாக்கி ஒரு சினிமா போலக் காட்சிகள் கண்களுக்குத் தெரிகின்றன. அங்குள்ள கடைகள்  அவர்களது உலகை வேறாக்கிவிடுகின்றன.

எல்லா ஊர்களிலிருக்கும் சினிமாப் பித்தர்கள் போலவே குலத்தழகி என்ற சிறுவியாபாரியான பெண்ணும் புதுப்படத்தட்டிகயைக் கண்டால் தன் வியாபாரத்தை மறந்துவிடுவதும் அதே சிந்தனையாகி, பக்கத்திலிருப்பவர்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுப் படம் பார்க்கத் தியேட்டருக்குச் செல்வதும் சுவாரசியமாய் சொல்லப்படுகிறது. சினிமா ரசனையன்றி வேறு பொழுது போக்கோ இரசனையோ அற்ற இவர் போன்றவர்களுக்கு அது மிகப்பெரும் ஆறுதலே. அது அவர்களது அன்றாடச் சுமைகளைத் தாங்கும் திறனை அதிகரிக்கும் உற்சாக மருந்து. குலத்தழகி படம் பார்த்துவிட்டு வந்து கதைசொல்லும் திறமையைப் பற்றி இப்படியாக வசனம்—‘படம் எடுத்தவன் கூட அதே கதையஅவள் மாதிரி சொல்லுவானெண்டா அது சந்தேகம்தான்….குலத்தழகி கதை சொல்லுற நேரத்தில அடிநுனி தெரியாம இடைநடுவுல ஆரும் காது குடுத்தாங்களெண்டா, அது அவங்களுக்குப் படக்கதை மாதிரியே தெரியாது. ஏதோ தன்ர சொந்தக்கதையையோ இல்லாட்டி பக்கத்துவீட்டுக் கதையையோ சொல்லுற மாதிரித்தான் இருக்கும்’ என நாவலாசிரியர் எழுதியிருப்பதைப்போன்ற சுவாரசியமான வசனங்கள் மற்றும் ஆளையாள் கேலி செய்வதைப் போன்ற வார்த்தையாடல்கள் என புத்தகத்தில் ஏராளம் வரிகளுள்ளன. இது வரை கேள்விப்படாத ஏட்டிக்குப்போட்டியான பாடல்கள், வாக்கியங்களெல்லாம் வாசிப்பை நகர்த்திச் செல்லுகின்றன எனலாம்.ஆனாலும் அதிகமும் பேச்சுவழக்குகளைக் கொண்டதாக கதை செல்வது சில வாசகர்களுக்குத் திகட்டிவிடும் நிலையைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் அந்நிலத்தின் இயல்பே அதுவாயிருக்குமோ எனத் தோன்றுகிறது.

            அக்கரைப்பற்றுச்சந்தையில் இம்மனிதர்கள் நட்போடும் அன்போடும் கேலியோடும் உறவாடுபவர்களாக இருக்கிறார்கள். அங்கு கனகவேல் என்ற மூன்றாம் பாலினத்தவர் பற்றிய புரிதலோடு இந்நால்வரும்  நட்பைப்பேணுவதும், கனகவேல் பற்றிய நம் புரிதல்கள் எவ்விதமாகவேண்டும் என்ற கரிசனையுமாக கனகவேலின் உணர்வுகளை…. ‘ஆண்டவன் குடுத்த உடல் கூறுப்படி அவனுக்குண்டாகுற  உணர்ச்சியால, அவன் ஆம்புளையளத்தான் பார்த்துச் சிரிக்க வேண்டியிருந்திச்சி. சந்தைக்கு வந்தானெண்டா, அவன ரகசியமாகக் கூப்பிடவும் ஆக்களில்லாமலில்ல. அவனும் கூப்புடுற ஆக்களோடவெல்லாம் போறவனாயுமில்ல. தன்னைப் புரிஞ்சி கொண்டு தன்னோட பழகுறதுக்கெண்டு மட்டும், தன்ர அலைவரிசையோட இணைஞ்சி போற ஆராகுதல் ஒருத்தன் கிடைக்கமாட்டானா எண்டுறது தான் கனகவேலுட தேடல்’ என்ற விதமாய் எழுதுகிறார் விமல் குழந்தைவேல்.
