கிருபா முனுசாமி(இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் )

18358965_10210715576703477_6876675152542929908_o
பெண்ணுரிமை, பெண்ணியக் கோட்பாடுகள், தத்துவங்கள் என்று அதன் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் பெண்கள் அமைப்பாகத் திரண்டு முன்னெடுத்த முதற்போராட்டம் என்பது வாக்குரிமைப் போராட்டம் தான்.

முதல் அலைப் பெண்ணியம்:
19-ஆம் நூற்றாண்டு வரையிலும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை என்பது பெண்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டு, ஆண்களிலும் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
 
1880-களில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிட்டும் முன்னரே படித்த அல்லது சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்கும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. குறிப்பாகப் பழங்குடியின ஆண்களுக்கு வாக்களிப்பதில் பாரபட்சமான கட்டுப்பாடு தொடர்ந்தது.
 
பின், பெண்களின் வாக்குரிமைப் போராட்டங்களின் விளைவாகவும், அனைவருக்கும் வாக்குரிமை என்ற மனித உரிமை முன்னெடுப்பின் அடிப்படையிலும், 1979-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு மாநாட்டில் பங்குபெற்ற 189 நாடுகளிலும் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாகவும், இனம், மதம், பால் வேறுபாடு, சமூக நிலை ஆகிய பாகுபாடுகளின்றிப் பல நாடுகளிலும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குரிமை என்பது அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டு இன்றுவரையிலும் தொடர்கிறது. கடைசியாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு என்றால் அது சவூதி அரேபியா. கடந்த 2015 டிசம்பர் மாதம் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் தான் அந்நாட்டுப் பெண்கள் முதன்முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 
வாக்குரிமையை அடுத்து, பெண்களின் அரசியல் உரிமைகள், ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் சட்ட அதிகாரம், சொத்துரிமை போன்றவற்றை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தனர். அவை பல நாடுகளிலும் இன்று சட்ட உரிமைகளாகவே பெறப்பட்டிருக்கின்றன. இங்ஙனம், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பெண்ணுரிமைப் போராட்டங்களே முதல் அலைப் பெண்ணியமாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் அலைப் பெண்ணியம்:
அரசியல் உரிமைகளைத் தொடர்ந்து, 1960-களில் தொடங்கி 1980-கள் வரையிலுமான பாலியல், குடும்பம், வேலை ஆகிய தளங்களில் தங்களுக்கான உரிமைகளுக்காகப் பெண்கள் முன்னெடுத்த போராட்டங்களே இரண்டாம் அலைப் பெண்ணியம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் தான் அரசு பதவிகளை வகித்தல், தொழில்துறைகளில் சம வேலைவாய்ப்பு, நியாயமான அல்லது ஆண்களுக்கு இணையான சம ஊதியம், பாலியல் வன்முறையில் இருந்து சுதந்திரம், வன்புணர்வு, குடும்ப வன்முறை, திருமணம் போன்ற உறவுகளில் சமூக சமத்துவம், குடும்பச் சட்டத்தில் சம உரிமை, இனப்பெருக்க உரிமைகள், கருக்கலைப்பு மற்றும் இலவச குழந்தைப் பராமரிப்பு உரிமைகள், கல்வியுரிமை எனப் பெண்ணுரிமைகளின் பட்டியல் ஆழமாக வேர்விட தொடங்கின.
 
மேற்குறிப்பிட்ட பெண்ணுரிமைப் போராட்டங்கள், பெண்ணியக் கோட்பாட்டுத் தத்துவங்கள் எல்லாம் பெண்கள் அனைவருக்குமானதாகவே கருதப்பட்டு வந்தன. உண்மை என்னவெனில், கடந்த இரண்டு பெண்ணிய அலைப் போராட்டங்களும் வெள்ளையினப் பெண்களுக்கானதாக மட்டுமே இருந்தன.
 
பெண்ணியம் தொடர்பான பல்வேறு சிந்தனைகளும் வெள்ளையின மத்தியதர மற்றும் உயர் வர்க்கப் பெண்களினால் ஆதிக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், பெண்கள் அனைவரும் ஒன்றல்ல என்றும், இச்சமூகத்தில் பாலியல், பாலின அடையாளம், வர்க்க ஒடுக்குமுறை மற்றும் இனவெறி பிரிக்கமுடியாத அளவிற்கு ஒன்றாகப் பிணைந்திருப்பதன் விளைவாக, ஒடுக்கப்படும் பெண்களின் மீதான அடக்குமுறையிலுள்ள படிநிலைகளையும், பாகுபாடுகளினுடைய பன்முகத்தன்மையும் கறுப்பின பெண்கள் உரக்கக் கூறினர். அடிமை அடக்குமுறையிலிருந்து அதற்குப் பின்னான நவீன சமத்துவமின்மை சர்ச்சைகள் வரையிலும் கறுப்பினப் பெண்கள் உட்படுத்தப்பட்டதாக முன்வைத்த பல்வேறு ஒடுக்குமுறைகளும் ஒரு கோட்பாடாகவே உருவெடுத்தது. அதுவே “கறுப்புப் பெண்ணியம்” என்றழைக்கப்படுகிறது.
 
அவ்வாறாக, கறுப்பினப் பெண்களையும், அவர்களது தனித்துவமான பிரச்சினைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தாத பெண்ணுரிமைப் போராட்டங்களை முன்வைத்த பெண்ணியக் கோட்பாட்டுத் தத்துவம் ‘வெள்ளைப் பெண்ணியம்’ என்று விமர்சிக்கப்பட்டது.
 
குடியுரிமைகள் இயக்கத்திலிருந்த பாலின வேற்றுமையினாலும், பெண்ணிய இயக்கங்களிலிருந்த இனவாதத்தினாலும், 1960-களில் கறுப்புப் பெண்ணியம் பிரபலமானது.
 
கறுப்புத் தேசியம், சம பால் ஈர்ப்பாளர்கள் விடுதலை மற்றும் இரண்டாம் அலை பெண்ணியம் ஆகியவைகளில் கறுப்புப் பெண்களின் பங்கை ஆராய 1970-இல் தொடங்கி 1980-இற்குள் கறுப்புப் பெண்ணியவாதிகள் பல்வேறு குழுக்களை உருவாக்கினர்.
 
