sathaikal foto

 

              முதன்முதலில் ஆக்காட்டி சஞ்சிகையில் தான் அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதையொன்றைப் படித்தேன். அதைத் போல சதைகள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக்கதைகளில் அரைவாசிக் கதைகளை சஞ்சிகைகளிலோ இணையத்தளங்களிலோ வாசித்திருந்தேன். ஆனாலும் மீளவுமொரு முறை இத்தொகுப்பில் அவற்றை வாசித்தது சலிப்பைத் தரவில்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு  களங்களாகக் கதைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.

திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்தம் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாடுகளில் வாழ்வு எனக் கதைகளைப் படித்துப் படித்து இந்தக் கதை எங்கே எப்படிப் போகப்போகிறது? எப்படி முடியப்போகிறது? என  ஊகிப்பது போல இருப்பது கூட வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்திவிடுகின்றது. ஆனால், அனோஜனின் எழுத்தில் தற்போதைய சூழலை அதை இளையோர் எதிர்கொள்வதை வாசிக்கலாம். அவை ஒவ்வொன்றும் மனித மனங்களின் ஊடாட்டங்களாக அவர்களை உலைப்பதை மனச்சாட்சியோடு உரையாடுவதைச் சரசரவெனச் சொல்லிக்கொண்டு போகும் இலாவகத்தைக் காணலாம்.

இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து வந்து, திரும்பவும் அங்கு செல்ல முடியாத நிலையிலுள்ளவர்களின் நினைவில் இருக்கும் நாட்டுக்கும் இப்போதிருக்கும் நாட்டின் நிலமைகளுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த யதார்த்தத்தை இவை போன்ற கதைகளைப் படிக்கும் போது உணரமுடிகிறது. ‘சதைகள்’ என்ற சொல் பாலியற்தொழிலாளர்களைக் குறிப்பிடுகிறது என்ற தகவலை இத்தொகுப்பையிட்டு எங்கோ நடந்த உரையாடலொன்றில் தான் அறிந்தேன். மறுபுறம், பல வருடங்களின் நாட்டு நிலமைகள் பற்றிய அறிதலின் இடைவெளி  , கற்பனையிலும் தொலைபேசிக் கதைகளாலும் நாட்டுக்கு விடுமுறைகளில் போய்த்திரும்பி வருபவர்களின் கதைகளாலும் தான் நிரம்புகின்றது.

தொகுப்பின் பின்னட்டையில் 1992இல் பிறந்த அனோஜன் என முதலாவது வரியைப் படித்தவுடனே என் மனம் கணக்குப் போடத் தொடங்கியது. 1995இல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்க்கப்பட்ட போது, அனோஜனுக்கு 3 வயது தானா? அப்படியென்றால் அவர் வளரும் போது எவ்விதமான சூழல் இருந்திருக்கும் என யோசித்தேன்.அவர் அந்நேரம் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தாரா? எங்கு பிறந்து வளர்ந்தார் என்ற விபரம் எனக்குத் தெரியாது. ஆயினும், அவர் எழுதிய கதைகளைப் படித்த போது இக்கால இளைஞர்களின் அகமும் புறமுமான நிலைகளைச் சொல்ல முனைந்த இளம்படைப்பாளியாகத் தெரிகின்றார். மிகக்குறுகிய காலத்தில் ஒரு வித மனவெழுச்சியுடன் எழுதப்பட்டவைகளைத் தொகுப்பாக்கிய புதிய சொல் பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

சாதிய ஏற்றத்தாழ்வு இல்லவேயில்லை என , சாதியால் ஒடுக்குபவர்களின் பிரதிநிதிகள் கத்திக் கொண்டிருக்கும் போது தான் ‘வேறையாக்கள்’ என்ற கதையை அனோஜன் எழுதியிருக்கிறார். ‘நீங்க வேறயாக்கள் நாங்க வேறயாக்கள்…’ எனச் சொல்லும் கதாபாத்திரம் நவீன வாழ்வில் எல்லாம் சரியாகலாம் இரத்தக்கலப்பாகும் விசயமான கல்யாணத்தில் மட்டும் அதைக் கடைப்பிடிப்போம் எனக் கறாராய் சொல்லும் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். இன்றுவரை சாதி என்ற விஷம் காற்றில் கலந்துதானிருக்கிறது.

