-புஷ்பராணி –

CC BY-NC-ND Bruno Monginoux www.photo-paysage.com www.landscape-photo.net

ந்த   மரத்தைப்  பார்க்கவே  எனக்கு  ஆச்சரியமாயிருந்தது. குளிர்  காலத்தில்  மொட்டை மரமாக …குச்சி  குச்சியாயிருந்த   கிளைத்  தடிகள்  எல்லாம்  ,நிரம்பி வழிந்து  பூத்துச்  செழித்திருக்கும்  இந்த  அதியற்புதக்  காட்சியை   என்  நாட்டில்  நான்  பார்க்கவேயில்லை. இலைகள்  இருப்பதே தெரியாமல்  விரிந்து  படர்ந்திருந்த அம்மரத்தில்   பூத்துக் குலுங்கிப்  பரந்திருந்த  நாவல் நிறப்  பூக்கள்  இலைகளே என்னும்படியாக நிறைந்திருந்த கொள்ளையழகு , மனது  வழியும்   மகிழ்ச்சியலைகளை என்னுள்  ஊற்றித் தெளித்தது. அதில் ஒரு கொப்பை ஒடிக்க முயன்று எம்பிக் கொண்டிருந்தேன். ‘பூச்சாடியில்   வைத்தால்  அழகாயிருக்கும் …’ மனம்  குதூகலித்தது. ‘Bonjour’ என்ற குரல் கேட்டுத்  திரும்பினேன். தன் வீட்டின்  வெளிக்கதவைப் பிடித்தபடி பிரெஞ்சுக்கார  வயோதிபப் பெண்ணொருத்தி முகம்  முழுக்கச்  சிரிப்பாக   நின்றாள்.பதிலுக்கு  நானும்  வணக்கம் சொன்னேன்.
                பூமரத்தின் மீது படிந்திருந்த என் கண்களை மீட்டு அந்தப் பெண்ணின் மீதே என் பார்வையை ஓடவிட்டேன்.  வற்றிச் சுருங்கியிருந்த அந்த முகத்தில் வயோதிபத்தின்  எல்லைக்குள்   விழுந்து விட்ட போதிலும் ,மலர்ந்து சிரிக்கும்   கண்கள்…மடிப்புக்குள் சிக்கித்  தவித்தும் ,அழகான உதடுகள் …’அடடா….இந்தக்கிழவி இளமையில் பேரழகியாய்  இருந்திருக்கவேண்டும். ‘என்ன பூக்கள்  மீது அவ்வளவு விருப்பமா?’ என்ற  கிழவியின்  குரல்  என்  நினைவோட்டத்தை நிறுத்தியது. ம் …பூக்கள் என்றால்   விருப்பம்தான். சிரித்தபடி  சொன்னேன்.  கிழவி  தன்  வீட்டுக்கு  முன்பிருந்த  செடிகளில்  இருந்து  இரண்டு  ரோசாப் பூக்களைக்  கொண்டுவந்து  என்  கையில்  வைத்தாள். ‘முன்பின்  தெரியாத  எனக்குப் பூக் கொடுக்கிறாளே…’வியப்பில்  முகம்  மலர்ந்து,”merci” என்றேன்.
               நான்  வேலை  செய்யுமிடம்  வீட்டிலிலிருந்து   பெரிய  தூரமில்லை. நடந்துதான்  வேலைக்குப்  போய்  வருவேன்.  போகும் வழியில் , அந்தவீடு  தாண்டித்தான்   போகவேண்டும். அதிகாலையில்   இருவரும்  ,ஒருவர்  பார்வையில்   மற்றவர்  படமாட்டோம்.  வேலை  முடிந்து   வரும்போது  திரும்பும்  வேளை ,என்னையறியாமலே .  வீட்டுப்பக்கம்   கண்களைச்   சுழற்றுவேன் …றேந்தை  பின்னிக்கொண்டு   கதிரையில்   இருக்கும்போதோ   …பூச்செடிகளுக்குத்    தண்ணீர்  ஊற்றிக்கொண்டு…அல்லது   வேறு  ஏதாவது   வேலைகளில்  ஈடுபட்டிருக்கும்போதோ   கிழவியைப்  பார்த்துவிடுவேன். கிழவி  என்னைக்  கண்டு  சிரித்துக்கொண்டே முன்பக்கம் வந்து  நிற்பது   வாடிக்கையாய்  விட்டது.என்  கால்களும்  தானாகவே நின்றுவிடும் ….இருவரும் பேச  ஆரம்பித்து விடுவோம்.இந்தப்  பேச்சுகளிடையே தான்  இருவரும்  பெயர்களைப்  பரிமாறிக் கொண்டோம்.’ராணி…’என்று  மரியா   என்னைக்  கூப்பிடும்  தொனியே   வித்தியாசம் தான்.