கறுப்பினப் பெண்களின் குறிப்பிட்ட தேவைகளை வெள்ளைப் பெண்ணிய இயக்கங்கள் அலசுவதில்லை என்றும், கறுப்பினப் பெண்களின் விடுதலையே அனைத்து மக்களின் விடுதலையை இன்றியமையாததாக்குகிறது ஏனெனில் கறுப்பினப் பெண்களின் விடுதலைக்கு இனவெறி, பாலியல், வர்க்க அடக்குமுறை ஆகியன முடிவுபெற வேண்டும் என்றும் காம்பாஹீ நதி கூட்டியக்கம் (Combahee River Collective) என்னும் கறுப்புப் பெண்ணிய சமபால் ஈர்ப்பாளர்கள் அமைப்பு 1974-இல் வாதிட்டது.
 
காம்பாஹீ நதி கூட்டியக்கமானது, பார்பரா ஸ்மித் என்ற கறுப்புப் பெண்ணியவாதியின் உந்துதலினால், கறுப்பினப் பெண்களின் நிலை குறிப்பானது என்னும் புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்த பெண்ணியம் தொடர்பான பல்வேறு வெளியீடுகளில் ஈடுபட்டது. கறுப்புப் பெண்ணியவாதிகள் தொடர்பான வேறுபட்ட பிரச்சினைகளை விவாதிக்க 1970-கள் முழுவதுமே வாராந்திரக் கூட்டங்களை நடத்திவந்தது.
 
இதனாலேயே, வெள்ளைப் பெண்ணியவாதிகளை வெறுக்கும் ஆண்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சொந்தமாகச் சிந்திக்கும் திறமில்லாமல் வெள்ளையினப் பெண்ணியவாதிகளின் வழியைப் பின்பற்றுபவர்களாக, இடையூறுவிளைவிப்பவர்களாக அவ்வமைப்பு முத்திரையிடப்பட்டது.
 
அதிகாரக் கட்டமைப்புகளில் வெள்ளைநிறப் பெண்களிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட வகையில் தான் கறுப்பினப் பெண்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கறுப்புப் பெண்ணிய ஆதரவாளர்கள் வாதிட்டனர்.
 
1969-இல் வெளியிடப்பட்ட “புரட்சிகரச் சக்தியாகக் கறுப்பினப் பெண்களின் விடுதலைக்கான ஒரு வாதம்” எனும் நூலில் அதன் நூலாசிரியர் மேரி ஆன் வெத்தர்ஸ் பின்வருமாறு கூறுகிறார்:
  “அனைத்துப் பெண்களும் ஒடுக்கப்படுகிறார்கள், வெள்ளையினப் பெண்களும் கூட, குறிப்பாக ஏழை வெள்ளையினப் பெண்கள், அதிலும் குறிப்பாக இந்திய, மெக்சிய, பியூர்டோ ரிகா, கிழக்கத்திய மற்றும் அமெரிக்க கறுப்பினப் பெண்களின் மீதான ஒடுக்குமுறையானது மேற்கூறிய எவரை விடவும் மும்மடங்காக உள்ளது. ஆனால், பொதுவாகவே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்தப் பொதுவானக் காரணியைக் கொண்டு மற்றப் பெண்களிடம் நாம் பேச தொடங்க முடியும், அவர்களுடன் இணைப்புகளை ஏற்படுத்தி அதனை நாம் திரட்டவிருக்கும் புரட்சிகர சக்தியாக உரு மாற்றலாம் என்பதே ஆகும்.”
 “ஒரு கறுப்பினப் பெண்ணாக இருப்பதன் அனுபவத்தை, கறுப்பாக இருப்பதன் அடிப்படையிலோ அல்லது பெண்ணாக இருப்பதன் அடிப்படையிலோ புரிந்துக்கொள்ள முடியாது” என்று கறுப்புப் பெண்ணியம் குறித்து 1989-இல் வெளியிடப்பட்ட “பாகுபாட்டிற்கு எதிரான கோட்பாடு, பெண்ணியத் தத்துவம் மற்றும் இனவெறிக்கெதிரான அரசியல் பற்றிய கறுப்புப் பெண்ணியவாதியின் விமர்சனம்” எனும் படைப்பில் கிம்பெர்லே கிரென்ஷா விவாதித்திருக்கிறார்.
 
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் முக்கிய தளங்கள் கறுப்பினப் பெண்களை அதிலிருந்து அந்நியப்படுத்தியது. ஏனெனில், வெள்ளைப் பெண்ணியவாதிகள் பெண்களின் வேலைவாய்ப்பிற்காக போராடிக் கொண்டிருந்த நேரத்தில், கறுப்பினப் பெண்கள் வறுமையின் காரணமாக வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தலைமுறைகளாக வேலைச் செய்ய வேண்டியிருந்தது. வெள்ளைப் பெண்ணியவாதிகள் குடும்பக் கட்டுப்பாட்டு விடுதலையை வலியுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கறுப்பினப் பெண்களின் கருத்தடை சாதனத்திற்கான தேவையைக் குறித்த சிந்தனை வழங்கப்படாமல் இருந்தது.
 
வெள்ளையினப் பெண்கள் விருப்பமற்ற கர்ப்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட போது அவற்றை திருட்டுத்தனமாக கலைக்க வேண்டியிருந்தமையால் கருக்கலைப்பு உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில், ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்கள் கட்டாய கருத்தடைத் திட்டத்தினால் அவதிப்பட்டுவந்தனர். கட்டாய கருத்தடை திட்டம் என்பது அறுவை சிகிச்சை அல்லது மற்ற கருத்தடை முறைகளுக்கு உட்படுத்த கட்டாயப்படுத்தும் அரச கொள்கைகளாகும். வழக்கமாக, குறைபாடுள்ள மரபணுக்களை கொண்டவர்களாகக் கருதப்படும் ஒரு இனத்தின் இனப்பெருக்கத்தை தடுக்க, 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், உலகின் பல நாடுகளிலும் இம்மாதிரியான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதாகவும் கறுப்புப் பெண்ணியவாதியான ஏஞ்சலா டேவிஸ் தெரிவிக்கிறார்.
 
