• மோனிகா

woman-with-wings

ஆதித்தாயின் சிறகுகள்

பூமிக்கடியில் புதைந்துள்ளன,

கையிலெடுத்து முகர்ந்துபாரென

குறி சொல்லிப் போனான்

சாமக் கோடாங்கி.

சிறகுகள் என்பதற்கு,

புத்தகத்தில் பொத்தி வளர்த்த மயிலிறகும்

பட்டாம்பூச்சியின் பலவண்ண இறகுகளுமே

நானறிவேன்.

வளர்ந்த பின்னர் வரவேற்பறையில்

காஃப்காவின் கரப்பான்பூச்சி இறக்கைகள்

பார்த்து இரக்கம் கொண்டிருக்கிறேன்.

நெட்டி முறித்துக் களைத்த பின் யோசித்தேன்,

பிரிக்கவோ தரிக்கவோ ஒன்னாத

சிறகுகள் எனதுள்ளே துளைத்து வளர்வன.

நரம்புக் கானகத்தே

உணர்வுற்று மதர்த்த

விலங்குகள், சிறகுகள்.

விரிந்தும் மடங்கியும் வேட்கையூட்டும்

சிறகுகள் அகலாது என்னுள்.

Advertisements