       மரியாவின் வீட்டுக்குப்  பக்கத்து  வீடுகளிலெல்லாம்  வயது  சென்றவர்கள்தான்  வசிப்பதைக்  கவனித்தேன்.  நான்  திரும்பும்  வேளைகளில்  இளம்  வயதினரையோ சிறு  பிள்ளைகளையோ   நான்  பார்த்ததேயில்லை. சிலவேளை மாலை நேரமாகியபின் வேலை  முடிந்தோ  பள்ளிவிட்டோ   பிந்தி  வரக்கூடும்.   எங்கள்  நாட்டில்  பென்சன்   எடுத்தவுடன்  பெரும்பாலான  ஆண்கள்  பேப்பர்  படித்துகொண்டு   வாசலில்  உட்கார்ந்திருப்பதையே  கண்டு பழகிப்போனஎனக்கு ,இங்குள்ள  வயோதிபர்களின்   சுறுசுறுப்பு   ஆச்சரியம் தரும். எழுபது, எண்பது வயது  கடந்தும்  உடல்  வலுவை மேலும் பெருக்கச்  சைக்கிள்  ஓட்டிக்கொண்டோ…அல்லது நீச்சல்   வேறு  விளையாட்டுகள்  என்று   முடிந்தவரை  தம்மை  உற்சாகமே   வைத்திருப்பார்கள்.  மரியாவின்  வீட்டுக்குப் பக்க  வீடுகளில்  குடியிருக்கும்  எல்லோரையும்  ஏதாவது  வேலைகளுடன் தான்  அநேக  மாலைகளில்  பார்த்திருக்கின்றேன்.  கீழே  பெரிய  ஏணி   நிறுத்தியிருக்கும் பார்த்தால்…. மேலே  ஒரு  கிழவர்   பெயிண்ட்  அடித்துக்கொண்டிருப்பார். இன்னோர்   வீட்டைப் பார்த்தால் ஓடுகளின் மேலே ஏறிநின்று  வேறொரு  கிழவர்  ஏதோ திருத்திக்கொண்டிருப்பார்…வேறு   இன்னொரு  வயோதிபர்   புற்கள்  வெட்டிக்கொண்டிருப்பார் ..தங்கள்  தங்கள்  வேலைகளைத்  தாங்களே   செய்வதால்   இந்த  நாட்டில்  சுறுசுறுப்பு   என்பது   பார்க்குமிடமெல்லாம்  நிறைந்து   எம்மையும்   குந்தியிருக்க  வைக்காது  உசுப்பேத்தும்.
         lonly
எனக்கும்   மரியாவுக்கும் இடையிலான  பேச்சு நெருக்கம்  அதிகமாகியது. எனக்காக  மரியா  காவல்  நிற்பதும், கிழவியை  எதிர்நோக்கி  என்  கால்கள்  நடையை  நிறுத்துவதும்  ஒரு  கடமை போலாகிவிட்டது.
“உன்னோடு  யாருமே  இல்லையா?”
 ‘இல்லை   இப்போது   கனகாலமாகத்    தனியாத்தான்   இருக்கின்றேன்.’
உனக்குப்  பிள்ளைகள் …. கணவன்  …..?”கொஞ்சம்  தயக்கத்துடன்தான்   இதைக்  கேட்டேன்.
‘என்  கணவன்  இறந்து  பத்து வருசமாச்சு. எனக்கு  ஒரு மகளும், இரண்டு  மகன்களுமாக மூன்று  பிள்ளைகள்.  எல்லோரும்  தூரத்தில்  வசிக்கின்றார்கள்.’  சட்டெனப்  பதில்  வந்தது.
