14590391_10208799649726500_745831047132720086_n      பெண்களின் உடலைக் காட்சிப்படுத்துவது ஒரு வியாபாரமாகவே நடைபெறுகிறது. இன்னொரு விதமாக, பெண்ணுடலைக் கொண்டாடுவோம் என்ற கோஷமும் வைக்கப்படுகின்றது. ஆனால் எவ்விதமாக அவை வியாபாரமாகவோ போராட்டமாகவோ பெருமிதமாகவோ முன் வைக்கப்படுகின்றது என்பது கவனிக்கவேண்டியது.

மணிப்பூரில் ஆயுதப்படையினர் மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகி அவளது உடல் வீதியில் வீசி எறியப்பட்டது. இதற்கு எதிரான போராட்டமாக ‘இந்திய இராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்ற பதாகையோடு ஆயுதப்படையினரின் அலுவலகத்தின் முன் பெண்கள் நிர்வாணமாக நின்று நியாயம் கேட்டனர். தங்கள் நிர்வாணத்தையே ஆயுதமாக்கிய போராட்டமது. எதிர்ப்பைக் காட்டுவதற்கு பெண்கள் செய்த இப்போராட்ட வடிவம் பெண்களது எதிர்ப்பின் இன்னொரு வகைப்பட்டது.

நவீனமும் நாகரிகமும் பெருகி வரும் இக்காலம் தவறான வழிகளுக்காக தொழினுட்பசாதனங்களைப் பயன்படுத்துவதற்குமாகி விட்டது. கணினி-கைபேசிப் பாவனைகளின் தொழினுட்ப வளர்ச்சிகள் மேலும் மேலும் பெண்களது உடல்கள் மேலான வன்முறைகளைச் செய்வதற்காகத் தவறாக உபயோகிக்கப்படுவதைக் காண்கிறோம். என்னென்ன குற்றச்செயல்களை இவற்றை வைத்துச் செய்ய முடியுமோ அவையெல்லாம் அதிவிரைவாக இளைஞர்களால் கற்றுக்கொள்ளப்படுகின்றன. எவ்விதமெல்லாம் காட்சிப்படுத்தவும் பகிரங்கப்படுத்தவும் முடியுமோ அவ்விதமெல்லாம் பெண்ணுடல் மீதான அத்துமீறல் நடைபெறுகிறது.
இதன் பொருட்டுக் குற்றவுணர்வற்றவர்களாக இவர்கள் செய்பவை பெண்களது தற்கொலைகள் வரை சென்றுவிட்டது. இது பெண்களது உளவியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பெண்கள் தம்மையிட்டு வெட்கப்படுவதற்கும் குற்றவுணர்வு கொள்வதற்கும் காரணங்கள் உண்டா? இச்சமூகத்தில் அவளை அவமானப்படுத்துவதற்கு ஒரு வழியாகவே ஒட்டி-வெட்டி படங்களை உலவவிடும் ஒரு குற்றம் நடக்கின்றது. நடிகை, எழுத்தாளர்,பேஸ்புக் பதிவுகளை இடுபவர் …என்று எவரை முன் வைத்தும் இந்நிர்வாணப் படங்களைப் பரப்புவது அவர்களை மிரட்டுவதற்கு இலகுவான வழியாகிவிட்டது. பரவலாக நடைபெறும் பெண்களது உடல் மீதான இணைய அத்துமீறல்கள் காரணமாக மனவுளைச்சல் அடையும் பெண்களின் நிலைகள் வெளியே தெரிய வருவது குறைவு.அவர்கள் சட்டத்தை நாடுவதும் கூட குறைவு.பெண்களது தற்கொலைகள் தான் இவை போன்ற குற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இவை தெரிய வருவதற்காகவும் அப்பெண்கள் தங்களை நிரூபிப்பதற்காகவும் உயிரைவிட வேண்டுமா?