இப்படி எந்தப் பெண்ணிய இயக்கங்களோ, மற்ற இயக்கங்களோ கறுப்பினப் பெண்களின் பிரச்சினைகளை முன்னெடுக்காத நிலையில், அப்படியே கறுப்பினப் பெண்களின் பிரச்சினைகளை பேச முற்பட்டாலும், அது அவர்களின் வாராந்திரக் கூட்டங்களின் கடைசி வாரத்தில் தான் அமைந்திருக்கும். அதிலும் கூட, அலிஸ் வாள்கெர் அல்லது டோனி மாரிசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை ஒட்டுமொத்தக் கறுப்பினப் பெண்களின் பிரதிநிதிகளாக அழைப்பார்கள். கறுப்பினப் பெண்களே அவர்களுக்கானவற்றை “அனைத்து பெண்களும் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தனவர் அனைவரும் ஆண்கள் ஆனால் எங்களுள் சிலர் தைரியசாலிகள்” என்ற நூலாக 1982-இல் வெளியிட்டனர். இந்நூல், அகாஷா குளோரியா ஹல், பாட்ரிசியா பெல் ஸ்காட் மற்றும் பார்பரா ஸ்மித் ஆகிய கறுப்புப் பெண்ணியவாதிகளால் தொகுக்கப்பட்டது.
 
20-ஆம் நூற்றாண்டு முழுவதிலும், மைய நீரோட்டப் பெண்ணியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் கறுப்புப் பெண்ணியம் பரிணமித்தது. அலிஸ் வாள்கெர் போன்ற புதிய சிந்தனையாளர்களின் தாக்கம் இருந்த போதும், அது வரலாற்று கோட்பாடுகளை தக்க வைத்திருந்தது. அலிஸ் வாள்கெர், வெள்ளையினப் பெண்களோடு ஒப்பிடும் போது கறுப்பினப் பெண்களின் ஒடுக்குமுறையின் அளவை அழுத்தமாக கூறும் வகையில் ‘மகளிரியம்’ என்ற முழுப் புதிய உட்பிரிவையே கறுப்புப் பெண்ணியத்தில் உருவாக்கினார்.
 
கறுப்புப் பெண்ணிய அமைப்புகள் மற்றப் பெண்ணிய அமைப்புகள் எதிர்கொள்ளாத மூன்று வேறுபட்ட சவால்களைக் கடக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, பெண்ணியம் என்பது வெள்ளையினப் பெண்களுக்கானது மட்டுமல்ல என்பதை மற்றக் கறுப்பினப் பெண்களுக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது. இரண்டாவதாக, வெள்ளையினப் பெண்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தக் கோர வேண்டியிருந்தது.
மூன்றாவதாக, கறுப்பினத் தேசியத்தினுடைய பெண் வெறுப்பு போக்குகளை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. இந்த சவால்களோடு “போர் களைப்புற்ற வீரர்கள்” என கறுப்புப் பெண்ணியவாதிகளை குறிப்பிடும் பல செயற்பாட்டாளர்களின் கேலிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மூன்றாம் அலை பெண்ணியம்:
மேற்குறிப்பிடப்பட்ட, இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் தோல்விகளாகக் கருதப்பட்டவற்றிலிருந்து 1980-பின்னர், பல வகைப்பட்ட செயற்பாடுகளோடு பெண்ணிய இயக்கங்கள் எழுந்தன. இந்த இயக்கங்கள், ‘பெண்கள் பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டவர்கள்’ என்ற உணர்த்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இது மூன்றாம் அலைப் பெண்ணியம் ஆகும்.
 
மூன்றாம் அலைப் பெண்ணியத்தின் முக்கியமான செயற்பாட்டாளரான பெல் குக்ஸ் (Bell Hooks) பெண்ணியம் மற்றும் காதல் தொடர்பாகக் குறிப்பிடும் பொழுது, “நாம் காதலை ஏற்றுக் கொள்வது என்பது ஒருவரை அங்கீகரிப்பதிலும், ஏற்றுக்கொள்வதிலும் வேரூன்றி இருக்க வேண்டும் என்கின்றார். இக்காதலானது ஒருவர் மீது ஒருவர் அக்கறை செலுத்துவதில், பொறுப்புக்களை எடுப்பதில், ஏற்றுக் கொள்வதில், அதற்கு பங்களிப்பு செய்வது என பல விடயங்களை உள்ளடக்கியதாகும். நீதி, நியாயம் இல்லாமல் எந்தக் காதலும் இருக்க முடியாது, உயிர் வாழ முடியாது. இந்தப் புரிதலில், காதலானது எங்களை மாற்றுவதற்கும், அடக்குமுறைகளை எதிர்ப்பதற்குமான சக்தியையும், பலத்தையும் தருகின்றது. பெண்ணியத்தை தேர்வு செய்வது என்பது காதலைத் தேர்வு செய்வதாகும். இதே போல் பெண்ணியமும் ஆன்மீகமும் இப்பொழுது முக்கியமான கவனத்தைப் பெறுகின்றது. சுயத்தைப் புரிந்து கொள்வதற்கு, சுய ஏற்றுக் கொள்ளலும், சுய காதலும் முக்கியமானது. ஆனால் இவ்வாறான ஒரு ஆன்மீகப் பாதையை ஆண்களால் உருவாக்கப்பட்ட ஆணாதிக்க மதங்கள் மனிதர்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு வழங்குவதில்லை.”
 
