Thankamayil 1-சி.புஷ்பராணி-

வெளியிலே  நாய்கள்   குரைக்கும்  சத்தம்  அமளியாகக்  கேட்டது. தட …தடவென்று    யாரோ   ஓடிவரும்  ஓசை. ‘இது    வழக்கமான  ஒன்றே… ‘ திரும்பிப்  படுத்தேன். எங்கள்   வீட்டு   ஜெஸியும்    குரைக்கும்   சத்தம்   காதை    அறுத்தது. யாரோ   கதவைப்   பலமாக   இழுப்பது   போல்  இருந்தது…

சிறு   சத்தமென்றாலே   உடனே   எழும்புவது   நான்தான். தூக்கம்    கண்ணைத்   திறக்கவிட   மறுக்க  ”யாரது” என்று   குரல்  கொடுத்துப்   பார்த்தேன்…..பதில்   வராததால்    கையில்   டோர்ச்சை   எடுத்துக்  கொண்டு   கதவடிக்குப்   போனேன்.    ஜெஸியும்   பின்னாலேயே    வந்தாள்.
இணைப்புச்  சங்கிலியைத்  திறந்து  பார்த்தால், மகளைத்  தோளில்  சாய்த்துக்கொண்டு  மிரட்சியுடன்  தங்கமயிலக்கா. ”இந்த   நேரத்தில்  இவ. என்ன   நடந்திருக்கும் ?”
”உள்ளே   வாங்கோ ”   வீட்டுக்குள்   அழைத்துச்  சென்றேன்.

முன்  விறாந்தையால்   போனால்   நடுக்  கூடத்தில்  படுத்திருக்கும் அம்மாவையும்,தங்கைகளையும்    கடந்து    போகவேண்டும். அசந்து   நித்திரை   கொள்பவர்களைக்   குழப்பக்   கூடாது   என்ற   எண்ணத்தில்  பின்   பக்கத்தால்   கூட்டிப்   போனேன்.”யாரையும்    எழுப்பாமல்   அங்கேயிருந்து    கதைக்கலாம்   வாங்கோ…” சொன்னபடியே    அக்காவைக்   கவனித்தேன்.

சீலையெல்லாம்    மண்   பிரண்டு   ஊத்தையாயிருந்தது  ….இடது   முழங்கையில்    உரஞ்சுப்பட்டு    மண்ணோடு   இரத்தமும்    கலந்திருந்தது..குழந்தை   பயத்துடன்   மிரண்டு   பார்த்தாள்…கன்னங்களில்   வழிந்து   காய்ந்த  கண்ணீர்க்  கோடுகள்… ”என்ன   நடந்தது”  மெதுவாய்  கேட்டேன்.விக்கி   அழத்தொடங்கிய    தங்கமயிலக்காவிடம், ”அழுகிறதை     விட்டிட்டு   என்ன   நடந்ததெண்டு   சொல்லுங்கோ”   ”அவன்    சின்னத்துரை    வீட்டுக்குள்   வந்து…”….மேலே   சொல்ல  முடியாமல்   இன்னும்   அழுதார்…  நிமிர்ந்து   நேரம்   பார்த்தேன்.. சுவர்க்  கடிகாரம்   காலை   நாலு   மணி   தாண்டியதைச்   சொன்னது..” கொஞ்ச   நாட்களாகவே   அவன்   என்னைப்பார்த்து   இளிப்பதும்,  பின்னுக்கு   வாறதும் எனக்குப்   பிடிக்கவேயில்லை. …இண்டைக்கு   விடியக்   காத்தாலை   வீட்டுக்குள்   வந்துவிட்டான்.என்ரை    காலைப்   பிடிச்சுக்   கெஞ்சி   என்னைத்   தன்   வைப்பாட்டியாய்   இருக்கும்  படி   வெறியில்   உளறுகிறான்…

அவன்   நிறைவெறியில் இருந்ததாலை  தட்டிக்   கதவைத்  திறந்து  கொண்டு   பிள்ளையோடை   ஓடிவந்து   விட்டேன்…   அந்தப்   பொறுக்கி   ஓடமுடியாமல்    விழுந்துவிட்டான்…எங்கை   போறதெண்டு   தெரியாமல்    இங்கை   வந்துவிட்டேன்…
அம்மா   எதுவும்   சொல்லுவாவோ…” தயக்கத்துடன்   கேட்டார். “இல்லை    அவ   ஒண்டும்   சொல்ல  மாட்டா”   ஒரு  பாயைக் கொண்டுவந்து   போட்டேன்   குழந்தையைப்   படுக்க   வைக்கும்படி   சொல்லிவிட்டுக்   குசினிக்குள்   தேநீர்   போடப்  போனேன்.

