இருள் மிதக்கும் பொய்கை : புரிதலும் பகிர்வும்-கவிஞர் அனார்

anar// கொஞ்சம் சம்பிரதாயமாக
கொஞ்சம் இடைவெளியோடு
கொஞ்சம் விருப்புக் குறிகளோடு
கொஞ்சம் நடித்தபடி
கொஞ்சம் யாரோ போல
பழகுவதற்கு நாம் பழகலாம் //இது தர்மினியின் தொகுப்பிலிருக்கின்ற கவிதை. தற்செயலான நிகழ்வுகளை பிரதிபலிப்பனவாக தர்மினியின் பல கவிதைகள் “இருள் மிதக்கும் பொய்கை“ தொகுப்பில் காணப்படுகின்றன.

இலங்கை தமிழ் இலக்கியத்தின் தீவிரப் படைப்பிலக்கியத் தளங்களில் ஈடுபடுகின்ற பெண்களது பங்களிப்பானது பல்வேறு காரணிகளால் முக்கியத்துவங்களை கொண்டமைந்துள்ளது. 80களில் எழுதிய பெண்களை முன்னோடிகளாகக்கொண்டு, 90களில் மிகப் புதிய எழுச்சியோடு தமிழ், முஸ்லீம் பெண்கள் கவிதைத் துறையில் வளர்ந்தனர்.

2000 ஆண்டுகளின் பின்னர் பெண்கள் தங்களின் பல்வேறு வகைமையான சுயம் சார்ந்த சிந்தனைப் போக்குகளை கையாண்டனர். பெண்ணியம், பெண் அரசியல், பெண் உடல் அரசியல் என தங்களது எழுத்து வன்மைகளை நிலை நிறுத்தி வருகின்றனர்.

புலம் பெயர்ந்து எழுதுகின்றவர்களை நாம் இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இங்கே ஆண்கள் புழங்குகின்ற இதே இலக்கியத் தளத்தில்தான் பெண் எழுத்தும் இயங்குகின்றது, சவால்களையும் சந்தித்து வருகின்றது.

இலங்கைப் பெண்கள் தம்முடைய நிலத்தில் இருந்தபடியும் அதற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் சிதறியும் காணப்படுகின்றனர். அவர்களது கவிதைகள் அநீதிக்கு எதிராக, நூதன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகின்றன. ஆயினும் சமகாலப் பெண் கவிதைகள் அனைத்தையும் ஒற்றைத் தன்மையான குரலாக நாம் அடையாளப்படுத்திக் காணமுடியாது. ‘சமகாலம்’ என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளில் இருந்து முற்று முழுதாக மாறி, வேறொன்றாக எம்முன் நிற்கின்றது.

//யாவற்றையும்விட
அதிகமாய் நேசிக்கும் உம்மிடம் கேட்கிறேன்
நேரிலொரு நாள் சந்தித்தால்
கைகளைக் குலுக்குவதா?
கன்னங்களில் முத்தமிடுவதா?
கட்டியணைப்பதா?
அல்லது
கசிந்துருகும் இப்பொழுதுகளின் சாறெடுத்து
வாழ்வின் துளியொன்றாக்கி
அதைக் குடித்துவிடலாமா? // என தர்மினி கேட்கிறார்.

எது ஒரு பெண்ணை எழுத வைக்கின்றது? அவளை இத்தனை வலிமையானவளாய், அபூர்வமானவளாய் மாற்றக்கூடிய எழுத்தை எழுத எது அவளை முன்தள்ளுகின்றது? எத்தகைய ‘கனல்’ பெண்ணுக்குள் இருப்பது? ஏன் அவள் தன்னைக் கொண்டாட விளைகிறாள் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளை பெண்களது கவிதைகளில் ஒருவர் கண்டுகொள்ளலாம். அதற்கு நிச்சயம் தொடர்ந்த வாசிப்புப் பயிற்சியும், பன்முகத் தேடலும், ஆழமான புரிதலும் அவசியமாகின்றது.

பண்பாட்டுப் பொறிகள் கொண்ட மொழியிலிருந்து தன்னைத் துளைத்து வெளியேற்றுகின்ற பெண்களால் எழுதப்படுகின்ற கவிதைகள் மிகுந்த தாக்கத்தை கொண்டிருக்கின்றன.