‘அசங்கா’ என்ற சிறுகதை பரவலாக வாசகர்களின் கவனத்தைப் பெற்றுப் பேசப்பட்டது.ஒரு குழந்தையுடன் வாழும் பெண்ணின் துணைவன் வெளிநாட்டில் வாழும் போது , தனித்து வாழும் இளைஞனின் உணர்வுகளை இயல்பாக ஏற்பதும் நட்போடு உறவாடுவதும் நிகழ்கிறது. அசங்காவின் ஆறு வயது மகள் நிமினி அவர்கள் அணைத்திருந்ததைப் பார்த்ததும் இவ்விளைஞனுக்கு ஏற்பட்ட குற்றவுணர்வும் பூனை என்ற மனச்சான்றின் உருவகமும் கதையாக விரிகின்றன. அவர்களிடையில் காதலென்ற ஏமாற்று இருக்கவில்லை. ‘எப்ப உங்க அவர் வாறாராம்?’ என இவன் விசாரிப்பதும், அசங்கா ‘ஊரில அம்மா பொம்பிள பார்த்து முடிச்சுட்டாங்களா?’ என வினவுவதுமாக இயல்பான உரையாடலோடு தான் அவர்களது நட்பு தொடர்கிறது. சில தொடுகைகளுடன் இவ்வுறவை அனுமதிப்பது என்று கதை நகர்கிறது.

மேலுமொரு காதலுக்கோ இன்னொருவர் மீதான ஈர்ப்புக்கோ  துணைவனானவன் வெளிநாடொன்றில் வேலை செய்வது தான் காரணம் என்பதும் கேட்டுப் பழகிப்போன கதை. தொலை தூரத்திலோ வெளிநாட்டிலோ துணை வாழும்போது பெண் இப்படித்தான் நடப்பாள் என்பதும் பொதுப்புத்தி. அதே வேளையில் தனித்து வாழும் இளைஞனுக்கு ஒரு பெண்ணுடனான இது போன்ற உறவு ஒரு பிரச்சனையேயில்லை. ஆனால் அது அவனது மனைவி இன்னொருவனால் இவ்வாறான உறவுக்கு ஆளாகாத வரை தான் அது ஆண்களுக்கு பிரச்சனையில்லாததாயிருக்கும்.

‘பேஸ்புக் காதலி’  கதை சமகாலத்தின் ஒரு முகமாக இருக்கிறது. இரு இணையர்களின் மத்தியில் இரகசியங்களை, தனித்தன்மையை பேணுதல் மற்றும் புலம்பெயர்ந்த பின் பழைய நட்புகளைத் தொடருதலுக்கு அது உதவுவது என உரையாடல்களாக செல்கிறது. தனது துணைவன் பழைய காதலியோடு பேஸ்புக்கில் நட்பாயிருப்பதும் அதை அவன் மறைப்பதும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இருந்த போதும் மனைவி என்ற இந்தப் பெண், அவன் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதைப் பொறுக்க முடியாமல், சண்டையின் பின் பழைய மாதிரி இல்லை என மனம் நொந்து ‘எப்பிடியெண்டாலும் இரு. என்னோட அன்பாயிருந்தால் காணும்’ என்ற நிலைக்கு போகிறார். ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்ற பழமொழி அவன் தூக்கி உடைத்த லேப்டாப்பை பக்கத்து வீட்டு அங்கிளிடம் கொடுத்து அவளே திருத்திக் கொடுப்பதில் நவீனமாகிறது!

‘சித்தப்பா ஃபமிலி’  நாட்டில் வருசாவருசம் நடக்கும் சம்பவங்களிலொன்றைப் பேசுகிறது. வெளிநாட்டுச் சொந்தக்காரக் குடும்பங்கள் விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதும் அவர்கள் அங்கு எதை முன்னிட்டு  எவ்விதம் உபசரிக்கப்படுகின்றனர் என்பதும் இலங்கையலிருக்கும் ஒருவரால் எழுதப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பல வருடங்களின் பின் தம்மைத் தேடிவரும் உறவுகளை முந்தைய தலைமுறை ஆவலோடு எதிர்கொள்வதும் தற்போதைய தலைமுறை இடைஞ்சலாக அந்நியமாக உணர்வதும் உண்மை தான்.

