விஜி-பிரான்ஸ்
 
     ‘போர்  பெண்ணின் முகமல்ல’ (La guerre n’a pas un visage de femme) என்ற ஸ்வெற்லானா அலெக்ஸிவிற்ஸ் (Svetlana Aleksievitch) இன் தொகுப்பிற்குப்  2015 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. இது இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போராடிய 100 இற்கும் மேற்பட்ட பெண்களின் வாக்குமூலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ரஷ்ய  மொழியில் 1985 களில் வெளிவந்திருந்தபோதும் ஏனைய ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர்தான் ஐரோப்பாவில் பேசப்படும் ஒரு தொகுப்பாக மாறியுள்ளது.
       
          இந்நூலின் சிறப்பு என்னவென்றால் உலக யுத்தம் முடிந்து நான்கு தசாப்தங்களின் பின்னர்கூட, அப்பெண் போராளிகளினால் யுத்தத்தின்  வலிகளையும், அதனால் யுத்தம் தங்களது வாழ்வில் ஏற்படுத்திய வடுக்களையும் மறக்கமுடியவில்லை என்கின்ற வாக்குமூலங்களேயாகும். குறிப்பாக  யுத்தகாலங்களில் ஆயுதமேந்தியிருந்த அப்பெண்களின் நினைவலைகள் பதிவாகும் போதுதான்  யுத்தம் விட்டுச்செல்லும் வடுக்களையும் வேதனைகளையும் இவ்வுலகுக்கு உரத்து சொல்ல முடியும். அதிலும் எத்தனை காலங்கள் சென்றாலும் யுத்த வியாபாரிகளினால் பெண்கள்  மீது திணிக்கப்படும்  யுத்தத்தை சகித்துக்கொள்ள யாராலும் முடியாது என்கின்ற உண்மைகளையும் பதிவு செய்வதில் இந்நூல் முக்கிய பங்காற்றியுள்ளது.
                                  உலகம் முழுதும் யுத்தம்… யுத்தம்… மொழி,மதம், இனம் மற்றும் நிலம் போன்ற இன்னும் பல பெயர்களிலும் யுத்தம் நடைபெறுகிறது. எந்தக் காரணத்திற்காக யுத்தம் நடைபெற்ற போதும், யுத்தத்தின் இறுதியில்  வெற்றி பெற்றவர்களாகட்டும், தோல்வியடைந்தவர்களாகட்டும்  இரண்டு தரப்பினருக்கும் உயிரிழப்புகள், உடமைகளை இழந்தவர்கள், அங்கவீனமானவர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் போன்றவற்றையே  இந்த யுத்தம் விட்டுச் செல்கின்றது. இவை யுத்த அடையாளங்களாக நீண்ட காலத்திற்கு மனித குல வளர்ச்சிக்கு தடையாகவும் நிலைத்து நிற்பதை பார்க்கின்றோம்.
                             இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தமாகட்டும், உலகின் பல தேசங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற எந்த யுத்தமாகட்டும், எதற்கான யுத்தமாகவும் இருக்கட்டும், இந்த யுத்தங்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புதான் என்ன? தேசியம், இனம்,மதம், மொழி, நிலம் போன்ற பல்வேறு பெயர்களில் இந்த யுத்தங்கள்  இடம்பெறுகின்ற போதும் அவை யாவும் வெறும் ஆண் ஆதிக்க அரசியல் யுத்தங்களாகவே இருக்கின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் தலைமைகளே இந்த யுத்தங்களை தீர்மானிக்கின்றார்கள். ஆனால், பெண்கள் எவ்வாறு இதற்குள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்? ஏன் எவ்வித கேள்விகளுமற்று இந்த யுத்தங்களைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றார்கள்? கண்ணுக்கு முன் நமக்கு எதிரானதும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான விடயங்கள்  நடக்கும்போது கூட ஏன் பெண்கள் மௌனமாகவே இருக்க நேரிடுகிறது? இதுபோன்ற   கேள்விகள் எம்மிடம்  இருந்து எழுப்பப்பட வேண்டும்.ஆனால் அவ்வித கேள்விகள் எழுவது  மிக அரிதாகவே  உள்ளது.