‘எனக்கு  ஐந்து   பேரப்பிள்ளைகள்’ மகிழ்ச்சி  தெறித்தது கிழவியின்  கண்களில்…
“அவர்கள்  உன்னைப்  பார்க்க வருவதில்லையா?”
‘அவர்கள்  மிகத்  தூரமாக இருப்பதால்  அடிக்கடி  வர  முடியாது. ஆனால் கிறிஸ்துமஸ் , புதுவருடப்பிறப்பு ஆகிய   விசேடங்களுக்கு எல்லோரும்  ஒன்றாக  வருவார்கள்.’புன்னகையுடன்  கிழவி  தொடர்ந்தாள் …
‘அவர்கள்  ஒவ்வொருவராகப்  பிரிந்து  சென்ற போது  என் மனம் துவண்டது உண்மை…இப்போது  எல்லாம்  பழகிவிட்டது.’
என்னதான்  கிழவி   புன்னகை  மாறாமல்   சொன்னபோதும் ,ஒரு  கருமை  முகத்தில்  ஓடி  மறைந்ததைக்  கவனித்தேன்…
‘தினமும்   எல்லோரும்   டெலிபோன்   எடுப்பார்கள். என்  உடல் நலம்  பற்றிக்  கேட்பார்கள்.இதுதான்  என்  இப்போதைய மகிழ்ச்சி.’
டெலிபோனுக்கூடாகத்  தன்  பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும்  தழுவிப் பேசுவது  போன்ற  பெருமிதம்  மரியாவுக்கு.ஆனால் ,கேட்டுக்கொண்டிருந்த  எனக்கோ ஆற்றாமை  பெருகி . ..என்னுள்ளே   பதறும்   பயமொன்று…முளைத்து   வெருட்டியது.”என்  வயோதிபக்  காலமும்  ,இப்படித்தான்  இங்கே   இருக்குமோ ?” சஞ்சலத்தோடு   வீடு  வந்து  சேர்ந்தேன்.
        அன்று  முழுவதும் வீட்டு வேலைகளிலும்  கைகள்  தடுமாறியே  ஈடுபட்டன. மனதில்  கவ்விய  இருள்  உடலெங்கும்  கலந்தது போன்ற ஒருவித  பரிதவிப்பு.ஒருவரையொருவர்  சார்ந்திருக்கத் தேவையில்லாத     பொருளாதாரச்  சுதந்திரம் ,இங்கு  எப்படியெல்லாம்  உறவுக்களைப்  பிரித்துத்  தனித்தனித்  தீவுகளுக்குள்  தள்ளுகின்றது.குறிப்பிட்ட  வயதுக்குமேல் பெற்றோருடன்  பிள்ளைகளும், பிள்ளைகளோடு பெற்றோரும்  இருக்க  முடியாமல்  இந்த  நாட்டின்  பொருளாதாரக்  கணக்குப் பார்த்தலும் பெரும்  தடையாகின்றன.  இதுதான்   ,இங்கு  எல்லோரையும் ‘தனித்து  இருப்பதே  மேல்’ என்ற  முடிவுக்கும் தள்ளுகின்றது. இது  சரியா?தவறா?என்று ஆராய நான்  முயலவில்லை. ஆனாலும் மனக் கிலேசத்தை ஒரு நிலைப் படுத்த முடியவில்லை.
