karai

தர்மினி

கரை
—————
அலைகளை அனுப்பிவிட்டு
அமைதியானது நடுக்கடல்
மோதிய அலைகளின் சிதைவுகளில்
கரைந்து கொண்டிருப்பது
நான்
கடலுக்கென்ன?
அது ஆழமாய்
அழகாய்
பச்சையாய்
நீலமாய்
மெளனமாய்
கொந்தளிப்பாய்
அவ்வப்போது தோற்றமளிக்கிறது.
கரையில்
ஒரு போதும் இல்லாத முனகல்களோடு
தேய்வதென் காலம்.

iddaivelliஇடைவெளி
——————————
கொஞ்சம் சம்பிரதாயமாக
கொஞ்சம் இடைவெளியோடு
கொஞ்சம் விருப்புக் குறிகளோடு
கொஞ்சம் நடித்தபடி
கொஞ்சம் யாரோ போல
பழகுவதற்கு நாம் பழகலாம்.
அதுவரை
நிலத்திற்கும் வானுக்குமான
இடைவெளியோடு அளவளாவுவோம்.
ஆகவே
ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்பி விட்டு
பாட்டொன்றைக் கேட்போம்!


காலக்கெடு முடிவற்றது  kalakkedu
இன்றைப் போல்
நேற்றைப் போல்
அதற்கு முந்தைய நம் நாட்களைப் போல
நாளையைப் போல
தவிர்க்கவே முடியாமல்
தோன்றிக் கொண்டேயிருக்கின்றன
வார்த்தைகள்.
அவை
வெறுமையை நிரப்பியபடி
வானோக்கி வளர்ந்தபடி
என்னைப் புதைக்கின்றன
பாதாளத்தில்.
ஒரு குருவி அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
அனுப்பப்பட்ட அலைகள்
ஆகாயத்தில் அந்தரித்துச் செத்துப் போயின.
தீண்டாச் சொற்களின்
மெளனிப்பு நீளம் அதிகமாகிவிட்டது.
அக்காலத்தை எவ்விதம் மொழிபெயர்ப்பது?
ஆனாலும்
தரப்பட்ட காலக்கெடு
முடிவற்றது …முடிவே அற்றது…

ஓவியங்கள் : றஷ்மி

நன்றி :ஆக்காட்டி 10

Advertisements