                       ஆனால் , யுத்தங்களில் ஈடுபட்ட போராளிப் பெண்களிடமிருந்து அல்லது யுத்த அனுபவங்களை, பாதிப்புக்களை கொண்ட பெண்களிடமிருந்து அரிதாக வரும் எழுத்துக்கள் மறைமுகமாக இக்கேள்விகளையே முன்வைக்கதொடங்கியுள்ளன. அந்த வகையில் இலங்கையின் வன்முறைகள்,மற்றும் யுத்த அனுபவங்களை பொறுத்தவரையில் போராட்ட இயக்கங்களில் ஆரம்பகாலத்தில் இணைந்து போராடிய, சிறைசென்ற அனுபவத்தை எழுதிய புஸ்பராணியின் ‘அகாலம்’ முக்கியமானதொன்றாகும்.
                                       அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணாக, தாயாக,  போராளியாக வாழ்ந்த தனது அனுபவத்தோடு யாழ்ப்பாண வெளியேற்றத்தின் காரணமாக மக்கள் அனுபவித்த கொடுமைகளை கண்முன்னே கொண்டுவந்த தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ ஆகட்டும்,   விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து  திரும்பிய மூன்று பெண்களின்  சக வாழ்வை மேற்கொள்ளத் துடிக்கின்ற, அவர்களது தோல்விகள், துன்பங்கள், வெற்றிகள் போன்றவற்றை பதிவாக்கிய ஸர்மிளா ஸையத்தின்  வின் ‘உம்மத்’ ஆகட்டும், இளம்வயதில் இயக்கத்திற்கு சென்று யுத்தக்களம்வரை நின்று இறுதி யுத்தத்தில் உயிர் தப்பி தனது அனுபவத்தை ஒரு கூர்வாளின் நிழலில்’ தந்த தமிழினியாகட்டும் இவர்கள் அனைவருடைய எழுத்துகளும் யுத்தங்களை நோக்கிப் பலத்த கேள்விகளை எழுப்புகின்றன.
                                சமூகத்தில் ஏற்கனவே காணப்படும் பெண்களை இரண்டாம் பட்சமாககருதுகின்ற தன்மையானது விடுதலை  இயக்கங்களிலும் கூட கடைப்பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதையும், அதாவது எந்த பதவியில் இருக்கும் பெண்களும் சுயமாக முடிவெடுக்க முடியாமல் இருந்தமையும், தங்களுக்கு உடந்தையில்லாத முடிவுகளை நிறைவேற்ற வேண்டி இருந்தமையும்,பற்றி வாக்கு மூலங்கள் வெளிவருகின்றன.
 
இவற்றின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ யும் யுத்தங்களை நோக்கிய பல   கேள்விகளோடு எம்முன் எழுந்து நிற்கின்றது.
                       வெற்றிச்செல்வியின்  இந்தg$ பதிவானது இலங்கையில் இடம்பெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் ஆயுதமேந்த  நிர்பந்திக்கப்பட்ட பெண்களின் யுத்த முடிவுக்கு பின்னரான ‘புனர்வாழ்வு முகாம்’  பற்றிய அதாவது  ‘பெண் போராளிகளின் பம்பை மடு தடுப்பு முகாம் வாழ்வு’ தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவாக வெளிவந்துள்ளது.