       எனது  வீட்டுக்குக் கொஞ்சம்  தள்ளியிருக்கும் லீலாவின்  அம்மாவையும் ,அப்பாவையும்  நோர்வே,கனடா, லண்டன் ,பிரான்ஸ் ஆகிய  நாடுகளில் வசிக்கும்  பிள்ளைகள்  பார்ப்பதற்குக்  கூப்பிட்டிருந்தார்கள்.எல்லா  இடங்களுக்கும் போய் விட்டுக்  கடைசியாக  பிரான்சிலிருக்கும்  லீலா  வீட்டுக்கு   வந்தார்கள். இங்கு  வந்தபின்  இந்த   நாட்டிலேயே  தங்குவதற்கான  அலுவல்களில்  மகள்  முனைந்தபோது அம்மா  ஒரேயடியாக  மறுத்துவிட்டார்.’இதுவும்  ஒரு  நாடே? சூனியம்  பிடிச்ச  நாடு..எங்களுக்குப்  பாசையும்  தெரியாது  …இடங்களும்  விளங்காது   ..வீட்டுக்குள்ள  அடைஞ்சு   சுவரைப்  பார்த்துக் கொண்டிருக்க   ஏலாது…நாலு  சனங்களைப்   பார்க்காமல்   …கோயில்  குளத்துக்குப்  போகாமல்  ..இந்தக்  குளிருக்குள்ளை   இருக்க   என்னால்  முடியாது…” என்று  அம்மா  நாலு  கால்களில்  குதித்துக்  கூத்தாடி  இலங்கைக்குத்   திரும்பியே  விட்டார்கள்.  இப்படிப் பல  சம்பவங்கள்   கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு  இங்குள்ள  தனிமை  பிடிக்காது.தெருவுக்குத் தெரு ..சந்தைகள் ,கோவில்  குளமென்று  குந்தியிருந்து   விடுப்புப்  பேசி  மகிழ்ந்தவர்களுக்கு இங்கிருக்க  எப்படிப்  பிடிக்கும் ?…ஆனால்,   இங்குள்ளோர்  தங்களை   யாரும்  தொந்தரவு  செய்வதை விரும்புவதேயில்லை. அடுத்தவரது  விடுப்புப்  பேசுவதிலும்  மினக்கெடுவதில்லை. எனவே தனித்து  இருப்பதென்பது அவர்களுக்கு எவ்வித  உறுத்தலையும்   கொடுப்பதில்லை. அதுவே  அவர்களுக்கு  நாளடைவில்  பிடிக்கவும்  செய்கின்றது.
        அன்று  சனிக்கிழமை  …லீவுநாள்..என்  வளர்ப்பு  நாய்  டெய்சியைக்  கூட்டிக்கொண்டு  வெளியே  போனேன்.  மற்ற  நாட்களில்   என்  மகள்தான்  கொண்டுபோய்  வருவாள்.   மரியாவின்  வீட்டு  வழியாக  வரும்  பொழுது ,கிழவி  குடு குடுவென  வாசலுக்கு  ஓடிவந்தாள்…முகமெல்லாம் சிரிப்பாக.சிரிப்பில்லாமல்   மரியாவை   நான்  ‘பார்த்ததேயில்லை.
‘இது   உன்னுடைய   நாயா…?’
“என்னுடையதுதான்…ஏன்  இப்படிக் கேட்கின்றாய்?”
‘இந்த  நாயைக்  கொண்டு  வருவது  உன் மகளா?’
“என்னுடைய  மகள்தான்.”
‘அப்படியா! உன் மகள்  சரியான  வடிவு…நல்ல  பிள்ளையும்  கூட…” இதைக்  கேட்டுப்   பூரித்துப்போனேன்.
“மெர்சி”என்றேன் . திடீரென்று  எனக்குள்   ஏதோ  மின்னல்  வெட்டியது.
 “அப்படியானால்.  ..அந்த  நாய்  கட்டும்  சங்கிலியைக்  கொடுத்தது  நீயா?..”
  ‘ஓம்  ஓம்  நான்தான்’.
சில  நாட்களுக்கு  முன்  நடந்த  சம்பவமொன்று   நினைவுக்கு  வந்தது.  அட !சினிமாவில்  வருவதுபோல்  இருக்கின்றதே!!
 என்  மகள்  டெய்சி யைக் கொண்டுபோய்த்  திரும்பும்போது ,ஒரு  பழைய  காலத்து   நாய்  கட்டும்  சங்கிலியோடு  வந்தாள்.
“இது   உனக்கு  எங்காலை ?”