தலை   குழம்பிக்   கலங்கிய   கண்களுடன்   சுவரோடு   சாய்ந்து   உட்கார்ந்து  தேநீரைக்   குடித்துக்  கொண்டிருந்த    தங்கமயிலக்காவையே   பார்த்துக் கொண்டிருந்தேன்.…அந்த   மங்கிய   வெளிச்சத்தில்   திறமையான    சிற்பியொருவன்   செய்த   சோகம்  ததும்பும்   அழகிய   கருஞ்சிலை போல்    தெரிந்த   இந்தத்   திருத்தமான   வடிவுதானே     இந்தப்   பொம்பிளைப்  பொறுக்கிகளை   இப்படி   அலையவைக்குது!

”நீங்களும்    படுங்கோ ” ஒரு   தலையணையைக்   கொண்டு  வந்து    கொடுத்தேன்.  ”இல்லைப்  பிள்ளை..  விடியச்   சூடை   தெரிக்கப்    போகவேணும்   …படுத்தால்   நித்திரையாய்    போய்டுவன்   ”….சுவரில்   சாய்த்த  படியே   கண்ணை   மூடியிருந்த  போது      மெல்லொளியில்  மூக்கில்  பேசரி   மின்னியது. ஆறு   மணியளவில்   பிள்ளையையும்   தூக்கிக்  கொண்டு   கிளம்பிவிட்டார்…..

என்னிடம்    சட்டை   தைப்பதற்காக    வீட்டுக்கு   வரும்   இந்த   அக்காவை    நான்  சிறுமியாயிருந்த   காலத்தில்   இருந்தே   எனக்குத்  தெரியும்.   வீட்டுக்கு   வரும்  போதெல்லாம்   இவ    சொல்லும்    கதைகளில்   இருந்தே   இவ  பற்றிய   துக்கங்கள்    என்னுள்   பதிந்து   விட்டன.    எனக்கு   மட்டுமல்ல   என்  தங்கைகளுக்கும்   இவவின்   அன்பான   குணமும்   கள்ளமில்லாப்   பேச்சும்   பிடிக்கும்.

சின்ன   வயதில்    தாயை   இழந்த   இவ   ஒன்றுவிட்ட    அக்கா   ஒருவரின்   செல்லப்   பிள்ளையாக   வளர்ந்தது    ஒரு  பொற்காலம்.  அந்த   அக்காவுக்குப்   பிள்ளை இல்லாததால்    ஏகத்துக்கும்   செல்லம்.கடற்கரையை   ஒட்டியே   இவர்கள்   வீடு  இருந்தது.கடற்கரைப் பக்கம்   தம்பி – தங்கைகளோடு   விளையாடப்   போகும்   போது  எங்களைக்   கூப்பிட்டுக்   கதை  கேட்பார்.

பின்னொரு  நாள்   இவவை   வளர்த்த   அந்த   அக்கா   இறந்து   , இறுதி   ஊர்வலம்    எங்கள்   வீதி வழியால்   போனதும்   நினைவில்  இருக்கு. ..பிறகெல்லாம்   கடற்கரைக்கு    நாங்கள்   போகும்   போது   தங்கமயிலக்காவைப்   பார்க்கமுடியவில்லை.   எங்கு   போனா   என்ற   விபரமே   எனக்கு   அப்போது   அறியமுடியவில்லை…அது  பற்றி   எனக்கு   ஆர்வமும்  இல்லை.