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக , எழுத்தாளர் ஒருவரது முகத்தை வேறொரு பெண்ணின் நீச்சலுடை அணிந்த உடலோடு இணைத்து இணையத்தில் உலவவிட்டிருந்தனர். இதன் மூலம் மனஞ் சோர்வடையச் செய்தல் தான் அதைச் செய்தவர்களின் குறிக்கோள். இதன் மூலமாக அவரது சுதந்திரமான எழுத்தை அச்சுறுத்தி விட்டதாக அவர்கள் கற்பனை செய்தது மடமைத்தனம். சில மாதங்களின் முன் சேலத்தைச் சேர்ந்த வினுப்ரியா என்ற பெண்ணுடைய தற்கொலைக்குக் காரணமே மாஃபிங் செய்யப்பட்ட அவரது நிழற்படம் தான் என அறிவோம். புகார் கொடுக்கப்பட்ட போதும் பொலிஸார் அதற்கான நடவடிக்கை எடுக்காததும் லஞ்சம் கேட்டதும் மாபெரும் குற்றங்களென்றால்…தன் பெற்றோர் தன்னை நம்பவில்லை என்பதும் கூட அவரது தற்கொலையைத் துாண்டியது. இவை போலத் தொடர்ச்சியாக தமது விருப்பங்களுக்கு இணங்க வைக்கவென ஆண்களால் மிரட்டப்பட்டு அமைதியாகிவிடும் செயல்களும் நடந்தபடியிருக்கின்றன. நாம் உதாரணங்களைச் சொல்லிவிட்டுப் போவது இலகுவானது. ஆனால், அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் புறக்கணித்துவிட்டுப் போகுமளவு பெண்கள் இதை எதிர்கொள்ளவும் வேண்டும்.
இந்நிழற்பட-ஒளிப்பட வன்முறையும் ; பெண்ணைப் பாலியல் வன்முறையால் வெற்றி கொண்டதாக அவளை அவமானப்படுத்திவிட்டதாக ஆண்கள் நினைத்துக் கொள்வதைப் போன்றதே.
நண்பர்களது வட்டமான பேஸ்புக்கில் பகிரும் நிழற்படங்களில் பெண்கள் தங்கள் முகங்களைக் காட்டவும் அச்சப்படும் நிலையே தான் உள்ளது. பெண்ணின் முகம் கூட நிழற்படமாக இருப்பது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற மனநிலையை ஏற்படுத்தியது எது ? இன்று பலரது கைகளில் அந்த முகத்திற்குப் பொருத்தமாக இன்னொரு உடலைப் பொருத்திவிடும் நுட்பம் விளையாடுகிறது. இதையெல்லாம் அறிந்திருந்தாலும் பொதுவெளிக்கு வருவதும் படங்களை வெளியிடுவதும் பெண்கள் மேலான பிழையாகவே இன்னுமின்னும் சொல்லப்படுகின்றது. பெண்கள் வீட்டுக்கு வெளியே போனால் பாதுகாப்பில்லை என்று சொல்லி வந்தவர்கள், இப்போது முகத்தைக்காட்டாதே! முகப்புத்தகம் வைத்திருக்காதே! என்கிறார்கள். பெண்கள் தங்கள் சொந்த முகங்களைக் காட்டவே யோசிக்கவேண்டும் என்ற அறிவுரை தான் வழங்கப்படுகின்றது. மீண்டும் மீண்டும் பெண்கள் மீதே தவறுகளைச் சுமத்தி விடுகின்றனர். இவர்கள் எம்மை எப்படி அவமானப்படுத்திவிட முடியும் என ஒவ்வொரு பெண்ணும் உறுதியோடு இருப்பது தான் இவ்விணையக்குற்றங்களை எதிர்கொள்ளத்துணிச்சலைத்தரும்.
இங்கு ஆண்கள் எந்த விதத்திலும் தங்களைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா ? அவர்களது தவறான எண்ணங்கள் பற்றிச் சிந்தனை தேவையில்லையா ? ‘எப்போதும் அவர்கள் அப்படித்தான். பெண்கள் தான் ஒதுங்கிப்போக வேண்டும்’ என்ற சமூகத்தின் மனநிலை காலத்துக்குக் காலம் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. பெற்றவர்கள் சகபெண்ணை மதிப்பதைக் கற்பிக்க வேண்டுமென்பதைப் போலவே கல்வி நிலையங்களும் சிறுவயதிலிருந்தே இருபாலாரும் சமம் என்ற மனநிலையைப் புகுத்த வேண்டும்.பெண்ணின் உடல் மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்குமானதல்ல என்பது சிறுவயதிலிருந்தே மனதில் பதியவேண்டிய கருத்து.