ஊரிலிருக்கும் வீடு வளவுகளை விற்றுவிடுவது, சொத்துக்கு ஆசைப்படுவது போன்ற காரணங்களால்  வெறுப்போடு தான் அங்கு இவர்கள் பார்க்கப் படுகிறார்கள். கடன்பட்டும் விடுமுறைக்கு எனக் கஸ்ரப்பட்டு எண்ணியெண்ணிச் சேர்த்த காசை வெளிநாடுகளிலிருந்து போய் விசுக்கிச் செலவழிக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் அவ்வாறான கொழுப்பேறிய நடவடிக்கைகளைப்  புலத்திலிருப்பவர்கள் எவ்விதம் பார்க்கின்றனர் என விடுமுறைக்குச் செல்பவர்களும் யோசிக்கவேண்டும். ‘வெளிநாட்டில சொகுசாக வாழ்கிறார்கள்’ என்று நினைக்கும்படி படம்காட்டிவிட்டுவருவது இருதரப்புக்கும் நல்லதில்லை.

அனோஜனின் சிறுகதைகளில் பெரும்பாலும் கவனிக்கத்தக்க தொனியாக பாலியல் வேட்கையும் அது பற்றிய மனிதரது ஊசாட்டமும் இழைகளாய் இருக்கின்றன. இவ்வுணர்வுகள் பற்றிய உரையாடலை இக்கதைகள் திறக்குமானால் நல்லதே. ஆபாசம் எனப் பொதுவில் சொல்லப்படும் சம்பவங்களை , வர்ணனைகளைக் கதையோடு கதையாக எளிமையான எழுத்தோட்டத்தில் வாசகர்களிடம் கொடுப்பது நல்ல இனிப்பு மருந்து தான். அதே நேரத்தில் வித்தியாசமான ‘சிவப்பு மழை’ கதையும் உண்டு. சுவாரசியமாகப் புதியதாக வசனங்களை சொற்களைப் படைப்பில் வைக்கும் அனோஜன் சில இடங்களில் காலகாலமாக வாசித்தும் பாவித்தும் அலுத்துப்போன வாக்கியங்களை எழுதியிருப்பதையும் கடினமின்றிக் கண்டு கொள்ளலாம். ‘நான் அப்பா ஆகப்போறனா?’ ‘கண்காட்சியில் காணாமல் போன பையன்’ போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

பெரிய உதடுகள்- மார்புகள், உயர்த்திய கால்கள், பெண் குறிக்குக் கண் என்ற குறியீடுமாக அட்டையை வடிவமைத்திருப்பது காமம் சார்ந்த உடலாகப் பெண்ணைப் பார்க்கும் மனங்களின் பிரதிபலிப்பு. வெறும் சதைகளாகப் பெண்களை நோக்குவதன் கண்ணாடி இவ்வட்டை ஓவியம்.

        சதைகள் என்ற இச்சிறுகதைத்தொகுப்பு இலங்கையின் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல் உற்சாகமாயிருப்பதன் அடையாளங்களில் ஒன்றெனவும் குறிப்பிடலாம். இனிமேல், அனோஜன் பாலகிருஷ்ணனும் இவர் போன்ற இளம்படைப்பாளிகளும் ஈழத்து இலக்கியத்தை புதிய கதைகளில் புதிய வடிவங்களில் புதிய பார்வைகளில் கொண்டு செல்வர் என நம்புவோம்.
தர்மினி

சதைகள்- சிறுகதைத்தொகுப்பு
அனோஜன் பாலகிரஷ்ணன்
வெளியீடு  : புதிய சொல்
முதற்பதிப்பு : 2016 பெப்ரவரி
விலை :    ரூ300.00
பக்கங்கள் : 134

நன்றி : ஆக்காட்டி 11  (ஏப்ரல்-யூன் 2016)

Advertisements