அதன்   பின்னான    கதைகள்   தங்கமயிலக்கா    கூறத்தான்   கேட்டிருக்கின்றேன். வளர்த்த   அக்காவும்   இல்லாமல்   போனபின்  , ஒன்றுவிட்ட   அண்ணன்   ஒருவர்    தன்   வீட்டுக்குக்  கூட்டிப் போய்விட்டார்  …அவர்   கொஞ்சம்   வசதி   கொண்டவர்.  அவர்  குடும்பமே    பெரிது…தொழில்   நிமித்தம்   பல   பேர்   அவர்   வீட்டில்   தங்கியிருந்தனர்.எல்லோருக்கும்    சேர்த்து   வீட்டில்   சமையல்   நடக்கும்  ..அண்ணிக்காரி    நோயாளி.

தங்கமயிலக்கா   உணர்வுகள்   ஏதுமற்ற   குரலில்   சொன்னவை  ….”வீட்டு   வேலைகள்   எல்லாமே   என்   தலையிலேயே   குவிக்கப்பட்டன…சம்பளமில்லாத  வேலைக்காரியானேன்…வெள்ளாப்பில்   அண்ணி   என்னை   எழுப்பிவிடுவா..பள்ளிக்குப்   போகும்   பிள்ளைகளுக்கான    சாப்பாடு…மற்றவர்களுக்குத்    தேத்தண்ணி   போட்டுக்   கொடுப்பது    ,இடியப்பம் ,  பிட்டு   அவிப்பது    எண்டு   வேலை   பிடுங்கித்  தின்னும். சட்டி   பானைகள்   கழுவி  , உடுப்புகள்   தோய்த்து   ……இவையெல்லாம்   முடிந்து   நிமிர   முன்   …மத்தியானச்   சாப்பாட்டுக்கான   வேலையள்     இடுப்பை   முறிக்கும்… சின்ன   வேலைகளை   அண்ணி   செய்வா..தேங்காய்   திருவுவது,  இடிப்பது, அரைப்பது  ,கூட்டுவது   கழுவுவது    எல்லாம்   நான் தான்.கதைப்புத்தகங்கள்    படிப்பது   இங்கை   வந்தபின்   இல்லாமல்   போச்சு…அதுக்கு   நேரம்   எங்காலை…..இரவுச்   சாப்பாடு   முடிந்து   பாயில்   போய்   விழும்போது   சொர்க்கம்    கண்ணுக்குள்   வரும்.

இந்த   அண்ணன்   வீட்டில்  இருக்கும்   காலத்தில்தான் ,பரமேஸ்வரன்   வலியப்   பெண்   கேட்டுத்   தானே   நகைகள்   போட்டுக்   தங்கமயிலக்காவைக்   கல்யாணம்  செய்தான்.

கணவனோடு   வாழ்ந்த  இன்பமான   நாட்கள்   பற்றி   மனம்   கலங்க   அக்கா   விபரித்தவை  எல்லாம்    நெகிழ்ச்சியின்   வெளிப்பாடு….”பரமேஸ்வரனும்  பார்வதியும்  போலத்தான்   சந்தோஷமாக   இருந்தோம்..அந்தக்   கண்கெட்ட   கடவுளுக்கு   என்னைப்  பிடிக்கவில்லை..  இரண்டு   வருசத்துக்குள்ளை   என்ரை    சீமானைப்   பறிச்சிட்டானே…..”   அக்காவின்   கண்கள்   கலங்கும்.

‘  ”அந்தப்   பாழாய்ப்  போன   சூறாவளி   ஏன்   வந்தது……யமன்  போல   வந்து   இப்பிடி   என்ரை   வாழ்க்கையைச்   சிப்பிலியாட்டிட்டுதே  ….புலம்பித்   தீர்ப்பார்….

நெஞ்சைக்    குதறியெடுக்கும்  சத்தத்துடன்   ஓங்கார மிட்டுப்   பேயாட்டம்   போட்ட   அந்தக் கொடுங்காற்றின்   அசுரக்   கொலைவெறிக்குப்   பலியானோர்    எண்ணுக் கணக்கற்றோர்….

அன்று   இரவு   எமது    ஊரிலிருந்தும்  அயல்   கிராமங்களில்   இருந்தும்    மீன்  பிடிக்கச்  சென்றோர்   எவருமே   திரும்பவில்லை….கணவனை   இழந்தோர்   ,   பிள்ளைகளைப்   பறி  கொடுத்தோர்   எனப்   பெண்கள்   விடிந்ததும்    வீதிகளில்   விழுந்து   கதறிக்   கூக்கிரலிட்டது    எனக்குள்   பதிந்திருக்கும்   பெரும்  சோகப்பதிவாகும்.