                     181 பக்கங்களை கொண்ட ஆறிப்போன காயங்களின் வலி என்னும் இந்நூலில்   21-05-2009 இல் இருந்து 06-04-2010 வரை வெற்றிச்செல்வியும், அவளது தோழிகளுமாக மொத்தம் 1851 பெண்கள் புனர் வாழ்வு  முகாமில் கடந்து வர நேர்ந்த அனுபவங்களும்,  அவலங்களும், வலிகளும், பதிவாகியுள்ளன. அதேபோன்று அப்பெண்கள் சந்தித்த சவால்களையும் கூட இந்நூலில் காணக்கிடைக்கின்றது . இப்பதிவானது மிக நேர்மையாகவும், நேர்த்தியானதுமாக , மனதை உருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
                     ஏதோ ஒரு நம்பிக்கையின் பாற்பட்டு போராட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்த அல்லது அர்ப்பணிக்க  வைக்கப்பட்ட  இவர்களது போராட்ட வரலாறும், அதன் பின்னரான வாழ்வும் பல்வேறு  கதைகளாக,நாவலாக வியாபிக்க கூடியவை  என்று உணர வைக்கிறார் வெற்றிச்செல்வி. பெற்றோரை இழந்த கஜனி என்னும் முன்னாள் போராளி தன்  சகோதரியின் அன்பையும் இழக்க நேரிட்ட போது தற்கொலைக்குப் பலமுறை முயற்சி செய்வதையும், இரண்டு கால்களையும் இழந்த பெண் போராளிகள்   பழுதடைந்து, நாற்றமடித்து , நிரம்பி வழிந்து கிடக்கும்  மலசலகூடத்தை   எதிர்கொள்ள நேரும் கணங்களையும்  நினைத்துப்பார்க்கையில் நெஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. 
            மேலும் சுமித்திராவின் கதை கண்களை கலங்கவைக்கிறது. சுமித்திரா என்னும் முன்னாள் போராளி தடுப்பு முகாமிலிருந்த போது   தனது கைக்குழந்தையை எதேச்சையாக அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டுப் பெயர் பதியச்செல்கின்றார். ஆனால் அதிகாரிகளால் சடுதியாக அடுத்த முகாமிற்கு ஏற்றிக்கொண்டு செல்லப்பட நேரிடுகின்றது. குழந்தையை  யாரிடம் கொடுத்தோம் என்பதும் தெரியாமல், தற்போது குழந்தை  எங்கு  இருக்கின்றது என்பதும் தெரியாமல்   தன் குழந்தையை இழந்து  நிற்கின்ற  தவிப்பினை  கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் வெற்றிச்செல்வி.  மற்றும் கர்ப்பினியாக இருந்த நித்தியா முகாமில் வாழ்ந்த காலத்திலேயே குழந்தையை பெற்றெடுப்பதையும், தெரிந்த உறவினர்களுக்கு கடிதங்களை மிக இரகசியமாக அனுப்பிவிட்டு பதிலுக்கான காத்திருப்பதனையும், இறுதிவரை சில பெண்களுக்கு எந்தவொரு கடிதமும் யாரிடம் இருந்தும் வராதமையையும், உறவுகளை சந்திக்கும் நாட்களில் ஒலிபெருக்கியில் தங்களுடைய பெயர் கூப்பிடப்படமாட்டாதா? என தவம் கிடந்த பெண்களையும் எம்முன் யுத்தத்தின் சாட்சியங்களாக நிறுத்தியிருக்கிறார்.
             ‘இந்த நிலையில் இருந்து சமூகம் உங்களை ஏற்றுக்கொள்ளுமா? குடும்பம் உங்களை ஏற்றுக்கொள்ளுமா?’ என்கின்ற புனர்வாழ்வு அதிகாரிகள் வழங்கும்  வினாக்கொத்தில் இருந்த கேள்விகளைத் தொடர்ந்து போராளிப் பெண்களுக்குள் ஏற்படும் சலனம் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், அது ஒன்றும் வினாக்கொத்தினால் மட்டும் உருவாகியது அல்ல. அவை ஏற்கனவே ஒவ்வொரு பெண் போராளிகளின்  அடி மனதுகளை குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள்தான்.
                        உண்மையில இந்த சமூகம் எங்கள வெறுக்குமா? இந்த சனத்துக்காகத்தானே நாங்க எங்கட வாழ்வையே தியாகம் செய்தம்? எங்களுக்காகவா நாங்கள் சாகப் போனம்? எங்கட சனங்களுக்காகத்தானே விடுதலை கேட்டம்? என்று  ஆரணி என்பவர் எழுப்புகின்ற  கேள்விகள் உலகத்தில்  இடம்பெறும் யுத்தத்தங்கள் அனைத்திலும் பங்கெடுத்த பெண்கள் அனைவராலும் கேட்கப்படும் கேள்விகள்தான். யுத்தம் வெற்றி அடைந்தாலும் சரி, தோல்வியடைந்தாலும் ஆயுதமேந்திய பெண்களை  இந்த ஆணாதிக்க சமூகம் அணுகுகின்ற விதம் ஒரேமாதிரியானதுதானே! அதனாலே  முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் ஒரே விதமானதுதான்.