                       கே.எஸ்.ராஜா பற்றிய விபரணைகள் இதற்கு முன்னரும் வாசிக்கப்பட்ட தகவல்களாயிருந்தது ஓரளவு சலிப்பைத் தந்த போதும் அவர் முட்டியோடு கள்ளுத் தூக்கிக் குடித்தது. அவரது சிறிய மெலிந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாத குரலையிட்டு ஊர்ச்சனங்கள் ஆச்சரியப்பட்டது போன்றவை எங்கள் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த போது நடந்தவற்றையும் ஞாபகப்படுத்தின. இரசிகர்கள் கே.எஸ்.ராஜாவின் குரலை ஒரே விதமாக எதிர்கொண்டதைப் போலவே ஏமாற்றங்களையும் கொண்டிருக்கின்றனர் போலிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஊருக்குள் நடக்கும் கோஷ்டிச்சண்டை பற்றிய விபரணமும் நம் வாழ்வை மீளவும் நினைத்துப் பார்க்க வைக்குமளவு யதார்த்தமும் சுவாரசியங்களுமானவை.   ‘ஊருக்குள் நடக்கும் சண்டையும் ஒருநாள் ரெண்டு நாள் சண்டையாக இருக்காது. ஏழுநாள் தொடரும் அரைப் பாரதப் போராகத்தான் இருக்கும். இரவுச் சோத்துக்கும் படுக்கைக்கும் வீடுகளுக்குப் போயிற்றுக் காலையில திரும்பவும் தொடங்கும் சண்டையில ஆம்பிளையளுக்கு வன்முறை ஆயுதம் பொல்லும் தடியுமெண்டா, பொம்புளையளுற வன்முறை ஆயுதம் கல்லும் மண்ணும் சேர்ந்த புனா…சூனா…வார்த்தைகள் தான். எப்பிடியும் பொலிசின்ர காதுக்குச் செய்தி போய் அவங்க வந்து ரெண்டு பக்கத்தாரயும் கூப்பிட்டு விலத்தியுட்டாலொழியச் சண்டை நிக்கவே நிக்காது’ என ஊர்ச்சண்டை பற்றிய வர்ணனையும் ஒரு காட்சியைத் தோற்றுவித்துவிடுகிறது.
                         இப்படியாக வாழும் இம்மக்களின் வாழ்வை நாட்டுக்குழப்பம் எப்படியெப்படியெல்லாம் குலைத்துப் போட்டுவிடுகிறது. அது எவ்விதம் இனங்களுக்கிடையிலான மோதலாக ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு உருவாகி விடுகிறது. சாதாரண சம்பவங்களெல்லாம் சக மனிதர்களை வெறுப்போடும் பயத்தோடும் பார்க்கச் செய்துவிடுகிறது. அமைதியான வாழ்வு மெல்ல மெல்லப் போர் சூழ்ந்து அங்கு இயக்கங்களின் வளர்ச்சியோடு அது வேறு விதமாகி இனங்களிடையில் சந்தேகங்களையும் பிரிவுகளையும் ஏற்படுத்தியதை கதையாகச் சொல்கிறது கசகறணம்.
கேசவன், முஹமட் என்ற இரு நண்பர்கள் படம் பார்க்கத் தியேட்டருக்குச் சென்ற இரவில் தற்செயலாக ஒரு சண்டை ஏற்பட அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட கேசவனே அறியாமல் கலவரமாக அது மாறுவதும் இதற்கு உதாரணம் கூட.
இரண்டாம் அத்தியாயம் இவ்விதமாய் ஆரம்பமாகிறது…’ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?” சோனகவட்டைச் சுவர்களில் பல இடத்தில இந்த வாசகம் தானாம் எழுதியிருக்கு….. என்பதாக எழுதப்பட்ட வரிகள். இனக்கலவரமும் அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் வீடுகளை விட்டு இயக்கங்களுக்கெனப் புறப்படுவதும் என்ன மாதிரியாக ஒரு ஊரில் நடக்கிறது? கிழக்குமாகாணம் எந்தளவு பங்களிப்பைச் செய்தது? இயக்கங்களின் வருகை இம்மக்களின் வாழ்வை என்ன விதமாகச் சிதைத்தன என்பதும் நமது நாட்டின் வடக்கு- கிழக்கு கிராமங்களின் அனுபவங்களின் ஒரு சிறு பதிவாகவாவது இந்நாவல் இருக்கிறது எனலாம். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் இவ்விதமே அச்சிறுதீவைக் கலைத்துப்போட்டதும் இதன் பரிணாமமே.
இயக்கங்கள் தொடங்கப்பட்ட இலட்சியங்கள் மாறிப் போய் அவர்கள் ஆளுக்காள் சுடுபட்டுக் கொண்டு அழிவதும் குடும்பத்திலுள்ள பெண்கள் பலியெடுக்கப்படுவதுமாக அப்போராட்டம் எப்படி மாறிப்போனது என நாவல் முடியும் போது ஒரு வரலாறு படித்தது போல அது நம் கதையைச் சொல்லிவிடுகிறது.
 தர்மினி