வயிற்றில்   குழந்தையுடன்   கையில்   ஒன்றரை   வயதுக்  குழந்தையுடன்    மீண்டும்   வெறுமைக்குள்   தள்ளப்பட்ட   தங்கமயிலுக்குக்   கண்ணீர்  துடைக்கவும்   எவருமில்லாதது    போனதுதான்    பெரும்  துன்பம்.

”நீயும்   பிள்ளைத் தாய்ச்சி   …கொஞ்சநாள்    பிள்ளையை   நான்   வைச்சிருக்கின்றேன்…”  மாமியார்   குழந்தையைத்   தன்னோடு   கொண்டு  போனாள்…”பேரனிலை   மாமிக்குச்   சரியான   அன்பு”….பூரித்தவளுக்குப்   புரியவில்லை   மகன்   இனித்   தன்னோடு   வரப்போவதில்லை  என்று….இதைத்   தெரிந்துகொள்ள    அவளுக்குப்   பலவருடங்கள்    தேவைப்பட்டன.

இரண்டாவது   மகன்   ரவியைக்   கையில்   பிடித்துக்கொண்டு    மீன்   தெரிக்கும்   வலைகளில்   இருந்து    மீன்களை   எடுத்தல்     வேலைக்குப்   போய்வரும்   வழியில்   சுந்தரத்தின்   பார்வை பட்டது…..தூரத்து    உறவினனான   அவன்   பேச்சும்   அன்பும்   அவளுக்கு    இதமாகவிருந்தன.”உனக்கு   வாழ்வு   தரப்போறேன்  ” தடாலடியாக   ஒருநாள்   அவன்   சொன்னபோது ,  தங்கமயில் மறுக்க மனமின்றித்   தடுமாறினாள்.

வீடு   வந்தவள்   கதவைச்   சாத்திவிட்டுப்    பெருங்குரல் எடுத்து   அழுதாள்…பரமேஸ்வரனும் தானும்   சோடியாக   இருக்கும்   புகைப்படத்தைக்   கையில்   வைத்து   அதனைத்   தடவினாள்….அவள்   அழுகை   ஓய  நீண்ட   நேரமானது.

மாமியாரின்    புறக்கணிப்பு .தனிமரமாய்   நிற்கும்   கையறுநிலை….அவள்   இளமை   எல்லாம்   சேர்ந்து   அவளை   ஒரு   முடிவுக்குள்   தள்ளியது….சுந்தரத்தோடு    ஊரைவிட்டே   போய்   விட்டாள்  …ரவியையும்    கொண்டுபோக   மறக்கவில்லை… ”இங்கிருந்தால்    அம்மா   விடமாட்டா…”என்று    சுந்தரம்   வற்புறுத்தியதும்,அவன்  மீது   கொண்ட   நம்பிக்கையும்   மறு   யோசனைக்கு   இடம்  தரவில்லை.

thankamayil2சுந்தரத்தின்    பெற்றோர்   போய்  நின்றது    தங்கமயிலின்   வீட்டு   முற்றத்தில்   ..”என்ரை   பிள்ளையை   மருந்து   போட்டு   உன்  மருமோள்   கொண்டு  போய்விட்டாள் …”சுந்தரத்தின்    தாயின்   குரல்   பக்கத்து   வீட்டுக்கெல்லாம்   கேட்டது.   ..”அந்தத்   தோறையைப்   போய்   எங்கைஎண்டாலும்    தேடு….இங்கை   ஆரும்   வரக்கூடாது…”….மாமியாக்காரி   குரல்   சன்னதம்   கொண்டது.

