‘ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்’-எல்லாளன்
40 இளைஞர்கள் பயிற்சிக்காக இந்தியா செல்வதற்கு என படகேறி வந்து கரையிலிறங்கி விடுகின்றனர். ஆனால் யார் பொறுப்பெடுப்பது? எங்கே முகாமிருக்கிறது எனத்தெரியாமல் ஒரு மணித்தியாலமாக இராமேஸ்வரத் தெருக்களில் ஊர்வலமாகத் திரிந்தோம் என்பதாக எல்லாளன் எழுதியிருப்பவை எல்லா இயக்கங்களும் நாட்டுக்காக என இப்படித்தான் புறப்பட்டன. அவர்களுக்கு நம்பிக்கையீனங்களும் உயிரச்சங்களும் தங்கள் சொந்த இயக்கங்களிலும் அதே நேரம் அவர்களை விடப் பலமான ஏனைய இயக்கங்களாலும் ஏற்பட்டன.
இயக்கத்தின் உள்ளே நடைபெறும் நடவடிக்கைகள் அவர்களை விரக்தியடையச் செய்தன. இதையெல்லாம் தாண்டியே பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. தம்மவரைக் கொன்றனர். அடுத்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை ஆளுக்காள் வேவு பார்ப்பதும் கொல்வதும் என நாட்டுக்காக என வீட்டை /படிப்பை/ வேலைகளை விட்டு ஓடிப்போனவர்கள் ஆயுதங்களை மட்டுமே நம்பிய போராட்டமாக மட்டுமே அது தேங்கி அழிந்தது. ரெலோ இயக்கத்தில் சேர்ந்து எந்தப் பதவியோ அதிகாரமோ அற்ற மிகச் சாதாரண இயக்க உறுப்பினராக இருந்த எல்லாளன் அன்றைய மனநிலையிலிருந்து உறவுகளுக்கு எழுதும் கடிதம் போன்ற எளிமையான வரிகளுடனும் பூச்சுகளற்றும் ‘ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்’ என்ற சுயஅனுபவங்களடங்கிய புத்தகம் இது.
அக்காலத்தில், புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு ரெலோவில் இருந்து பிரிந்த இவர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். ரெலோவிலிருந்து பிரிந்த பெண்கள் புலிகளுடன் இணைந்ததுமாக சம்பவங்களைத் தன் குறுகிய கால இயக்க வாழ்வின் அனுபவங்களில் பதிவு செய்ததும் வரலாற்றைப் புரட்டுபவர்கள் அறிய வேண்டியவை. 1982 ல் எங்கள் கிராமத்திற்கான பங்குத்தந்தையாக இருந்தவர் ஃபாதர் சின்னராசா. அதன் பின்னர் போராட்டதில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதாகிச் சிறையிலிருந்த அவரும் சிறையுடைப்பில் தப்பித்து விடுகிறார். தமிழ் நாட்டிலிருந்த போது ரெலோவிலிருந்து விலகி வழி தெரியாது நின்ற 5 பெண்களை பொறுப்பெடுத்து படிக்க உதவுகிறார். ஆனால் அதிலே 3 பெண்கள் தாம் புலிகளோடு சேர்ந்து போராடப் போகின்றோம் என இணைந்து விடுகின்றனர். அதே போல நிர்மலாவும் அவர்கள் மீதான அக்கறையோடு அவர்களோடு பேசவேண்டும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்எனக் கேட்பதைக் குறிப்பிட்டுள்ளார். ரெலோவிலிருந்து விலகி இணைந்தவர்கள் தான் புலிகளின் முதலாவது பெண்படையினர் அவர்களில் சோதியா மற்றும் சிலர் அடங்குவர் என எழுதியிருக்கிறார். அதே போல ரெலோவில் இருந்த சந்திரன் தான் ராஜீவ் கொலை தொடர்பான சிவராசன் என்பவை போன்ற தகவல்களை இதிலே குறிப்பிட்டுள்ளார் எல்லாளன்.
ஈழப்போராட்டத்திற்குப் பயிற்சிகளை வழங்குவது, கண்டும் காணாமல் விடுவது, கண்காணிப்பது, இயக்கங்களிடையில் பிரச்சனைகளைத் துாண்டிவிடுவது என இந்தியப் புலனாய்வுத்துறை என்னென்ன தந்திரங்களை தகிடுதத்தங்களைச் செய்தது என்பவற்றின் சிறு சிறு தகவல்களை ஆங்காங்கே வழங்கியிருக்கிறார். அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் போராளிகள் பற்றிய பார்வை மதிப்புடனும் அனுதாபத்துடனுமே இருந்திருக்கிறது. கியூ பிராஞ் தம் அதிகாரங்களைப் பயன்படுத்தி கல்விகற்க இடங்களைப் பெற்றுக்கொடுத்ததும் உண்டு. ரேஷன்கடை, மருத்துவமனைகளில் தங்களுக்கு முன்னுரிமையும் சலுகைகளும் அப்போது இருந்தன எனக் குறிப்பிடுபவர் இதெல்லாம் ராஜீவ் கொலையோடு மாறிவிட்டது என்கிறார்.