              இங்கு ஸ்வெற்லானா அலெக்சிவிட்ச்  (Svetlana Aleksievitch)  நூலில் வெளிவந்த ஒரு பழைய போராளிப் பெண்ணின்  வாக்குமூலமும் ஈழத்து ஆரணியின் ஆதங்கங்களும்  ஒரே மாதிரியானதாக அமைவதை காணமுடியும்.
‘எல்லோரும் போலவே நானும் போராட்டத்திற்கு போனேன். அவர்கள் தந்த உடையை அணியச்சொன்னார்கள் அணிந்தேன், என்னைச் சுட சொன்னார்கள் சுட்டேன்,  3 வருடங்களில் நான் சிறப்பாக சுட்டதற்காக பல பதக்கங்களைப் பெற்றுக்கொண்டேன். ஒருநாள் வெற்றி, வெற்றி என்று சந்தோசமாக கத்தினார்கள். நானும் கத்தினேன். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போதுதான் என்னை பயம் பற்றிக்கொண்டது.  எனது குடும்பம், உற்றார், ஊரார் என்று அனைவரும் என்னை வேறுவிதமாகப் பார்த்தார்கள்.  அப்போதுதான் எனது எதிர்காலத்தை பற்றிய ஏக்கம் வந்தது. சமூகத்திற்காக போராட போன நாங்கள் அதே சமூகத்தினரால் தூக்கியெறியப்பட்டோம்.’
                     யுத்தம் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் திருமணம் செய்யாது நான் தனியாகத்தான் வாழ்கிறேன். போன்ற வாக்குமூலங்களை வாசிக்கும் போது உலகத்தில் பெண்போராளிகள் எல்லோரும் எதிர் கொள்ள நேருகின்ற   ஆணாதிக்க சமூகம் ஒரே படித்னதானதாய் இருப்பதை காண முடிகின்றது. ஆணாதிக்கம் என்பது ரஷ்யாவில் மட்டுமல்ல அது யாழ்ப்பாணத்திலும் ஒரேவிதமாகவே செயற்படுவதைக் காணலாம்.

ஆனந்தவிகடன் வெளியிட்ட செய்தியும் அதனால் மிகவும் கோபமும் வேதனையும் அடைந்த பெண்களும்
——————————————————————————————————————————————————————————-
    இந்தியாவில் தம்முடைய புத்தகங்களோ, எழுத்துகளோ கூடிய கவனம் பெற வேண்டும் என்னும் நோக்கில் , இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல ஈழத்து- புகலிட எழுத்தாளர்களும் கூட இவ்வாறுதான் புனைவு என்றும், உண்மை என்ற பெயரிலும் எவ்வாறு இலக்கிய வியாபாரம் செய்கின்றார்கள் என்பதை நாமெல்லோரும் அறிவோம்.
              ஆனந்தவிகடன் இதழொன்றில் வெளிவந்த பம்பை மாடு முகாம்  பற்றிய செய்தி ஒன்றை வசித்த பெண்கள் மிகவும் வேதனையும்  சீற்றமும்  கொள்கின்றனர்.
எதுக்கு இப்படியெல்லாம் எழுதுறாங்க? இப்படி எழுதிறதால படையினரப் பழிவாங்குறாங்களா? எங்களப் பழிவாங்குறாங்களா? நாங்க வெளியே போய் வாழ்றதில்லையா? எங்கட பிள்ளைகள இவனுகளா கலியாணம் கட்டுவாங்கள்? இலங்கை அரசு செய்வது இன அழிப்பா? அல்லது இவ்வாறானவர்கள் செய்வதுதான் இன அழிப்பா? போன்ற கேள்விகள் அங்கு வாழ்ந்த பெண்களிடம் இருந்து தன்மானத்துடன் சீறியெழுகின்றன.
