தர்மினி
selvam book
       ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.
ஆனால், உள்ளே விடயங்கள் காத்திரமானவை. பாலியற்தொழிலாளர்களை நோக்கும் விதம், பயணத்தில் தற்செயலாகச் சந்தித்த அம்மா இறந்ததைச் சொல்லியழவும் ஆளில்லாத இளைஞனை ஆறுதற் படுத்துவது, இருக்க இடமில்லாத யாரென்று அறியாத ஒரு பெண்ணுக்கு எல்லோருமாக இடம் ஒதுக்குவது, மொழியறிவற்றவர்களாக உலைவது, சாப்பாட்டு நேரத்தில் அறைக்கு நண்பர்கள் வர வர உணவு போதாத நிலையிலும் உபசரிக்கச் சமையலில் திடீர்மாற்றங்களை செய்வது, ஏனைய நாட்டு அகதிகளையும் மரியாதையோடு நினைப்பது எனக் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் ஒவ்வொன்றும் மானுடநேயமும் அகதிகளின் அந்தரிப்புமாக வாசிப்புச் சுவையோடு எழுதப்பட்டிருக்கிறது.
எண்பதுகளில்-தொண்ணுாறுகளில் அகதிகளாக வந்திறங்கியவர்கள் வதிவிட உரிமை, சொந்த வீடு, வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், பிரஜாவுரிமை எனக்காலூன்றி விட்டவர்கள் வருடாவருடம் விடுமுறைக்குப் பயணங்களை மேற்கொண்டால், அது பொதுவில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த எல்லோருடைய நிலையுமென ஊரிலுள்ளவர்கள் அனேகர் நினைத்து விடுகின்றனர். ஆனால் இப்போதும் எழுதித் தீராப்பக்கங்களில் எழுதப்பட்டதைப் போல் அறைகளில் அடைந்து வேலையும் அகதிஅந்தஸ்துக்கான அலைச்சலுமாக வாழ்பவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கிறார்கள். தற்போது சிலருக்கு உறவுகள் , நண்பர்கள் என ஓரளவு ஆறுதலுண்டு. அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாமல் அதற்கான வழக்குகளோடு இருக்கும் இளைஞர்கள் பலருள்ளனர்.
இங்குள்ள ஏராளம் பலசரக்குக் கடைகளில் மற்றும் உணவகங்களில் பதிவு செய்யப்படாமல் கறுப்பில் சம்பளம் வாங்குபவர்களது துயரம் தீர்ந்தபாடில்லை. தொழிலாளருக்கான சட்டப்படியான சலுகைகள் ஏதுமற்று நாள் முழுதும் வேலை. குறைந்த சம்பளம் என முன்னொரு காலம் அகதிகளாக வந்து முதலாளிகளான தமிழ் முதலாளிகளே இந்த இளைஞர்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சட்டத்தரணிகளுக்காகவும் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்காகவும் செலவளிக்க வேண்டியவற்றுக்கும் மிச்சம் பிடித்து நாட்டிலுள்ள உறவுகளுக்கும் உதவிடவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே, இது பழைய கதைகளடங்கிய தொகுப்பென யாரும் நினைக்கக்கூடாது. எழுதப்பட்டுள்ள சம்பவங்கள் போல இன்னுமின்னும் புதிய புதிய பிரச்சனைகளும் அவலங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. இங்கு அதை அனுபவிப்பவர்களால் எழுதிவிட முடியாதளவு மன நெருக்குவாரம் இருக்கிறது. துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான். இயலுமானவர்கள் இந்தப் புத்தகத்தை ‘வெளிநாட்டில சொகுசாக வாழுறார்கள்’ எனச் சொல்பவர்களுக்கு ஒரு பிரதி அனுப்பலாம்.
Advertisements