‘ஒரு  மம்மி  என்னோடை   நல்ல  பழக்கம்.அவ  டெய்சியைத்  தடவுவா.என்னிலையும்  விருப்பம். அவவிடம் முந்தி   ஒரு  நாய்  இருந்ததாம் …அது செத்துக்  கன வருஷம் ஆச்சுதாம்.’இது  நல்ல  பலமான  சங்கிலி’ என்று  சொல்லி,டெய்சி க்குப்  பாவிக்கும்படி  தந்தவ.டெய்சி   சரியான  பெரிசு  என்றபடியால்   இதுதான்  நல்லது  என்று  சொன்னவ” சிரித்தபடி  மகள்   சொன்னாள்.எனக்கு  அந்தச்  சங்கிலி  பிடிக்காத படியால்  டெய்சிக்கு  இன்னும்  பாவிக்கவில்லை.
         அன்று நிறைய  ரோசாப்பூக்களை  என் கைகளில் மரியா வைத்தபோது ,பெரும் புதையல்  கிடைத்த  மகிழ்ச்சி  எனக்கு. நன்றி  சொல்லி,முத்தமிட்டுவிட்டு வீடு திரும்பினேன். வீட்டுக்கு  வந்ததும் ,அகன்ற  பாத்திரமொன்றில்  தண்ணீர்  விட்டுப்  பூக்களை  மிதக்கவிட்டு அழகு  பார்த்தேன்.
        மரியாவுடன்  பேசும்போது  ,பல  விடயங்கள்  வந்துபோகும். ஒரு  நாள்  கிழவி  சின்னதொரு  கூடைக்குள்  ஏதோ  வைத்து ,வெள்ளைப்  பேப்பரால்  மூடி  “மகளுக்குக்  கொண்டுபோய்க்   கொடு …”என்று   தந்தாள்.  வீட்டில்  போய்த்  திறந்து  பார்த்தால்  ,சின்னச்  சின்ன  அச்சில்  போட்டெடுத்த   வாயூற  வைக்கும்  கேக்குகள்.  இங்கு  அநேகமான  வயோதிபப்  பிரெஞ்சுக் காரர்களுக்கு  சர்க்கரை   வியாதி   கிடையாது. நன்றாக  இனிப்பு  வகைகள்  சாப்பிடுவார்கள். மரியா  தனக்கு  வீட்டில்  செய்ததில்  தந்திருக்க  வேண்டும்.ஒரு  துண்டை  வாயில்  போட்டுப் பார்த்தேன். “ம்…நல்லாய்த்தான்  இருக்கு.”  மரியாவுக்கும்   ஏதாவது   கொடுக்கவேண்டும்.ஆர்வம்  பொங்கியது.
         அடுத்த  தடவை  கதைக்கும்போது,  “சனிக்கிழமை   சோறும்  ,கோழிக்கறியும்   கொண்டு  வருகின்றேன்  ”  என்றேன். மறுப்பேதும்  சொல்லாத  கிழவி  மகிழ்ச்சியுடன்  சம்மதித்தாள்.எங்கள்  வீட்டுக்கு  வரும்   பிரெஞ்சு   நண்பர்களுக்குச்  சோறும் காரம் குறைந்த  கோழிக்கறியும் ,கத்தரிக்காய்  வெள்ளைக்கறியும் தயிர்ச்  சம்பலும் பப்படமும்  கொடுத்தால்  அப்படி  விரும்பி  உண்பார்கள்.  பால்  போட்ட  டீயும்   மிகப்   பிடிக்கும்.
           ஒரு  சனிக்கிழமை  ,கொஞ்சம்  பாஸ்மதி அரிசிச்  சோறும் கோழிக்கறி, கத்தரிக் காய்  வெள்ளைக்கறி , பப்படம்  எல்லாம்  கொஞ்சங் கொஞ்சமாக  வைத்து  எடுத்துப்போய்க்   கொடுத்தேன்.  திங்கட்கிழமை   வேலை முடிந்து  வரும்போது  எனக்காகக்   காத்து நின்ற  மரியா ,பூரிப்புடன்  ‘Très  bon …’என்று  சொன்னபோது  குளிர்ந்து போனேன்.   இடைக்கிடை  இப்படி  ஒருவருக்கொருவர்   ஏதாவது  உணவுவகைகள்  பரிமாறிக்கொண்டோம். உவகை  பொங்க! ‘அம்மா   உங்கள்  Copine  பார்த்தீர்களா…?”என்று  மகள்  கேட்கும்  அளவுக்கு  எமது  நட்பு   வளர்ந்திருந்தது..