இதே போன்று  மருத்துவமனை ஒன்றில்,  ‘பம்பை மடு முகாமில் இரவிரவாக பெண்களின் கதறல் சத்தம் கேட்பதாகவும், பெண்களை நிர்வாணமாக ஓடவிடுவதாகவும்’  எமது மக்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்ததைக்   கேட்டுக்கொண்டிருந்த பம்பைமடு முகாமை சேர்ந்த பெண் ஒருவர் கண்கள் பனிக்க ‘அங்கே அப்படியெதுவும் நடக்கவில்லை’ ‘நானும் அங்கிருந்து வந்தவள்தான்’ என்று அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பது உண்மையில் கொடுமைதான்.
 

                    பொதுவாக யுத்தம் முடிந்தபின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி எமது சமூகத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் போராளிகளான ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி நடாத்தப்படுவதுமில்லை, மதிக்கப்படுவதுமில்லை. யுத்தத்தில் மடிந்தவர்கள் எல்லோரும் மாவீரர்கள், உயிருடன் இருப்பவர்களுக்குள் ஆண் போராளிகள் வீரர்களாகவும், பெண்கள் தரக்குறைவானவர்களாகவும்தான் கணிக்கப்படுகிறார்கள்.கற்பு  என்கின்ற கற்பிதத்தை யோனிக்குள் தேடுகின்ற அவலம்  இப்பெண்களின் வாழ்விலும் தொடர்கின்றது.

                    அதாவது சமூக வாழ்க்கைக்கு இந்தப் பெண்கள் பொருத்தமற்றவர்கள் என ஒதுக்கப்படுகிறார்கள். இப்பெண்களை திருமணம் செய்ய முன்வரும் ஆண்கள் மிகச் சிறிதளவே. இயக்கத்தில் இருந்த ஆண்களே கூட இப்பெண்களை திருமணம் செய்ய விரும்புவதில்லை.
                  ஆகவேதான் இப்பெண்கள் சமூக நீரோட்டத்தில் கலந்துகொண்டு ஒரு சக மனிசியாக வாழ்வதற்கு  மிகவும் பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது.  இந்தவகையான சமூக ஒதுக்குதலால்தான் வடக்கிலும், கிழக்கிலும் பால்வினைத் தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

புனர்வாழ்வு முகாம்களில் தம்வாழ்வு மீதான வேதனைகளை ஓரளவேனும் மறப்பதற்கு ஒவ்வொரு வாரமும் கலைநிகழ்ச்சிகளை இவர்களே தயாரித்து நடாத்தியிருப்பதும், விளையாட்டுப் போட்டிகளை பெண் இராணுவத்தினருடன் சேர்ந்து நடாத்தியதும் இவர்களுக்குள் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கியிருந்தது என்கின்றார் வெற்றிச்செல்வி . இறுதியில் நடந்த இசைக்குழுவினரின் நிகழ்வில் இராணுவத்தினருடன் சேர்ந்து பாடி, ஆடி மகிழ்ந்திருக்கின்றனர் என்பதெல்லாம் எதிரும் புதிருமாக நின்ற இருபிரிவினருக்கும் இடையில் ஒருத்தர் மீது மற்றவருக்குச் சிறிய நம்பிக்கை வளருவதையும் பார்க்கமுடிகிறது.
                          யுத்தகாலத்தில் மிகப்பெரிய பகை முரண்பாடுகளுடன் வாழ நேர்ந்த இரு இனங்கள் மீண்டும் நல்லிணக்கம், சகவாழ்வு போன்றவை நோக்கிப் பயணிக்க இந்தப் புனர்வாழ்வுக் காலகட்டம் வியத்தகு பங்காற்றியுள்ளமையை இந்நூல் விபரிக்கின்றது. எந்த இன மக்களாக இருந்தபோதும் அவர்களுடன் பேசிப்பழகும்போது பிரச்சனைகளை இலகுவாக புரியவைக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும் என்பதையே இது காட்டிநிற்கின்றது. இதுவரை நடைபெற்ற போராட்டம், யுத்தம், அழிவு ஆகியவை ஏன், எதற்கு, நாம் மேற்கொண்ட வழி சரிதானா? என்கின்ற கேள்விகளை நாம் கேட்டே ஆகவேண்டும்.