மேலும், பெண்கள் சுதந்திரமாகவும், சம வாய்ப்புகளுடனும், உரிமைகளுடனும், தமக்குப் பாதுகாப்பான கலாசாரம் ஒன்றுடன் வாழ்வதற்கு மதங்களே தடையாக இருக்கின்றன. இத்தடை அகற்றப்படாதவரை பெண் விடுதலை என்பது இன்னும் நீண்ட காலத்திற்கு ஒரு கனவாகவே இருக்கும். அதேவேளை மதங்களால் தவறான வழிகளில் வழங்கப்படுகின்ற ஆன்மீகத் தேவையை சரியான வழிகளில் அதற்கு மாற்றீடாக பெண்ணியமானது வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அல்லது பெண்களைத் தூக்கி நடுக் கடலில் இட்டதற்கு, அதாவது சட்டியிலிருந்து அடுப்பிற்கு போட்டதற்கு சமமாகும். ஆகவே பெண்ணியப் போராட்டமானது தனக்கான ஆன்மீகப் பாதையையும் சமாந்தரமாக உருவாக்கிக் கொண்டு செல்வதே ஆரோக்கியமானதும் நன்மையானதுமாகும்” என்கின்றார் பெல் குக்ஸ்.
பெல் கூக்சைப் (Bell Hooks) பொறுத்தவரை ‘நான் ஒரு பெண்ணியவாதி என்பதைவிட, பெண்ணிலைவாதக் கருத்துக்களை முன்னெடுப்பவர்’ எனக் கூறுவதே பொருத்தமானது என்கின்றார். “ஏனெனில் பெண்ணியவாதி எனக் கூறும் பொழுது அதன் பிரதிநிதித்துவமானது மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது. மாறாக பெண்ணிலைவாதமானது பாலியல் ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரப் போராடுகின்ற போதும் பல்வேறு அடக்குமுறைகள், சுரண்டல்கள், இனவாதம் என்பவற்றுக்கு எதிராகவும் போராடுகின்றது. இவரைப் பொறுத்தவரை பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டுமானதல்ல. மாறாக ஆணாதிக்க, இருபால் ஒரு தார மண சமூகம் கட்டமைத்த பால், பால்தன்மை, பாலியல் அனைத்தையும் கட்டுடைப்பு செய்வதாகும். ஆகவே பெண்ணியம் என்பது அனைவருக்குமானது. இது அன்பு மற்றும் நட்புறவு என்பவற்றின் அடிப்படையில் கட்டியமைக்கப்படுவதுடன், அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான சிந்தனையுடனும் இருக்க வேண்டும் என்கின்றார்.
மேலும், இவ்வாறான ஓர் இயக்கத்தில அனைத்துப் பெண்களும் பங்குபெற வேண்டுமென்றும்” கூறுகிறார்.
 
இந்தியாவில் பெண்ணியம்:
இந்தியாவைப் பொறுத்தவரை, 1970-களில் தான் பெண்ணிய அமைப்புகள் உருவாக துவங்கின. அவைகள் பெரும்பாலும் குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை போன்ற பிரச்சனைகளை மட்டுமே முன்னெடுத்தன. சில இடதுசாரி பெண்கள் அமைப்புகள் சமமற்ற ஊதியம், நிலச் சீர்த்திருத்தங்கள் ஆகியவைகளைக் கையிலெடுத்தன.
 
இதுவரை இந்தியாவில் பேசப்பட்டு வரும் பெண்ணியம், பார்ப்பன மேட்டுக்குடிப் பெண்கள் தம்மை விட நிலைமையிலும் அதிகாரத்திலும் இருந்த ஆண்களின் அதே அதிகாரத்தைக் கோரிப் பெறுவதற்கான இச்சையாகவும் அதற்கான முறையீடாகவும் தாம் இருந்திருக்கின்றன.
 
1990-கள் வரையிலுமே ஆதிக்க ஜாதி/நடுத்தர வர்க்க பெண்களின் பிரச்சனைகளும் நலன்களும் ஒட்டு மொத்த இந்திய பெண்களின் பிரச்சனைகளாக, நலன்களாகப் பார்க்கப்பட்டது.
 
1990-களில் தான் தலித் பெண்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறையை இங்கிருக்கும் பெண்ணிய அமைப்புகள் புறக்கணிப்பதை எதிர்த்துத் தலித் பெண்கள் கேள்வி எழுப்பினர்.
 
தலித் பெண்ணியச் செயற்பாட்டாளாரான ரூத் மனோரமா அவர்கள் 1993-ஆம் ஆண்டு “தலித் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்கினார். பின், 1995-இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் “தலித் பெண்கள் சங்கம்” உருவாக்கப்பட்டது.
 
இந்த செயற்பாட்டிற்கு பிறகே, பெண்களுக்குள்ளான ஒடுக்குமுறையின் படிநிலைகளையும், பாகுபாடுகளின் பன்முகத்தன்மையும் விவாதத்திற்கு வந்தது.
 
ஆப்பிரிக்க-அமெரிக்க கறுப்பினப் பெண்களின் நிலை, அந்நாட்டு வெள்ளையினப் பெண்களை விடவும் இழிவானதாக இருக்கும் சூழலில் அப்பெண்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்பதும், அவர்களுள் வேறுபாடுகள் இல்லை என்பதும் எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதே அளவு முட்டாள்தனமானது தான் இந்திய ஆணாதிக்க, ஜாதிய, நிறவாத, இனவாத, மதவாத சூழலில் அனைத்து பெண்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று வாதிப்பதும்.
 
ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் வெள்ளையினப் பெண்களுக்குள்ளான வேறுபாடுகள் எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவும், அதை விடவும் உண்மை, இந்தியா போன்ற ஆசிய நாட்டு பெண்களுக்கிடையேயான வேறுபாடுகளும், ஒடுக்குமுறையின் படிநிலைகளும், பாகுபாடுகளின் பன்முகத்தன்மையும்.
 
ஆனால், இவைக் குறித்த புரிதலே இல்லாத, சமூக அமைப்பு என்றால் என்னவென்றே தெரியாத பல முற்போக்குவாதிகளாலும், பார்ப்பனிய மேட்டுக்குடி பெண்ணியவாதிகளாலும், ஏன் தலித் ஆண்களாலுமே கூட “பெண்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள்” என்று ஒரு பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
 
எனவே, பெண்ணியச் சித்தாந்தத்தையும், தவறாகக் கருத்துருவாக்கம் செய்யப்படும் பெண்ணியத்தையும், ஆப்பிரிக்க – அமெரிக்கப் பெண்ணியக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில், இந்தியச் சூழலில் பெண்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் மறுவரைவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக நம் முன் எழுந்து நிற்கிறது.
 
இந்தியப் பெண்களுக்குள்ளான வேறுபாடு:
ஜாதிய ரீதியிலான ஒடுக்குமுறைக்கு தலித் பெண்கள் ஆளாகும் இதே சமூகத்தில், தன் பெயருக்குப் பின்னால் ஐயர், ஐயங்கார், பிள்ளை, மேனன், அகர்வால், சர்மா, மிஸ்ரா என்று அவர்கள் உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கும் தங்களின் ஜாதிய, சமூகத்துப் பெயர்களை உடன் சேர்த்துக்கொள்ளும் பெண்கள் இருக்கும்போது எப்படிப் பெண்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து ஒடுக்கப்பட்டவர்களாகப் பார்க்க முடியும்?
 