இணையவெளியில் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் காட்சிப்படுத்துவது அவளை எங்ஙனம் அவமதிப்பதாகும்? அதற்கு அவள் ஏன் வெட்கப்படவேண்டும் ? எதற்காகத் தற்கொலை செய்ய வேண்டும் ?அவளது குடும்ப உறுப்பினர்கள் அவமானமாக அதை ஏன் கருதவேண்டும் ?அதை ஆபாசம் என்று எதற்காக மற்றவர்கள் பேசவும் எழுதவும் செய்கின்றனர். பழிவாங்கவும் பழிக்கவுமாக ஓர் உடலை உலவ விடுபவர்கள் தான் அதையிட்டு வெட்கப்படவேண்டும். மார்ஃபிங் செய்வது ஒரு குற்றம். அதைவிட்டு உண்மையாகவே ஒரு பெண் குளிப்பதையோ அல்லது தனக்கு விருப்பமான ஒருவரோடு சுதந்திரமாக இருப்பதையோ பார்ப்பதும் பதிவுசெய்வதும் பகிரங்கப்படுத்துவதும் பற்றி அந்த ஆண்கள் தான் வெட்கப்படவேண்டும். தனது உடலை எதற்காக ஒரு பெண் அவமானமாக உணர வேண்டும் ?பிறரது அந்தரங்கத்தில் தலையிடுவதை, அதை மற்றவர்களிடம் பகிர்வதைப்பற்றி நாண வேண்டியவர்கள் அதைச் செய்பவர்கள் தான்.
தன்னுடலைக் காட்சிப்படுத்திவிட்டார்கள் என ஒரு பெண் மனம் உடைந்து போவது உயிரை இழக்கவும் துணிவது இதெல்லாம் அந்தக் குற்றவாளிகளை இன்னுமின்னும் வளர்க்கின்றது.
மனிதர்கள் நிர்வாணிகள் என்பதும் காமம் இயல்பானதென்றும் எல்லோரும் அறிவர். மார்ஃபிங் செய்யாத ஒரு படத்தைக் கூட இணைய வன்முறை பரவ விட்டால் அதை அப்பெண்ணும் குடும்பமும் அலட்சியம் செய்வது தான் சரியானது. அவளது உடலைப் பகிரங்கப்படுத்துவதன் காரணம் அவமானப்படுத்துதல் தானென்றால் அது என்னை அவமானப்படுத்தவில்லை எனப் பொருட்படுத்தாமல் கடந்துவிடுதல் ஒவ்வொரு பெண்ணும் உறுதியாயிருக்கச் செய்யும். அதே நேரத்தில் இம்மீறல்களைச் செய்பவர்களைத் தண்டனைக்குட்படுத்துவதில் முனைப்பாகச் செயற்படுதல் வேண்டும். அவர்கள் குற்றவாளிகளாக ஒருவரது அந்தரங்கத்தில் நுழைந்தவர்களாக தம்மை உணர்ந்து வெட்கப்படவேண்டும். இவ்வாறான காட்சிப்படுத்தல்களைக் கொண்டு பெண்களை விமர்சிப்பவர்களும் இதையெல்லாம் செய்து பெண்களை அவமானமுறச் செய்யலாமென்று நினைப்பவர்களும் அவரவர் நிர்வாணங்களைக் குளியலறைகளில் – தம் படுக்கையறைகளில் தரிசிக்கின்றனர். மருத்துவமனைகளில் தம் உடலின் பெறுமதியை உணர்ந்தவர்களாகின்றனர். தங்கள் குழந்தைகளின் நிர்வாணங்களை உச்சிமுகர்கின்றனர்.

நிர்வாண உடல் எனதே ! அதைப் புனைந்து இரசிப்பதும் பொதுவெளியில் வைப்பதும் பிறரது அந்தரங்கத்தில் தலையிடும் உனக்கே அவமானம் !! உனது அநாகரீகம் !!!
எனப் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் தெளிவாகச் சிந்தித்து இது போன்ற செயல்களை அலட்சியப்படுத்தவேண்டும். ஒரு பெண்ணின் உடல் ஏன் ஆபாசம் எனச் சொல்லப்படுகிறது ? அவ்வாறான ஒரு நிழற்படமோ ஒளித்தொகுப்போ வெளியாகும் போது அதை ஆபாசப்படம் என்றோ ஆபாச வீடியோ என்றோ எழுதுவதைப் பத்திரிகைகளும் இணையங்களும் பேஸ்புக் பதிவர்களும் தவிர்க்கவேண்டும். ஆபாசப்படம் எனப் பேசுவதை நாம் நிறுத்தவேண்டும்.
ஒரு நிழற்படங்காரணமாகவோ ஒளிப்பதிவு காரணமாகவோ வெட்கித்துப்போய் சாக வேண்டுமெனப் பெண்கள் நினைப்பதை அடியோடு நிறுத்தவேண்டும். எமது உடல் பற்றிய பெருமிதங்களோடு இவர்களை எதிர்கொள்வது தான் இப்போது நாம் செய்ய வேண்டியது.
தர்மினி
நன்றி : ஆக்காட்டி -12
Advertisements