ABBASPIX3
இன்று உலக புத்தகதினம் என்று ஆளுக்காள் பேஸ்புக்கில் எழுதி, கடைசியாக என்னையும் ஒரு குறிப்பை எழுத வைத்து விட்டார்கள். புத்தகங்கள் பற்றியும் வாசிப்புப் பற்றியும் எழுத எவ்வளவோ விடயங்கள் இருந்தாலும் உடனே ஞாபகத்திற்கு வந்தது ‘ஏழு இந்தியர்கள்’ என்ற நாவல் தான்.அதைப் பற்றி நண்பர்கள் சிலரோடு கதைத்துமிருக்கிறேன்.
   அந்தப் புத்தகத்தைத் திரும்ப வாசிக்க ஆசையாக இருக்கிறதுஎமது ஊரில் இருந்த சிறியதொரு நூல்நிலையம் தான் உலகத்தைப் பார்க்க வழியாயிருந்தது. அப்போது சரித்திர நாவல்கள், வீரகேசரிப் பிரசுரங்கள் என வாசித்துக் கொண்டிருக்கும் போதும் ஏனைய இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் அவற்றைத் தேடிப் படிக்கத் துாண்டின. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருப்பேன் என நினைக்கின்றேன்.
             கே.ஏ.அப்பாஸ் என்ற எழுத்தாளரை அப்போது தான் அறிந்து கொண்டேன். 1914-1987 வரை வாழ்ந்தவர். அவரது சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலம், இந்தி ,உருது ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டவர். சிறந்த பத்திரிகையாளராக இருந்த அதே நேரம்; தயாரிப்பாளராக இயக்குனராக வசனகர்த்தாவாகத் திரைப்படத்துறையிலும் தரமான படைப்புகளைத் தந்தவர்.
இந்நாவல் ‘சாத் இந்துஸ்தானி’ எனத் திரைப்படமாகவும் வெளியாகியது என்ற விபரமும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழெட்டுத் தடவைகளுக்கு மேலாக அதை நூலகத்தில் சென்று திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன்.
அது ஈழத்துக்கான போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம். பொலிஸ் நிலையங்களைச் சிறு குழுக்களாகச் சென்று தாக்கி அழிப்பது போன்ற விடயங்களை அறிந்து கொண்டிருந்தோம். வீடுகளிலிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதி வைத்துவிட்டு ஆயுதப் பயிற்சிகளுக்காகத் தலைமறைவாகும் காலமாயிருந்தது அது. அக்காலகட்டத்தில் அதே போன்ற கதையொன்றைக்கொண்ட அந்த நாவலைப்படித்தது மனதிற்கு நெருக்கமாகவும் இருந்திருக்கக்கூடும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாட்டின் விடுதலைக்காக ஆயுத வழிப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்த ஒரு குழுவின் கதை தான் அது. மரியா என்ற கோவாவைச் சேர்ந்த பெண் உட்பட 6 ஆண்கள். ஏழு பேரும் இணைவதும் கூட சுவாரசியமான சம்பவங்களாக இருக்கும். ஒவ்வொருத்தராக இரகசியமாக வந்து சேர்வதும் வித்தியாசமான திறமைகளும் குணங்களுமாயிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தவர்கள். ஒன்றிணைந்து திட்டம் போட்டு காடுகளில் அலைந்து ஒன்றாய் கூடி வாழ்ந்து ஒவ்வொரு பொலிஸ் நிலையமாகத் தாக்கி பிரிட்டிஷ் கொடிகளை இறக்கி இந்தியக்கொடிகளை ஏற்றுகிறார்கள்.
அப்போது அவர்களிடையில் நடக்கும் உரையாடல்கள், நட்பு, பிரிவு என கதை செல்லும்.வெவ்வேறு மாநிலத்தவர்களான அவர்கள் அனைவரும் முதலில் சந்தேகங்களுடனும் நெருங்காமலும் இருந்து பின்னர் நல்ல நண்பர்களாகின்றார்கள்.காட்டின் தனிமையில் மரியா என்ற பெண்ணை இளைஞர்களான அவர்கள் பாலியல் கவர்ச்சியுடையவளாக அணுக அடி எடுத்த வைத்த போது மரியா சொல்கிறார் ‘வாருங்கள் அவர்கள் ஒன்பது பேராயிருந்தனர்….”எனத் தொடங்கி பிரிட்டிஷ் பொலிஸார் ஒன்பது பேரால் தான் கூட்டாகப் பாலியல்வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை விபரிக்கின்றார். அதைக் கேட்ட இளைஞர்கள் தம்மில் ஒரு ஆளாய் அவரை ஏற்றுக்கொண்டு விடுகின்றனர்.மனிதர்களை நேசிக்கச் செய்யும் ஒரு சுதந்திரப் போராட்ட காலக்கதை அவ்வளவு சுவாரசியமாகவும் எளிமையான மொழிபெயர்ப்பாகவும் இருந்தது.
ஏழு இந்தியர்களின் தொடக்கமே ஆறு டாக்ஸிகள் ஒரே நேரத்தில் அந்த மருத்துவமனை வாசலில் வந்து நிற்பதிலிருந்து தான் . அங்கு மரியா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். ஆறு நண்பர்களும் சுதந்திர இந்தியாவில் வெவ்வெறு இடங்களில் தமது சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குத் தந்திகள் கிடைக்கும்.அந்தத் தந்திகள் அவர்கள் கைகளை அடைவதும் கூட நம்மை அந்தரப்படச் செய்யும் விதமான சம்பவங்களாக கே.ஏ.அப்பாஸ் எழுதியிருப்பார்.
மருத்துவமனையில் உயிர் பிரியும் இறுதிநேரத்தில் மரியாவைச் சந்திக்க வந்து சுற்றி நிற்கும் போது, நடுத்தர வயதைத் தாண்டியவர்களாக உருவங்கள் மாறி நிற்கும் அவர்கள் ஆறு பேரும் தாம் யார் யார் என அடையாளங் காண்பர்கள்.மரியா இறந்து விடுவார். ஒவ்வொரு முறையும் வாசித்து முடிக்கும் போது நானும் அழுவேன்.
இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அந்தப் புத்தகத்தின் சாரமும் சில வசனங்களும் பெயர்களும் மறக்கவில்லை.ஆயினும், திரும்பவும் ஒரு முறை அந்த வாசிப்பனுபவத்தை அடையவேண்டுமென்ற ஆவலும் தீரவில்லை. படிக்க விரும்பும் ஒரு புத்தகமாக அதைத்தேடுகின்றேன்.யாராவது ஏழு இந்தியர்களை வைத்திருந்தால் ஒரு முறை வாசிக்கத் தாருங்கள்.
தர்மினி
Advertisements