அது மட்டுமல்லாது, இச்சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமாகவே அணுகப்படுகிறாள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு பார்ப்பனப் பெண்ணிற்குக் கிடைக்கும் வாய்ப்பும், சிறப்புரிமையும், இயல்பான மரியாதையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணிற்குக் கிடைப்பதில்லை. அவர்கள் இருவருக்கும் கிட்டும் வாய்ப்பும், சிறப்புரிமையும், மரியாதையும் ஒரு தலித் பெண்ணிற்கு, பழங்குடியினப் பெண்ணிற்கு, குறவர் சமூகத்துப் பெண்ணிற்குக் கண்டிப்பாய் கிட்டப்போவதில்லை.
 
உதாரணமாக, ஒரு பார்ப்பனப் பெண்ணை இச்சமூகம் ‘மாமி’ என்றும், பார்ப்பனக் கலையாக உருமாற்றப்பட்டிருக்கும் பரதநாட்டிய கலைஞர் ஒருவரை நாட்டியத் தாரகை, நர்த்தகி என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறது. இதே சமூகம், ஒரு குறவர் பெண்ணை ‘குறத்தி’ என்றும், நாட்டுப்புற கலையான கரகக் கலைஞரை ‘கரகாட்டக்காரி’ என்றும் அடையாளப்படுத்துகிறது. செம்மரக்கட்டை கடத்தல் குறித்த வழக்கொன்றில் தொடர்பிருப்பதாகக் கருதப்பட்ட மோகனாம்பாள் என்னும் பெண்ணை வரிக்குவரி ‘கரகாட்டக்காரி” என்று குறிப்பிட்டு வெளியான ஊடகச் செய்திகளையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
மோகனாம்பாளை கரகாட்டக்காரி என்று அழைத்த இந்த ஊடகங்கள் ஏதேனும் கோடி கோடியாய் கொள்ளை அடித்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவையோ அல்லது வேறு மேட்டுக்குடி பெண்களையோ இவ்வாறு மரியாதையில்லாமல் தரம் தாழ்ந்து அழைத்ததுண்டா?
 
தலித் பெண்களையும், குறவர் பெண்களையும் காவல் துறையினர் கைது செய்து, காவல் நிலையத்தில் நிர்வாணமாக்குவது, வன்புணர்வது, அப்பெண்களின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவுவது, அவர்களின் பிறப்புறுப்பில் லத்தியை நீண்ட நேரம் நுழைத்து துன்புறுத்துவது எனக் கொடுமைப்படுத்துகிறார்கள். இவற்றைத் தேசிய பட்டியல் ஜாதிகள் ஆணையத்தின் ஆய்வு குழு சித்திரவதைப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறது.
 
உத்திர பிரதேசத்தில் ஒரு தலித் ஆண் ஆதிக்க ஜாதி பெண்ணோடு ஓடிவிட்டதற்காக, அந்த ஆணின் தங்கைகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி, ஊர்வலம் போகவிட்டு, ஆதிக்க ஜாதி ஆண்கள் பலரும் கூடி வன்புணர்வு செய்ய வேண்டுமென இலக்கமுறை இந்தியாவை (Digital India) கொண்டாடிக் கொண்டிருக்கும் 2016-இல் ஆதிக்க ஜாதியினர் மட்டுமே பங்குவகிக்கும் ஒரு சிற்றூர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியது.
 
இதெல்லாம் ஒரு பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்ணிற்கு நடக்குமா? இந்த பொது சமூகம்தான் அவர்களை அப்படி நடத்தவிட்டுவிடுமா? இவ்வளவு கூட வேண்டாம். அவர்களின் நடத்தையைப் பற்றி உங்களால் ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. ஒட்டு மொத்த சமூகமும் பால் பேதமின்றி, ஜாதி பேதமின்றி பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க நமக்கெதிராகத் திரும்பும். ஸ்வாதி கொலையே அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் கொலையுண்ட போது அக்கொலைக்காகப் பதறியதைக் காட்டிலும், அவரைக் கற்புக்கரசி என்று நிரூபிக்கக் கதறியவர்களே அதிகம்.
 
தோற்றம்:
இப்போது தோற்றத்திற்கு வருவோம். ஒரு வெள்ளைத் தோல் கொண்ட பெண்ணிற்குக் கிட்டும் வாய்ப்பும், சிறப்புரிமையும், மரியாதையும் எக்காலத்திலும் இவ்வினவாத உலகில் ஒரு கறுப்புநிறப் பெண்ணிற்குக் கிட்டப்போவதேயில்லை. இதில் ஒல்லி, குண்டு என்ற உட்பிரிவு வேறு இருக்கிறது. அதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வெள்ளைத் தோல் கொண்ட பெண் குண்டாக இருக்கும் பட்சத்தில் “கொழுகொழு, குஷ்பூ” என்று அதுவும் அழகு என்ற வரையறைக்குள் வந்துவிடும். அதுவே கறுப்பான ஒரு பெண் குண்டாக இருக்கும் பட்சத்தில் “இடைவிடாமல் தின்பதே முழுநேர வேலையாக இருப்பது, பூதம், யானை, அது நம்மை நோக்கி வருது ஓடுங்க” என்று கேலிப்பொருளாக்கப்படுவார்கள்.
 
இப்போது கறுப்பு, வெள்ளை பாகுப்பாட்டிற்கு வருவோம். இவ்வகை பாகுபாடானது உலகம் முழுவதுமே நிலவும் போது பெண்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? இங்கே வெள்ளைநிற பெண்களுக்கு கிடைக்கும் எதுவுமே ஒரு கறுப்புநிற பெண்ணை பொறுத்தவரை எட்டாக் கனியே!
 
நம் நாட்டு நீதிமன்றங்களையே எடுத்துக்கொள்வோம். கறுப்பான தோலோடும், வழக்கறிஞர் தொழிலில் எட்டு ஆண்டுகள் அனுபவத்தோடும் இருக்கும் நான் என்னதான் காட்டுக் கத்துக் கத்தினாலும் வாய்தா கூட வழங்கமாட்டார்கள். ஆனால், வெள்ளைத் தோலோடும், கூடுதலாக ஒல்லியான தோற்றமும், பெயருக்கு பின்னால் உயர்வாக கருதப்படும் ஜாதியும் இருந்துவிட்டால் போதும் அப்பெண் வாய்தாவே கேட்டாலும் சாதகமான தீர்ப்புகளை வழங்குவார்கள். அதற்கு நானே சாட்சி!
 
