10531912-girl-on-bike-grunge

மூன்று பக்கங்களும் கடல்களும் ஒரு பக்கம் மணற் கும்பிகளும் என எங்கள் ஊர் ஒடுங்கியதும் சிறியதும். ஆகவே, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஞாயிறு தேவாலயம் என எங்கே போவதென்றாலும் (இந்த இடங்கள் தவிர வேறெங்கும் போறதேயில்லை) கால்நடை தான். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது. வழியில் எங்கேயாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய் கண்டால் கல்லெறிவதோடு சரி.

சைக்கிள் ஓடும் யாரைப்பார்த்தும் ஆசையே வரவில்லை. எப்பிடித்தான் ஓடுறார்களோ? என ஆச்சரியம் தான். பக்கத்து ஊரிலிருந்து விஞ்ஞானம் படிப்பிக்க வரும் ரீச்சர் தங்களைத் திட்டுவதைக் காரணமாகக் கொண்டு ரீச்சரின் சைக்கிளை என் வகுப்புப் பொடியங்கள் சிலர் ரயறை வட்டாரிக் கூரால் குத்திக் காற்றை இறக்கிவிடுவார்கள்.அதுவும் பள்ளிக்கூடம் விடும் நேரமாகப் பார்த்து செய்வாங்கள். ரீச்சர் மத்தியானம் 2 மணிக்குப் பசியோடு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்து போவதை அடிக்கடி பார்த்துப் பார்த்து அது ஒரு பாதுகாப்பில்லாத வாகனம் என்ற நினைப்பு எனக்கு.

1990 ஆகஸ்டில் இராணுவம் காரைநகரிலிருந்து முன்னேறி வந்து வழியிலிருந்த ஊர்களைத் துப்பரவு செய்து கொண்டு கோட்டையை நோக்கிப்போன போது எங்கள் வீடும் எரிக்கப்பட்டது. ஆகவே,  ஊரிலுள்ள தூரத்து உறவினர் வீடொன்றில் தஞ்சமடைந்தோம். அங்கே 5 பிள்ளைகள் ஒன்றிரண்டு வயது வித்தியாசங்களோடு ஒவ்வொரு சைஸில் இருந்தார்கள். ஒரு பெரிய சைக்கிளை வைத்துக் கொண்டு எல்லோரும் மாறி மாறிக் கடைகளுக்கு ஓடித்திரிந்தார்கள். பள்ளிக்கூடமும் தரை மட்டமாக இடிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் பள்ளிக்கூடமும் இல்லாமல் ஊரில் ஆட்கள் நடமாட்டமும் குறைவாக கலகலப்போ பொழுது போக்கோ இல்லாமல் தானிருந்தார்கள்.

திடீரென ஒரு நாள் கூட்டமாக ஏதோ திட்டத்தோடு என்னை நோக்கி வந்தனர். ‘தர்மினியக்கா உங்களுக்குச் சைக்கிள் ஓடத் தெரியுமா?’ எனக் கேட்டனர். நானும் அப்பாவியாகத் ‘தெரியாது’ என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கோ புளுகம். புதுசாக ஒரு விளையாட்டுக் கிடைத்து விட்ட மாதிரி ஐந்து பேருமாகச் சேர்ந்து முடிவெடுத்தாற் போல ‘அப்ப தர்மினியக்காவுக்குச் சைக்கிள் ஓடப் பழக்குவம்’ என்றார்கள்!

அவர்கள் 2 பெண்பிள்ளைகளும் 3 ஆண்பிள்ளைகளும் எல்லோரும் அந்தச் சைக்கிளை விட உயரம் குறைவு.நானோ சைக்கிளில் ஏறி இருந்தால் கால் நிலத்தில் முட்டுகிற உயரம். நிலத்தில விழுந்து படுத்த மாட்டைஅடித்துத் தள்ளி எழுப்புவது போல அடம் பிடித்துக் காலை பெடலில் வைக்காமல் நிலத்திலேயே ஊன்றிக் கொண்டு நின்ற என்னை தள்ளு தள்ளு எனத் தள்ளினார்கள். அழுகை வருவது போல நடித்தாலும் அவர்கள் நம்புவதாயில்லை. கிடைத்த பொழுது போக்கை எப்படி விடுவார்கள்?

அது சிறு கற்களும் ஊரியும் மணலுமான றோட்டு. ‘நாங்களே ஓடுறம். இவ்வளவு பெரிய ஆள் உங்களுக்கு ஓடத் தெரியாதா?’ எனப் பழிப்புக் காட்டினார்கள். வேறு வழியில்லாமல் ஒவ்வொரு நாளும் காலை மாலையென அவர்களது பொழுது போக்கிற்கு ஆளானேன். பின்னால் தள்ளிக் கொண்டு வந்தவர்கள், ஒரு நாள் ‘தனியாக ஓடுறீங்கள்’ எனக் கத்தியபோது திரும்பிப் பார்த்துக் குப்புற விழுந்து ஒரு ரூபாய் அளவுக்கு இரண்டு முழங்கால்களிலும் காயங்கள்.

