-மோனிகா-

ல்லா நிகழ்வுகளும் சமூகப் பிரக்ஞையைத் தர வல்லனவா? இல்லை. சமூகப் பிரக்ஞைக்கு காரணிகளாக இரண்டு விஷயங்கள் முன்வந்து நிற்கின்றன.
1. பாதிப்பினால் ஏற்படும் பொது புத்தி: ஒரு தனி மனிதரில்லாமல், தூர தேசமில்லாமல் கண்முன்னே இருக்கும் ஒரு கூட்டத்திற்கு ஒன்று நிகழுமானால் அந்த நிகழ்வினால் தானும் பாதிப்படைகின்ற பட்சத்தில்.

2. தகவலினால் ஏற்படும் பொது புத்தி: ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மீடியாக்கள் தொடர்ந்து ஒலி/ஒளி பரப்பிக்கொண்டே இருக்குமானால்.
மேற்கண்ட இரண்டு காரணிகளும் அச்சானியமாக என்னை கலக்கமடையச் செய்திருக்கின்றன.
முதலில் சொல்லப்பட்ட கருத்தாக்கம் இரண்டு வகைகளில் ஏற்படுகிறது. ஒன்று பிராந்தியத்தன்மை: தாத்ரி கலவரம், வியாபம் கொலைகள் என வடநாட்டில் நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளுக்கான எதிரொலி தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. தெலுங்கானாவுக்கு ஆதரவாக எத்தனை பிராந்தியக் கட்சிகள் கொடி பிடித்தன? வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் ராணுவ அத்துமீறல்களுக்கும் அதீத விலைவாசிக்கும் இந்தியாவில் எத்தனை பேர் கொடி தூக்கிவிட்டார்கள்? இன்னும் மின்சாரமே கண்டிராத எண்ணிலடங்காத மலைக் கிராமங்களும் ஆதிவாசிகளும் பணமில்லா பொருளாதாரத்திற்கு வந்து ஆன்லைனில் ஆப்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்வது மானுடத்திற்கு பாடப்படும் உண்மையான தேசிய கீதம் அல்லவா? இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாத அக்கறையே இல்லாது வாழும் ஒரு கூட்டம் எப்படி ஒருமித்த ஒரு கீதத்தை எழுப்ப முடியும்? அத்தேச உணர்வு சினிமா தியேட்டர்களில் வளர்ந்தால் போதுமா? நேற்று தொலைக்காட்சியில் எஸ். ரா கேட்டது போல், எவ்வளவு அரசாங்க அலுவலகங்களில், அரசியல் கூட்டங்களில் அது பாடப்படுகிறது. பொது வாழ்க்கையில் நேர்மையின்றி பாடப்படும் தேசிய கீதம் நாட்டை அவமானப்படுத்துவதாகாதா? சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனை எத்தனை அநீதிகள், அவற்றில் எத்தனை அநீதிகளுக்கு நாம் இந்தியர் என்று இத்தேசம் ஒன்றாக எழுந்து நின்று போராடியிருக்கின்றது?

இரண்டாவதாக, தகவல்களினால் ஏற்படும் பொது புத்தி: கொள்கை சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த அரசியல் கை நழுவிபோய் “பாபுலிஸ்ட் பாலிடிக்ஸ்” என்னும் ஜிகினா அரசியல் தொடங்கி நிறைய காலங்கள் ஆகிவிட்டன. உயர்கல்விக்காக (Higher education) செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களை புறம் தள்ளிவிட்டு அதைவிட மூன்று மடங்கு பணத்தில் “புல்லட்” ரயில் விடுவதாக ஒரு அரசாங்கம் சொன்னால், “ஆஹா, இந்தியா வல்லரசாகிக் கொண்டு வருகிறது” என்று மக்களை நினைக்க வைப்பது எது?
1. உயர்கல்வி என்பது என்ன என்று தெரியாத பெரும்பாலோரின் அறியாமை.
2. டெக்னாலஜி/ தொழில் நுட்பம் அதன் மூலம் ஏறிக் கொண்டிருக்கும் பங்கு சந்தை மற்றும் வியாபாரம் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்ற கற்பிதத்தை ஏற்படுத்தியிருக்கும் ஜிகினா அரசாங்கங்களும் அதற்கு துணை போகும் மீடியாக்களும்.
ஒரு பத்திரிக்கையின் பொருளாதாரம் 80 விழுக்கட்டிற்கு மேல் விளம்பரங்களிலிருந்து வரும்போது அப்பத்திரிக்கை இந்த வேலையை செய்துதானாக வேண்டும் (அப்படி இருக்க பிரதமர் ஏன் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கிறார் என்று கேட்காதீர்கள்! – அது தேசிய கீத்த்துடன் தொடர்புடைய விஷயம்) . இந்த மீடியாக்கள் தொடர்ந்து விளம்பரங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதுடன் மக்களிடம் ஒரு short term memory யை ஏற்படுத்துவதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

முதல்வர் மருத்துவமனை செல்லும் விஷயம் பேசப்பட்டபோது ராம்குமாரின் கொலை வழக்கு என்னாயிற்றென்பது மீடியாக்களின் கவனத்திலிருந்து தப்பிவிடும், Demonitisation பிரளயத்தில் தினம் ஒரு விவசாயி கரப்பான் பூச்சிகள் போல் தற்கொலை செய்து கொள்வது ஒரு பெரிய விஷயமில்லாமல் இதை சரிசெய்வது மாநில அரசின் கடமை என்ற அளவில் கூட பேசப்படாமல் ஓரங்கட்டப்படும், சென்னையில் நாடா புயல் வரும் விஷயத்தில் கோவை தனியார் கல்லூரியில் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் பற்றிய விஷயம் காணாமற் போய்விடும். தொல்லியல் துறையைப் போல் நூற்றாண்டுகளுக்கொரு முறையல்ல தினசரி நமது நினைவடுக்குகளை தீர்மானிப்பதென்பது ஊடகங்கள் கையில் சிக்கிவிட்டது. பாத்ரூமிலிருந்தும் தேனீர் கோப்பைக்கு தொட்டுக் கொள்ளவும் தருவிக்கப்படும் செய்திகள் அப்படித்தான் காரசாரமான வெரைட்டியான மசாலாவாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.
எல்லாவற்றிற்கும் காரணம் மனிதர் தம் முதுகெலும்பை அடகு வைத்ததுதான். எண்பதுகளில் வீரியத்துடன் செயற்பட்ட தொழிற் சங்கங்களும் மாணவ அமைப்புகளும் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆசிரியர் போராட்டங்களுக்கு தனியார் கல்லூரிகள் நடத்தாத கட்சிகள் மட்டுமே முன்வருகின்றன. கல்வியும், வியாபாரமும் தனியார் மயமாகி சூப்பர் மார்க்கெட்டில் “வெரிகோஸ் வெயின்” பின்னிக் கிடக்கும் அங்காடித் தெருக்களை ஆக்கிரமித்துவிட்டன. இந்நிலையில் கல்வியிலும் direct investment / வெளிநாட்டினரின் நேரடி முதலீட்டிற்கு விட்டு விடவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர் மாண்புமிகு கல்வி அமைச்சர்கள். கூடிய சீக்கிரம் மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் எல்லாமுமே அந்நிலையை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எலும்பிலாத உயிர்களை வெய்யில் அழிப்பதுபோல் அன்பிலாத உயிர்களை அறக்கடவுள் காய்ந்து அழிப்பான் என்கிறது குறள். நமக்கும் இரண்டுமே இல்லை. என்ன செய்ய?

Advertisements