சமூகச் செயற்பாடு என்று எடுத்துக்கொண்டாலும் கூட பார்ப்பன, ஆதிக்க ஜாதி, சற்றே வெள்ளை தோல் பெண்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு எந்தத் தலித் பெண்ணும் கொண்டாடப்படவில்லை.
 
ஏன், தன்னை தலித்தாக காட்டிக்கொண்டு, மிகையான தலித்தியம் பேசி தங்களை பெரும் போராளிகளாக வளர்த்துக்கொண்ட ஆதிக்க ஜாதி பெண்களை கொண்டாடிய அளவிற்கு கூட எந்நேரமும் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று முழங்கிக் கொண்டும், உட்படுத்தப்படும் பல்வகைப் பாகுபாடுகளை நிமிடம்தோறும் எதிர்த்துப் போராடிக்கொண்டும் இருக்கும் தலித் பெண்களைத் தலித் ஆண்களே கூடக் கொண்டாடியதில்லை.
 
அப்பெண்களுமே பின்னாட்களில் “நான் தலித் இல்லை, நீங்கள் எல்லாம் அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று சிறிதும் குற்றவுணர்வு இல்லாது பதிவுகள் போட்ட போதும் கூட அப்போலி முகத்திரைகளை விட்டுக்கொடுக்காது கொண்டாடியபடியே தான் இருந்தார்கள். இப்படியான ஈனச் செயல்களால் அவர்களின் “பிரபல அந்தஸ்துக்கு” எவ்வித பங்கமும் ஏற்படவில்லை.
(Rachel Dolezal, National Association for the Advancement of Colored People – ரேச்சல் டொலெசால் என்ற பெண்மணி பார்வைக்கு நிறத்தவர் போல தோன்றினாலும், அவரது பெற்றோர் முன்வந்து அப்பெண் வெள்ளையினத்தவர் என்றும், கருப்புசாயம் பூசிக்கொண்டு தன்னைக் கறுப்பினப் பெண்ணாக காட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் பேட்டியளிக்கும் வரை, அப்பெண்ணைப் பலரும் கறுப்பினப் பெண்ணாகவே கருதி வந்தனர். அவரின் பொய்யான தோற்றத்தினால் நிறத்தவர்களின் முன்னேற்ற தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் கூட இருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. அப்பெண் கருப்புச்சாயம் பூசிக்கொண்டு தன்னைக் கறுப்பினப் பெண்ணாகக் காட்டிக்கொண்டதன் மூலமாக, பிறப்பால் கறுப்பினப் பெண்ணாக இருந்து பல்வேறு ஒடுக்குமுறைகளைக்கும் ஆளாகி போராடும் ஒரு பெண்ணின் தலைமைத்துவத்தை, அங்கீகாரத்தை பறித்திருக்கிறார். ஆனால், இதுகுறித்த எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாது நான் என்னைக் கறுப்பினப் பெண்ணாகத் தான் கருதுகிறேன் என்று பேட்டியளிக்கிறார். இந்தச் சூழ்நிலையில் தான், அம்பேத்கர் கோட்டு சூட்டு அணிந்ததிலும், காந்தி சட்டை இல்லாமல் இருந்ததற்குமான ரசியலை நினைவுக்கூர வேண்டியிருக்கிறது.)
ஆனால், இப்படியான ஏமாற்றுச் செயல்களினூடாகத் தன்னைப் பிரபலமாக்கிக்கொண்ட பெண்களை அம்பலப்படுத்தியதற்காக நான் உட்பட பல தலித் பெண்களும் பல்வேறு வசவுகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இவையெதையும் பொருட்படுத்தாது, இன்றளவும் அப்போலிகளைப் பெரும் போராளிகளாக எங்களிடம் வந்து துதி பாடும் தலித் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்போது கூட அந்த ஏமாற்றுப் பிரபலங்களை திட்டிப்பாருங்கள். தலித் ஆண்கள் உட்பட, ஒட்டுமொத்த பொது சமூகமுமே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கும். அதே என்னையோ, என் போன்ற வேறொரு தலித் பெண்ணையோ எத்தனை ஜாதிய வன்மத்தோடு வசை பாடினாலும் தலித் ஆண்கள் கண்டும் காணாதது போல கடந்துவிடுவார்கள்.
 
தலித் ஆண்களே, தலித் பெண்களை பாகுப்பாட்டோடு நடத்தும் போது வாய்ப்புகள், சிறப்புரிமை, மரியாதை என பலவும் வாய்க்கப்பட்ட பார்ப்பன, ஆதிக்க ஜாதிப் பெண்களையும், தன் சொந்த சமூகமே பாகுபாட்டோடு புறக்கணிக்கும் தலித் பெண்களையும் ஒன்று தான் என்று கூப்பாடு போடுபவர்களுக்கு கண்டிப்பாக மனம் பிறழ்ந்திருக்க வேண்டும்!
தலித் பெண்களின் நிலை:
அம்பேத்கர் பொது எதிரியாகச் சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் தலித் பெண்கள் உள்ளனர்.
 
எந்த அக்ராஹாரப் பெண்ணும், ஊர்ப் பெண்ணும், சேரிப் பெண்களை தங்களில் ஒருவராகப் பார்ப்பதில்லை. பார்க்க விரும்புவதுமில்லை.
 
தலித் மக்களின் சேரிகள் ஆதிக்க ஜாதியினரினால் எரிக்கப்படும் போது, ஆதிக்க ஜாதிப் பெண்கள் இயல்பாகவே ஊர் ஆண்களுடன் இணைந்து நிற்கின்றனர்.
 