அவன்   அண்ணன்  தம்பிகள் சல்லடை   போட்டுத்   தேடிச்   சுந்தரத்தை   இழுத்துப்   போனார்கள்  . போனவர்களால்    காறித்   துப்பப்பட்டு  அடியுதைக்கு   ஆளாகி நின்ற  வலியைவிடச்   சுந்தரம்   அடிமாடு போல    இழுத்துச்   செல்லப்பட்டதும்  …அவன்    எதுவுமே   பேசாமல்   மௌனம்   காத்ததும்   ஒருவித   ருத்திரத்தை    அவளுக்குள்   பரப்பியது…..கண்ணீர்   அது பாட்டுக்கு   வழிய  மகனைத்   தாவிக்   கையில்   அள்ளினாள்  ….

மீண்டும்   அவள்   ஊருக்குள்   கையில்   இரண்டாவது   மகனுடனும்   வயிற்றில்   இன்னோர்   குழந்தையுடனும்   வந்தபோது    அவளுக்கு   ஆதரவாகக்   குரல்கொடுக்க    இரண்டொருவர்   இருக்கத்தான்   செய்தனர்….மூத்த   மகனைத்   திருப்பித்  தர   மறுத்தே   விட்டாள்     மாமியார்.

ஒருநாள்   மகனுக்குத்   தின்பண்டம்   செய்துகொண்டு   பார்க்கப்  போனாள் …”வேசை   கையாலே   எதுவும்   வாங்கக்கூடாது ”….பேரனை   இழுத்துக்கொண்டு   போனாள்   மாமியார்….”நல்லா   வைச்சிரு   உன்  பேரனை”  சினத்துடன்    வந்தன   வார்த்தைகள்.

சுந்தரத்துக்கு    உடனடியாக  இன்னோர்   பெண்ணுடன்   திருமணம்   நடந்துவிட்டது.கேள்விப்பட்டவள்    துடிதுடித்துப்   போகவில்லை.வெறுப்பில்   காறித் துப்பினாள்…”பயந்த   நாதாரி…இவனை   நம்பின   என்னைச்   செருப்பால்   அடிக்கவேணும் ”   உடம்பெல்லாம்    நெருப்புப்   பிடித்ததுபோன்ற  வெம்மை.

மூத்தவன்   பள்ளிக்குப்   போகும்போது   வழியில்  கண்டு   கொஞ்சப்போனாள் ….”சீ….போ” தள்ளிவிட்டுப்  போகும்  மகனைக்   கண்  கலங்காமல்   பார்க்க  முடியவில்லை.

அவளின்   இயல்பான   குணங்கள்    எல்லாமே   கொஞ்சம்   மாறிவிட்டன…யாரையாவது   பற்றிப்   படரவேண்டும்   என்ற  தவிப்பு  …மின்னுகின்ற   அவள்  கண்களில்   கொப்பளித்துத்   தெறிக்கின்றது…நான்கு   வயது   நிரம்பிய   இரண்டாவது   மகனையும்  .இரண்டே  வயதான   மகளையும்   கூட்டிககொண்டு    தன்னைவிட   வயது  குறைந்த   கனகுவோடு    மீண்டும்   வேறு   ஊருக்குக்   கிளம்பினாள்…”எப்படியும்   இவனை   என்னோடு   வைத்திருக்கவேண்டும்” ஒருவித   வெறி   அளவு  கடந்த   அன்பையும்   .அக்கறையையும்   கொட்டவைத்தது.வைத்திருந்த    காசில்   அவனுக்கு   விதம்விதமாக   உணவு   செய்து   கொடுத்தாள்…

இவனையும்   பெற்றோர்   கண்டுபிடித்து  விட்டனர்…அவனுக்கும்    திருமணம்   சிக்கலின்றி   நடந்தேறியது...ஆண்   எத்தனை  பிழை விட்டாலும்  அவனுக்குப்   பெண்  கொடுக்க   நான்  ..நீ   என்று   வரிசை   கட்டி   நிற்கிறார்களே…

இப்போது    கடற்கரை   தான்   அவள்   உலகமானது   பஞ்சிப்படாமல்   வேலை செய்தாள் .மனக்கொதிப்பெல்லாம்    வேலை   செய்வதில்   கரைவது  போன்ற   பிரமை… மீன்   வாங்கிக்   கருவாடு   போட்டும்  விற்றாள் …செல்லம்மா  ஆச்சி   இவளுக்கு   அரவணைப்புக்   கொடுத்தாள். ஆச்சி   வீட்டிலேயே   பிள்ளைகள்   பெரும்பாலும்   தங்கினர்.

