அய்ப்பசிக் கடைசியில்
அடுக்குமாடிக் குடியிருப்பாளர்களுக்குச் சூடாக்க இணைப்பு வழங்கப்படுமாம்!

ஆயினும், ஐந்து மணிக்கு அலாரமடிக்கிறது
வீட்டில் ஒருவர் நடுநடுங்கி எழுந்து போகிறார்.

அடுத்த அலாரம் ஏழுக்கு அடிக்கும்.

இறுக்கிக் கண்களை மூடி போர்வையை இழுத்துத் தலையையும் மூடினேன்.

மெதுவாய் கேட்கிறது பக்கத்துவீட்டுத் தண்ணீர்ச் சத்தம்.

அவசரமாக அடித்துச் சாத்தப்படுகிறது முன்வீட்டுக் கதவு.

லிஃப்ற் கொஞ்சநாட்களாகப் பிரச்சினை
யாரோவொருவர் அந்தரப்பட்டுத் தட்டிக்கொண்டிருக்கிறார்.

குப்பைகள் எடுக்கும் நாளா ?
பராமரிப்பாளர் வண்டில்களை இழுத்துக்கொண்டு போகிறார்

குளிரைத்தாங்காத இப்போர்வையை அடுத்த குளிருக்கு முதல் எறிய வேண்டும்.
முப்பதோ நாற்பதோ….. நல்ல தடிப்பாய் ஒன்று வாங்க வேண்டும்!

அதற்கிடையில் ஏழுமணி கொஞ்சநேரம் உறங்கட்டும் மகள்.

ஒரு கோப்பைப் பச்சைத் தேநீரோடு
கூதிர்காலக் காலையைச் சற்றே திறந்தால்…
துாரத்து அழைப்பு முத்தத்தோடு ஆரம்பித்தது.

குசினி யன்னலோரத்தில் கிடக்கிறது
பறந்து வந்த மஞ்சள் இலை.

பல்கனியில் இரவு ஒதுங்கிய புறாவின் இறகொன்று துடிதுடிக்கிறது.

கிறிஸாந்தெம் மலர்கள் வாடிவிட்டன.

சாடியின் விளிம்பில்
தொங்கிக் கொண்டு ஒரு துளி தண்ணீர்.

மகளிடம்
அந்தக் கறுப்புக் குளிர் கோட்டை அணியச் சொல்லவேண்டும்.

நன்றி  : 50வது ‘காலம்’ சஞ்சிகை 

Advertisements