வன்கொடுமைகளின் உச்சமாக இன்றளவும் அறியப்படுகிற, கயர்லாஞ்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதலின்போது, கயர்லாஞ்சியை சேர்ந்த ஊர்ப் பெண்கள் ஆதிக்க ஜாதிவெறி பிடித்த ஆண்களோடு சேர்ந்து நின்றார்கள். அத்தாக்குதலில் வன்புணர்வு செய்யப்பட்ட அம்மாவும், மகளும் பெண்கள் என்பதால் அந்த தலித் பெண்கள் பக்கமாகவோ அல்லது தங்களைச் சமையலறையில் பூட்டி வைக்கும் ஆண்கள் என்று அந்தக் காட்டுமிராண்டி வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு எதிராகவோ எந்தப் பெண்ணும் நிற்கவில்லை.
கீழ்வெண்மணிப் படுகொலையில் 23 தலித் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். பதானி தோலாவில் கொல்லப்பட்ட 21 தலித்துகளில் 19 பேர் பெண்கள். லக்ஷ்மணபுர பாதேவில் கொலை செய்யப்பட்ட 58 பேரில் 27 பேர் பெண்கள். 16 குழந்தைகள். கொல்லப்பட்ட பெண்களில் 8 பேர் கர்ப்பமாக இருந்தனர். 5 பேரின் மார்பகங்கள் வெட்டி எறியப்பட்டன. தலித் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் கூட்டு வன்புணர்வு குற்றங்கள் 2015 சட்டத்திருத்தத்தில் தான் வன்கொடுமைக் குற்றப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
 

இந்தத் தலித் பெண்களுக்காக, அவர்களுக்கெதிராகப் பல்வேறு வன்முறைகளுக்கெதிராகவும் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பெண்ணிய அமைப்புகள் என்ன செய்தன? இவ்வளவு ஏன்? இதுவரையிலும் சமூக ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான, வன்மமான, மோசமான ஆபாச வசவுகளுக்கு ஆளான எந்தக் கறுப்புநிற, தலித் பெண்ணிற்காவது பார்ப்பன, ஆதிக்க ஜாதி, வெள்ளைநிற தோல் கொண்ட பெண்ணியவாதிகள் ஒரு சோக உணர்ச்சித்திரமாவது போட்டிருக்கிறார்களா?

தலித் ஆண்களின் ஆணாதிக்கம்:

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, ஜாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம், வர்க்க, ஜாதிய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகிற ஆண்கள், சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், ஜாதியம், பொருளாதாரம், கலாச்சாரம் எனச் சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.
பார்ப்பனிய மேட்டுக்குடிப் பெண்ணியம்:
இந்தியாவில் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பெண்கள் கேட்ட விடுதலை உரிமைகள் என்பவை குடும்பம், மதம், ஜாதி என்னும் வடிவங்களுக்குள்ளும், ஆணாதிக்க வடிவங்களுக்குள்ளும் ஆண் பெற்று வந்த அதே அதிகாரத்தையும், வாய்ப்பையும் கோருவதாகவே இருந்தது. கருத்தியல் வடிவில் இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை.
 
ஆனால், பெண்களே கற்பனை செய்ய முடியாத அளவிற்குத் தந்தை பெரியார் அவர்கள், பெண் விடுதலையைப் பேசியிருக்கிறார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலே அதற்குச் சான்று. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்களுக்கு மொட்டை அடிக்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்தது. மொட்டைப் பாப்பாத்தி என்ற சொல்லாடலும் கூட புழக்கத்தில் இருந்தது. இன்று அந்த வழக்கம் தடுக்கப்பட்டு, அந்தச் சொல்லாடலே வழக்கொழிந்து போனதற்குப் பெரியார் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
 
இப்பேற்பட்ட பெண்ணியவாதியான தந்தை பெரியாரை பற்றி, இங்கே பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பார்ப்பன, மேட்டுக்குடிப் பெண்களில் எத்தனை பேர் பேசியிருக்கிறார்கள்?
உடையில் உடையும் முற்போக்கு:
ஆண்கள் நவீனமாகவும், வசதியாகவும் கால் சட்டை, கை சட்டை அணிந்தும், குட்டையாக முடியை வெட்டிக் கொண்டும், பெண்களை மட்டும் சற்றும் வசதியில்லாத புடவையிலும், நீளமான முடி என்பதிலும் சிக்கவைத்திருப்பது கண்டிப்பாகப் பெண் அடிமைத்தனம் தான், அதில் மாற்றுக்கருத்தே இல்லை!
 
இருப்பினும், அதனை அப்படியே எல்லா தளங்களிலும் நாம் பொருத்திப் பார்க்க முடியாதல்லவா? நமக்கு முந்தைய தலைமுறையிலிருந்தே ஆண்கள் பலரும் நவீன உடைக்கு மாறிவிட்டனர். ஆனால், பெண்களோ நம் தலைமுறையில் இருந்து தான் உடைக் கட்டுப்பாடு என்பதிலிருந்து சற்று விலகி நவீன நாகரீக உடைகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
 
என் அம்மாவை மிகவும் தைரியமான வீரமிக்க பெண்மணியாகவே நான் பார்த்திருக்கிறேன், உணர்ந்துக்கிறேன். பலவற்றிலும் இறுக்கமாக இருந்த என் அப்பாவின் எண்ணப்போக்கை, மாற்றி அவரை மிகவும் தேர்ந்த மனிதராக உருவாக்கியவர். மூன்று மகள்களையும் படிப்பு, வேலை மட்டுமே பாதுகாப்பு என்றும், வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்றும் வளர்த்தவர்கள். நாங்கள் மூவரும் படித்து அவரவர் தொழிலில் இறங்கும் வரை திருமணம் என்ற சொல் கூட எங்கள் வீட்டில் ஒலித்ததில்லை.
 

படிப்புச் செலவுகள் என்று வரும் போது என் அப்பா கூட யாரிடம் கேட்பது என்று பல நேரங்களில் தயங்கியதுண்டு. என் அம்மாவோ “புள்ளைங்க படிப்பு, இதுக்கு இல்லைனா வேற எதுக்கு செலவு பண்ண போறோம்” என்று என்னையும் உடன் அழைத்து சென்று நேரில் காட்டி, சில நேரங்களில் “எங்க ஓடிற போறோம், நம்பி குடுங்க” என்று அதட்டியும் கூட எப்படியாவது கடன் வாங்கி வந்துவிடுவார். இப்படியாக, போதுமான ஊதியம் இல்லாத சூழலில் கடன் மூலமாகவே நான் உட்பட மூவரும் படித்தோம் என்றால் மிகையாகாது.

 

 இன்னும் சொல்லப்போனால், “படிச்சு வேலைக்கு போய் உங்க கைல நாலு காசு இருந்தாதான் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறவங்க உங்கள மதிப்பாங்க! நாளைக்கு நாப்கின் வாங்கக்கூட அவங்ககிட்ட ஒரு ரூபா கையேந்தி நிக்க கூடாதுனு” சுயமரியாதையை சொல்லி சொல்லி வளர்த்தவர். ஆனால், அவருக்கு சுயமரியாதை இயக்கம் குறித்த அறிவோ, புரிதலோ இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.
 