ஓரளவுக்கு ஓடப்பழகி சைக்கிள் ஓடுவது கம்பீரமான எண்ணத்தைத் தந்தது. அந்த நேரம் யாழ்நகரில் உயர்தர வகுப்பு படிக்கவும் திரும்பவும் ஊரைவிட்டு அகதியாக ஓடவும் வேண்டி வந்தது. வேறு வழியேயில்லை. கட்டாயம் சைக்கிள் ஓடத்தான் வேண்டும்.வேறு எந்தப் போக்குவரத்து வசதியும் அப்போது இல்லை. 2000ரூபாய் கொடுத்து இரண்டாம் கையாக ஒரு லேடீஸ் சைக்கிள் வாங்கினதும் செட்டைகள் இரண்டு முளைத்தன போலிருந்தது.

பிறகு, யாழ்ப்பாணத்தில் பாடசாலை, ரியூசன், கடைகள், நண்பிகளின் வீடுகள் என வீட்டிலிருக்கும் நேரத்தை விட சைக்கிளில் இருக்கும் நேரமே அதிகம். சும்மா ஏதாவது ஒழுங்கைக்குள் சைக்கிளை விட்டு எங்கேயாவது மிதந்து ஏதாவது புது இடத்தை, புதுக்குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதெல்லாம் உண்டு.

சைக்கிள் வாங்கிய புதிதில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பிறகு ஒவ்வொரு ஞாயிறும் எனப் பழந்துணியெடுத்துத் தூசு துடைத்து எண்ணெய் போடுவேன். அதன் பிறகு அது மழையில் கழுவப்பட்டால் தான். சைக்கிளுக்கு காற்றுப்போனால் அதுவும் ஒட்டு என்றால் ஒட்டக் கொடுத்துவிட்டு றோட்டில் காவல் நிற்கும் போது தான் மற்றையவர்களின் சைக்கிள் காற்றுப்போகாமல் ஓடுது ஏன் என்னுடைய சைக்கிள் அடிக்கடி காற்றுப்போகுது என கவலை வரும்.

அப்போது பின்னால் கரியரில் எந்தப் பெரிய ஆளையும் ஏற்றிக்கொண்டு திரியவும்பழகிவிட்டேன். ஆகவே வயதான அயல் பெண்கள் எனது பாட்டி என அவர்களை வைத்து ஏற்றி இறக்குவது ஒரு சமூகசேவை போல நினைப்பு. பொருட்கள் எல்லாம் தட்டுப்பாடான காலம்.சைக்கிள் ரியூப் ஒன்றைப் பிறந்தநாள் பரிசாக என் பாட்டி முறையானவர் தந்தார்.

மழை – நல்ல வெய்யிலென்றால் ஒரு கையில் குடையைப் பிடித்தபடியே எவ்வளவு தூரமும் சைக்கிள் ஓடவும் தேர்ச்சி பெற்றாச்சு. அப்போதெல்லாம் பொதுமக்களின் வாகனம் சைக்கிள் மட்டும் தான். ஆகவே றோட்டில் அதிகம் சைக்கிள்கள் தான். என்ன தான் காற்றடித்தாலும் முழங்கால் வரைக்குமான பாவாடையோ சட்டையோ பறக்கப்பறக்க ஒற்றைக்கையால் அதைப் பிடித்தபடி ஸ்ரைலாகவும் ஓடுவோம். ஆனால் ஆண்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியதேயில்லை.  சைக்கிளோடும் போது பக்கத்தில முட்டுவது போல வந்து ஏதாவது பகிடி சொல்லிவிட்டுப் போவார்கள் அல்லது தாண்டிப்போய் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். சைக்கிளில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட சொல்லிவிட்டுப் போவார்கள்.அவ்வளவும் தான் நல்ல பொடியங்கள்! நாங்களும் இரண்டு பேர் சேர்ந்துவிட்டால்  ஒரு பொடியன் முன்னால் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டால் வேகமாக உழக்கிக் போய் முந்திவிட்டு திரும்பியும் பாராமல் போய்விடுவோம். சில நேரங்களில் தனியாக ஒரு ஆள் மாட்டிவிட்டால் நாங்களும் ஆட்கள் அதிகமென்றால் ஆளை முந்தவிடாமல் வெருட்டுவதும் நடக்கும்.

1995 இறுதியில் திடீரென யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சிக்கு அகதிகளாகப் போனதும் இதே சைக்கிளோடு தான்.சைக்கிளில் எவ்வளவு பொருட்களை வைத்துக்கட்ட முடியுமோ…. அவ்வளவு பொருட்களை மட்டுமே நாம் கொண்டு அலைந்தோம். அதே சைக்கிளில் தான் கிளிநொச்சியிலும் இடம் பெயர்ந்திருந்த உறவினர்களைத் தேடிச்சுற்றியதும் பாலைப்பழம் பிடுங்கக் காட்டுக்குப் போனதும். கடைசி வரை எங்களைப் போலவே அகதியாக ஊர் ஊராக மாவட்டம் மாவட்டமாக அதுவும் ஓடித்திரிந்தது. இப்போது யூலை-ஆகஸ்ட் மாத வெய்யிலில் எப்பவாவது சில நாட்கள் மைதானத்தில் சைக்கிள் ஓடி விளையாடும் வளர்ந்த பிள்ளைகளைக் கெஞ்சிக்கேட்டு வாங்கி 2 ரவுண்ட் அடித்துவிட்டுக் கொடுத்துவிடுவதோடு சைக்கிள் ஓட்டம் முடிந்துவிடுகிறது.

-தர்மினி-

Advertisements