ஆனால், சில சம்பவங்கள் நடந்த காலத்தை நினைவிருத்திச் சரியாகக் குறிப்பிடாததும் சிலரது பெயர்களை மறந்துவிட்டதாக எழுதியிருப்பதும் ஓரளவு அதிருப்தியைத் தருகிறது. இப்படியான சிறு சிறு வரலாற்று தரவுகளை தான் கண்ணால் கண்டவற்றை இப்போதாவது எழுதிவிடவேண்டும் என நினைத்ததை பாராட்ட வேண்டும்.
ஒரு கூர்வாளின் நிழலில் – தமிழினி
                 சாவிற்குப் பின்பு தான், றொமிலா ஜெயன் என்ற பெயரில் என்னோடு பேஸ்புக்கில் நட்பாயிருந்தவர் தான் தமிழினி என்ற விடயமே எனக்குத் தெரிந்தது. அவருடைய சாவிற்குப் பிறகு நினைத்துப் பார்த்தேன். அவருடன் உரையாடலெதுவும் செய்திருக்கவில்லை. சில பதிவுகளுக்கு லைக் செய்திருந்தேன். அவர் புற்றுநோய் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்திருந்ததும் ஞாபகமுண்டு.
மாற்றுக்கருத்தாளர்கள், துரோகிகள், அரசாங்கத்தின் ஒத்தோடிகள் எனப் புலிகளை விமர்சித்தவர்களைத் துாற்றியவர்கள் இப்புத்தகத்தைப் படித்து உள்ளிருந்து இயங்கிய தமிழினி முன் வைக்கும் விமர்சனங்களை முன்முடிவுகள் இல்லாமல் சீர்துாக்கிப்பார்த்து சிந்திக்க முடிந்தால் நன்றே.
                தமிழினி , இயக்கம் … இயக்கம்… என பல இடங்களில் தான் வெளியே இருந்த ஒருவரைப்போல எழுதியிருப்பது கட்டளைகளுக்குக் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிபவர்களாக அங்கு போராளிகள் இருந்ததைக் காட்டுகிறது. ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தகத்தில் புதிதாக அறிந்த ஒரு விசயம் மாத்தையாவையும் அவரைச் சேர்ந்தவர்களையும் இருத்தி வைத்து ஏனைய முக்கிய உறுப்பினர்களை அழைத்துக்குற்றம் பற்றி ஒப்புக்கொள்ளச் செய்தது. அச்செய்கை ஏனைய தளபதிகளுக்கான பயமுறுத்தலுமாக இருந்திருக்க வேண்டும். அதிகாரத்தின் உச்சியிலிருந்த தலைமையைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலையில் தன் போன்ற பொறுப்பாளர்களே அமைதியாகவும் கண்ணீர் விட்டு அழவும் முடிந்தது என ஆங்காங்கே எழுதியிருப்பதை இயக்கத்திற்குள் நடப்பவற்றை ஓரளவாவது அறிந்தவர்கள் நம்புவார்கள்.
2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளை அண்மித்த போது அந்தப்பக்கம் நின்ற இராணுவத்தினரிடம் போய்ச் சேருவதைத்தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. அப்போது இயக்க உறுப்பினர்களும் என்னென்ன மனநிலைகளோடு தத்தளித்தனர் என்பவையெல்லாம் இந்த நுாலைப் படித்த போது இன்னுமின்னும் நம்மைக் கலங்கச் செய்பவையாகவே உள்ளன. படிப்படியான வளர்ச்சியில் ஆயுதங்களை இயக்குவதற்கான ஆட்கள் தான் தேவைப்பட்டேதேயொழிய , மக்களுக்கான போராட்டமாக அது மக்கள் மயப்படவில்லை. அது மறுவளமாய் திரும்பிச் சனங்களையே அழித்தது என்ற உண்மையைப் பதிவு செய்த தமிழினி வாழ்ந்திருக்கவேண்டும்.
இயக்கங்களிற்கு வீறுடனோ வற்புறுத்தப்பட்டோ சந்தர்ப்பத்தாலோ போனவர்கள் ஒவ்வொருவருக்கும் எழுத ஒரு சரித்திரம் உண்டு. அதெல்லாம் பார்க்கிறவர்களுக்கு துரோகத்தின் சரிதமாகவும் யுத்தத்தின் தோல்வியாகவும் தப்பிப்பதற்கான தந்திரமாகவும் அவரவர் வசதிப்படி தெரியும். ஆயினும், நம்மை மறு மதிப்பீடு செய்யவும் விமர்சனங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்குமான ஆவணங்களான இவை போன்றவை நிச்சயமாக உதவும்.
Advertisements