        ஏன்  கொஞ்ச   நாட்களாக  மரியாவைக்  காணவில்லை?ஒருவிதத்   தவிப்பு  மனதைக்  கிள்ளிஎடுக்கப்  பூட்டியிருந்த  கிழவியின்   வீட்டு  யன்னல்களையும், வாசல் கதவையும் பார்த்து யோசித்துக்  கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
           மறுநாள் …அதற்கடுத்த  நாள்…அதற்கும்  மறுநாள்….ம்…மரியா  கண்ணில்  தென்படவேயில்லை. கிழவி  வளர்த்த  முன்பக்க  ரோசாச் செடிகள்  உட்பட  எல்லாச்  செடிகளும்  வாடி  நிற்பது போன்ற பிரமை  எனக்கு. பிரமை என்ன?அவை  வதங்கித் தான்  நின்றன. ஏனோ  என்  கண்கள்  கலங்கின.மரியா பற்றி வேறு யாரிடம்  விசாரிப்பது?அந்த   இடத்தில்  வேறு யாரும்   எனக்குப்   பழக்கமில்லை. தெரிந்தாலும்   சொல்லிவிட்ட   மாதிரித்தான்.  நான்  வசிக்கும்    அடுக்குமாடிக்  கட்டிடத்தில்  பெரும்பாலானோரின்    பெயர்கள்  எனக்குத்  தெரியாது.  கனக்க   ஏன்  போவான்..நான்  வசிக்கும் மூன்றாம்  மாடியில்  குடியிருக்கும்   பக்கத்து  வீட்டுக்காரர்களில்   ஒரு  குடும்பத்தின்  பெயர்  மட்டுமே  எனக்குத்  தெரியும்.
         இப்போது  மரியாவின்  வீட்டைக்   கடக்கும் போதெல்லாம்  கனக்கும்  நெஞ்சுடன்   திரும்பிப்  பார்த்துக் கொண்டே  போய்  வருகின்றேன். மரியா   என்  கண்களில் பட்டால்   எவ்வளவு   நல்லாயிருக்கும்! என்  மனம்  ஏங்குகின்றது.அந்நிய  மனிதர்களானபோதும் ,தினமும்  பேசிப்  பழகும்போது ,ஒருவிதப்  பிணைப்பு  வரத்தான்  செய்கின்றது.
இன்றும் , மரியா  வீட்டு  ரோசாச்  செடிகளை  என்னையறியாமலே   ஊடுருவிப்  பார்த்தேன்…அவை  வாட்டமின்றிச்  செழித்து  நின்றன …ஆவல்  பொங்க   யன்னலை  நோக்கினேன்…அங்கே  தெரிந்த   புதிய  முகமொன்று   என்னை  முறைத்துப்  பார்த்தது.
“மரியா   எங்கே…?”  என்று  கேட்கத்  துடித்த  நாக்கு  அப்பெண்ணின்  சிரிப்பற்ற   முறைப்பைக்  கண்டு  மௌனமாக   அடங்கியது.  நான்  வீட்டை  நின்று  அவதானிப்பது  அவளுக்குப்  பிடிக்கவில்லைப்போலும்.  என்  வீட்டை  நோக்கி    நடையைத்  துரிதப்படுத்தினேன்.
     மரியா  பற்றிய  நிலைமை  தெரியாது   தலை  வெடித்துவிடும்போல்   இருந்தது. வீட்டுக்கு  வந்தபின்னும்   ஓய மறுத்த  மனதுடன்  அப்படியே   உட்கார்ந்திருந்தேன்.
‘அம்மா   பசிக்குது…’பிள்ளைகளின்  குரல்கள்  கேட்டு ,செய்ய  வேண்டிய  வேலைகளின்   நினைவுக்கு  வந்தன. ஒ!…நல்லா  நேரம் போச்சு…’   மள மளவென்று   சமையல்   வேலையில்  இறங்கிவிட்டேன். மிச்சமிருக்கும்   வேலைகளின்  சுமை  முன்னே  குவியப்  பரபரப்பானேன்.
நன்றி  : ஆக்காட்டி இதழ்  6 ( மே-யூன் 2015)
Advertisements