பின்னால்  விட்டுக்   கதைப்போர்   இவளுக்குத்   தூசி.இன்னோர்   இளைஞனை    இவள்   தன்  வீட்டில்   வைத்திருந்தபோது   அவனின்   தாய்-  தந்தையர்   மிரண்டு  விட்டனர்…    அவனும்   உறவினரால்   இழுத்துச்   செல்லப்பட்டு    …..வழக்கம்   போல்தான்  …..

வளர்ந்த   பெடியங்களை    வைத்திருப்போர்    தங்கமயிலோடு   பழகவே   அஞ்சினர்….ஊர்   வாலிபர்கள்   மத்தியில்   தங்கமயிலின்    உடல் அழகும்  ..அதன்  சுகமும்   அலசிப்   பேசப்பட்டன…ஒரு   தடவையாவது    அவளைத்   தழுவி   அனுபவிக்க   வேண்டும்   என்ற  வெறி    பல   இளசுகளை    ஆட்டிப்படைத்தது…

தங்கமயிலிடம்    ஒரு காதல் மனமிருந்தது. தான்   விரும்பாத   எவனையும்   ஏறெடுத்தும்   பார்க்கமாட்டாள்…எவனிடமும்    கைநீட்டி    எதுவும்   வாங்கியதும்   கிடையாது. தன்னோடு    வைத்திருக்க   விரும்பியோருக்குத்   தன்  கைப்   பணத்தையே   கொட்டிக்   காலியாக்கினாள்…..

பறக்கும்   வருடங்களோடு    ஊர்ப்  பெடியன்களின்    மட்டுமல்ல   சில   பெரிசுகளின்   ஆசையும்    தங்கமயிலுக்குப்   பின்னால்   ஊர்கின்றது…..சில   பெடியங்கள்   அவரின் குடிசை  தேடிப்போய்த்   திட்டு  வாங்கித்   திரும்பியிருக்கின்றனர்.

பிள்ளைகளும்   வளர்ந்துவிட்டனர்.
பிள்ளைகளைச் செல்லம்மா   ஆச்சி   வீட்டில்   விட்டுவிட்டு  மீண்டும் ஒரு  வாழ்க்கை  தேடி  ஆறுமுகத்தைக்   கைப்  பிடித்தபோது   பிள்ளைகள்   கோபம்   கொண்டனர்.  ஆச்சி   சினத்தின்   உச்சிக்கே   போனாள்.   மூத்த   மகன்   ஆவேசத்துடன்    தாயைத்   தேடித்   திரிந்தான்….

ஒருநாள்   மத்தியானம்   வழியில்   பார்த்துவிட்டான்   …பெரிய   பூவரசந்தடியொன்றை   முறித்தெடுத்து.   .”சனியனே  செத்துத்   தொலை…உயிரோடு   இருக்க   உனக்கு   வெட்கமில்லையா?நாங்கள்   எப்பிடி   வெளியில்   தலை   காட்டுறது..” தடி   பிய்ந்து   போகுமட்டும்   விளாசியடித்தான் …..நின்றவர்களின்    தலையீட்டால்    மேலும்   அடிவிழவில்லை.

பலர்   பார்க்க,   ஓர்  அவமானச்   சின்னம்  போல்   குறுகி நின்ற   அவளுக்கு   உடலிலிருந்து    வடிந்து  கொண்டிருக்கும்   இரத்தமோ   …வலியோ   எதுவுமே   உறைக்கவில்லை….அவனைப் பெற்றபோது   வடிந்த   உதிரமும்  தான்   ஊட்டிய   பாலுமே    இப்போது   வடிவது போன்ற   உணர்வில்   வெறுமை கொண்டாள்.

மணலில்   வெறும்  காலுடன்   புதைய  நடந்தவளுக்கு     மணலும்  சுடவில்லை….”அழுகின்றேனா   நான்”…பெருகும்   விழி நீரைச்   சீலைத்   தலைப்பால்   துடைத்தாள்.

(பெயர்கள் மட்டுமே கற்பனை)

நன்றி :ஆக்காட்டி -10

 

Advertisements