Ophelia
Ophelia
-மோனிகா-
இசைவுறும் கணங்களெல்லாம்
சிலந்தியாய் மாறி வலை பின்னிக் கொண்டிருக்கிறது.
மலர்கள் தூவிய தடாகமொன்று
கனவில் என்னை சலனித்தது.
மலர் மேல் மிதப்பதாய் வலையில் பிணைந்தேன்.
கீழே மீன்களென்றும் மேலொரு ஆகாயமென்றும்
கற்பனை செய்து கொண்டு மிதக்கிறேன்.
மிதக்கிறேன் மோனத்தில்,
கூக்குரல்களுக்கும் மோட்டார்வண்டிகளுக்கும்
செவிமடுக்க மறுத்தவளாய்.
தடாகத்தின் தண்ணீரில் சில்லிடுகிறது உடல்.
இலையொன்று விழுகிறது இமையின் மேல்.
நிலவுக்கு மட்டுமே காட்டுகிறேன் எனது
நிர்வாணத்தை ரகசியமாய்.

 

Advertisements