14311319_10208528880917449_2759588307504967964_oதர்மினியின் மற்றொரு கவிதையின் சிறு பகுதி,

// அடையாளங்களற்ற நான்
அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது
தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம்
நாடுமில்லை
இது என் பெயருமில்லை
அடையாளங்களற்ற நான்
அகதியுமில்லையாம்
உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து
படிகளின்றி இறங்க
யாருமற்ற காட்டுக்குள்
என்புகளைப் பாம்புகள் நொறுக்குகின்றன
முன் குவிந்த ஆடைகளிலிருந்து
எதுவொன்றும் அணிய முடியவில்லை
கடிகார முட்களின் வேகம்
குரூரத்தைக் குத்துகிறது
அந்தரித்த நித்திரையில்
அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்
அதுவல்லாப் போதில்
அந்நியம் சுற்றிக்கிடக்கிறது //

கவிதை என்பது வாழ்தல் என்றானபின் அதற்குரிய சவால்களும் தோண்றிவிடுகின்றன. ஒரு ஆண் எதிர்கொள்ளச் சாத்தியமற்ற பல நெருக்கடிகளை எழுதுகின்ற பெண் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. உலகின் முதல் பெண்ணான ‘ஹவ்வா’ வின் முதல் மாற்று அனுபவமே, ‘இப்லீசை’ அதாவது சாத்தானை எதிர்கொண்டதுதான். அது தான் ஒவ்வொரு பெண்ணினதும் அனுபவமுமாகும்.

குறைந்தபட்சம் ஒரு சாத்தானையேனும் அவள் எதிர்கொண்டே ஆகவேண்டும். இலக்கியத்தில் ஈடுபடுகின்றவள் எனில் அது அதிகபட்சமாகிவிடும். தர்மினியும் இதற்கு விதிவிலக்கல்ல. பரிச்சயமான, இயல்பான மொழியில் அக உணர்வுகள் வெளிப்படும் கவிதைகளை எழுதுகின்றார். அவரது கூண்டு என்றொரு கவிதை இப்படி இருக்கிறது.

// விரிந்த வானத்தின் மிகுதியை
வரைந்து தரக் கேட்கலாம்
கைகளைப் பிடித்துக்
கடலலைகளில் ஏறலாம்
கொட்டுண்ட நட்சத்திரங்களைப்
பொறுக்கவும் கூப்பிடலாம்
அதிசினத்தின் மிருகமொன்றைப் புனைந்து
அவள் இரத்தத்தை ருசிக்கலாம்
எங்கிருந்து வந்தாயென்று
இடைக்கிடை கொஞ்சலாம்
பெருஞ் சண்டை முடிந்த இரவில்
அறியாத் தீண்டலில் நேசமாகிவிடலாம்
இதுவரை எவரிடமும் பேசாத எதையும் பேசலாம்
ஆனாலும்
அவ்வப்போது இளவரசியாய்
நான் மாறிவிடும் காலங்களில்
எவனாவது ஒருவன் பூக்களோடு வருகிறான்
அவனை அறிமுகஞ் செய்யும் போதெல்லாம்
இவனொரு கூண்டை வாங்கி விடுகிறான் //

என்னைப் பொறுத்தவரை இறப்பின் பின்னரும், பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடிய அரூப உயிராக கவிதையைக் காண்கிறேன். சில சமயம் ஐம்பூதங்களும் ஐம்புலன்களும் சங்கமிக்கின்ற செயல்பாட்டு வடிவமாக. மேலும் மொழியின் ஆகச்சிறந்த வெளிப்பாடாக. ஆனால் அதனைக் கையாள்பவர்களிடமுள்ள திறனைப் பொறுத்தே இக்காலங்களில் கவிதைக்குரிய கணிப்பீடுகளை முன்னெடுக்க முடியும். எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்தவிதமான அளவு கோல்களையே முழுமையாக செயலிழக்கச் செய்வதுதான் கவிதையாகும்.

தர்மினியின் கவிதை ஒன்றின் தலைப்பு,

// தற்செயலான நம்சந்திப்பின் புள்ளியை பெரிதாக்கலாம் // என்பதாகும்.

இந்த சபைக்கும் அதனையே என் நம்பிக்கையாக முன்வைக்கிறேன்.

(23.09.2016 இல், அக்கரைப்பற்று TFC அரங்கில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட சிறு குறிப்பு)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s