நாங்கள் வளர்ந்ததும் கூட நவீன ஆடைகளோடு தான்! என் தாய்மாமன்கள் பல நேரங்களில் எங்கள் உடைகளை கண்டிக்கும் போதும் சரி, நான் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது அதை கண்டித்த போதும் சரி, எங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி வளர்க்கிறோம் உங்களுக்கென்ன என்று என் பெற்றோர் கடிந்துக்கொண்டதும் உண்டு.
 
இப்படியாக எங்களைச் சுயமரியாதையோடும், அச்சமின்மையோடும், முழு சுதந்திரத்தோடும் வளர்த்த என் பெற்றோர்கள் சிந்தனை முற்போக்காக, நவீனமாக இருந்த அளவிற்கு அவர்களின் ஆடை அப்படியொன்றும் நவீனமாக மாறிவிடவில்லை.
உதாரணமாக, என் அப்பா கை சட்டை, கால் சட்டை அணிபவர் தான். ஆனால், நாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் கூட அவர் இறக்கும் வரையிலும் ஜீன்ஸ் அணிந்ததே இல்லை. என் அக்கா திருமண வரவேற்பிற்கு கூட நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தியே ஒரு கோட் வாங்கிக்கொடுத்தோம். வாங்கி கொண்டாரே தவிர, அதிகபட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே அணிந்திருப்பார்.
என் அம்மா இப்போது வரையிலும் புடவை மட்டுமே காட்டுகிறார். என் அப்பா சுடிதார் வேண்டுமென்றாலும் கூட வாங்கிக்கொள் என பலமுறை கூறியும் கூட அம்மா மறுத்துவிட்டார்.
 இப்போது இவர்களை என்ன சொல்வீர்கள்?
ஆக, சென்ற தலைமுறைப் பெண்களைப் பொறுத்தவரை இளம் வயதில் பாவாடை சட்டையும், அதன்பின் புடவையும் அவர்களின் உடைகளாக இருந்தன. அவர்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். சிந்தனையில் முற்போக்கு இருப்பினும், தன் கணவனுக்குப் பலவற்றைச் சொல்லிக்கொடுத்துச் சமூகத்தில் தலைநிமிரச் செய்தாலும், தங்கள் உடை அவர்களுக்குப் பெரும்பொருட்டாக இருப்பதில்லை. மாறாக, பட்டுப்புடவையை மிகவும் கௌரவமான உடையாக கருதுகிறார்கள். இதை நாம் அவர் நிலையிலிருந்து புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரு பெண், ஆணைப் போல கால் சட்டை, கை சட்டை அணிய வேண்டும் என்பதும், அவனைப் போலவே பூ, போட்டு இல்லாமல் முடியை வெட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் கூட ஆண் பார்வையினூடே நாம் காணும் பெண் விடுதலை தான்! தன் சுயமரியாதைக்காகவும், தன் கணவன் அடிமையாக இருக்கக் கூடாது என எண்ணுவதற்கும் ஒரு பெண் கண்டிப்பாக ஆண் உருவத்திலோ, நவீன உடையிலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
இந்த தலைமுறை பெண்ணான எனக்கும் கூட ஜீன்ஸ், டீ-ஷர்ட்-ஐ விட குர்தா டாப்சும், லெக்கிங்சுமே வசதியாக இருக்கிறது. ஸ்லீவ்லெஸ் உடைகளை விட பாவாடை சட்டையே வசதியாக இருக்கிறது.
 
ஒரு பெண்ணாக, என் அம்மாவைப் போன்ற பெண்களைப் பார்த்து உணர்ந்தவளாக பெண்களின் உடையோ, பூவோ, பொட்டோ, வளையலோ என் கண்களை உறுத்துவதில்லை. மாறாக, அவர்களின் சிந்தனைகளே என்னில் தாக்கத்தை உருவாக்குகின்றன. ஆணின் முற்போக்கு பிம்பத்தை பெண்கள் மீது நிறுவ முயலாமல், அவளின் சிந்தனையையும், செயலையும் கொண்டு முற்போக்குத் தளத்தில் பெண் பிம்பத்தைக் கட்டமைப்பது மிக முக்கியமாகும்.
உண்மையான பெண் விடுதலை:
ஆண்கள் அனைவரையும் எதிரிகளாகப் பாவிக்கிற சமூக அமைப்பின் அடிப்படையை மாற்றாமல் ஆண்களுக்கு மேலானவர்களாக மாறினால் போதும் என்கிற கருத்தியலை முன்வைக்கிற பொத்தாம்பொதுவான பெண்ணியத்துக்கு மாற்றாக, பெண் விடுதலையை நேசிக்கிற ஆண்களையும் இணைத்துக்கொண்டு சமூக அமைப்பின் அடிப்படையை மாற்றுவதன் வாயிலாகவே பெண் விடுதலையை வென்றெடுக்க முடியும்.
 
ஆணாதிக்கத்தால் மட்டுமே ஒடுக்கப்படுகிற அக்ராஹாரப் பெண்களாலோ, ஆணாதிக்கத்தாலும் பொருளாதாரத்தாலும் மட்டுமே பாதிக்கப்படுகிற ஆதிக்க ஜாதிப் பெண்களாலோ அனைத்து பெண்களுக்கான விடுதலையை வென்றெடுத்து விட முடியாது. மாறாக, ஆணாதிக்கம், ஜாதி, நிறம், இனம், மதம் என வேறுபட்ட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படுகிற தலித் பெண்களின் விடுதலையினால் மட்டுமே அனைத்துப் பெண்களுக்குமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.
 
திராவிட இயக்கத்தில் இயங்கிய சொர்ணமா தேவி, மீனாம்பாள் சிவராஜ், ரெங்க நாயகியம்மாள், அங்கயற்கண்ணி சிவராசு, ஞானசௌந்தரியம்மாள் போன்ற தலித் பெண்களை முன்மாதிரியாகக் கொண்டு தலித் பெண்ணியத்தை வளர்க்க வேண்டும்.
ஏனெனில், தலித் பெண்கள் விடுதலையே தலித் விடுதலை! தலித் விடுதலையே இச்சமூகத்தின் விடுதலை!!
07.05.2017 ல் சூரிச் நகரில் நடைபெற்ற  பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
Advertisements