                                 பற்பல காரணங்களின் நிமித்தமாக போராடச்சென்றவர்கள், போராடுவதற்கென பிடித்துச் செல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இயக்கங்களுக்குள் நுழைந்ததும் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். அமைப்பின் ஒழுங்கு விதிகளும், கட்டுப்பாடுகளும் கட்டளையிடுவதை மட்டுமே கேட்பவர்களாகவும், செய்பவர்களாகவும் மாறிவிடுவோம். தலைமைகள் சொல்வதுதான் மந்திரம், அதுமட்டும்தான் சரியெனவும் எங்களை அர்பணிப்போம். அவ்வாறு  இயக்கத்துக்கு தனது  18 வருடங்களை  அர்ப்பணித்தவர்தான்  இந்த வெற்றிச்செல்வியும்.
                     இறுதி யுத்தக்களத்தில் அழிவையும், அவலத்தையும் எதிர்கொண்டவர். விடுதலை, வெற்றி,போன்ற  எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் நாசமாகிப்போனதையும் கூடவே சக தோழிகள், தோழர்கள் கண்முன்னே அழிக்கப்பட்டதையும், அங்கங்கள் இழந்து, உறவுகள் இழந்து சீரழிக்கப்பட்டதையும் உணர்ந்தவரும், வாழ்ந்தவரும் வெற்றிச்செல்வி. அதனால்தான் என்னவோ தோல்வி அடைந்துவிட்டோம் என்கின்ற ஏக்கத்தைத் தவிர  விடுதலைப் புலிகள் மீதான, அவர்களின் அரசியல், போராட்டம்,வழிமுறைகள் பற்றிய  எவ்வித கேள்விகளையும்  அவரது எழுத்தில் காணமுடியவில்லை.  மாறாக  ‘அன்பினதும் வீரத்தினதும் உச்சம்தான் கரும்புலிகள்’ போன்ற வசனங்களை அவர் உச்சரித்துக்கொண்டிருப்பது  கண்மூடித்தனமான இயக்க விசுவாசத்திலிருந்து வெளிவர இன்னும் சிறிதுகாலம் செல்லும் என்பதை உணர்த்துகின்றது. அதிலும் அவர் நேர்மையாகவே இருக்கிறார். இவ்வாறான விசுவாசி ஒருத்தரால் ‘பம்பை மடு முகாம்’ பற்றிய தகவல்கள் பதியப்படும்போது அதனது உண்மை தன்மைக்கு இன்னும் உறுதி சேர்க்கிறது.

                  அந்த வகையில் இதுவரை காலமும் நாம் கேள்வியுற்ற, வாசித்த, அறிந்த முகாம்கள்பற்றிய மிக மோசமான பார்வையை இந்த 1851 பெண்கள் வாழ்ந்த முகாம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புரட்டித்தான் போடுகிறது.   
இந்தப் பதிவை வாசித்து முடித்த போது என்னிடம் எழுத கேள்விகள்; இன்று இந்த பெண்கள் என்ன ஆனார்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? எமது பாழாகிப்போன சமூகத்தின் புறக்கணிப்பில் இருந்து எவ்வாறு வாழ்கிறார்கள்? இவர்களின் பொருளாதாரத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள்? பெற்றோரை, குழந்தையை, துணையை இழந்தவர்கள் அந்த துயரத்தில் இருந்து சிறிதளவேனும் மீண்டுவர எந்த மனநிலை மருத்துவர்கள் உதவுவார்கள்?இந்தப் பெண்களுக்காக எம்மால் என்ன செய்யமுடிகிறது?
இவர்களின் தொடரும் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றியும் வெற்றிசெல்வி போன்றவர்களிடம் இருந்துதான் எதிர்பார்க்கின்றோம்.      
நன்றி : ஆக்காட்டி -13