simon woie

விஜி (ஃபிரான்ஸ்) –

‘சுதந்திரக் கருக்கலைப்பின் தாய்’ என்று வர்ணிக்கப்படும் சிமோன் வெய் காலமானார். இவர் 1974 -1979 இல் சுகாதார அமைச்சராக இருந்தவேளை ‘சுதந்திரக் கருக்கலைப்பு’ என்கின்ற சட்டத்தை 1974 இல் கொண்டுவந்து 1975 இல் நிறைவேற்றினார். இதற்காக அவர் மேற்கொண்ட போராட்டத்தை ஃபிரான்ஸில் எந்தப் பெண்ணியவாதியும் இன்று வரை குறிப்பிட மறப்பதில்லை. இந்தக் கருக்கலைப்பிற்கான உரிமையை வென்றெடுப்பதற்கு, அந்தக் காலங்களில் அவருடைய அரசியல் கட்சியிலிருந்தும் பாராளுமன்றத்திலிருந்தும் பத்திரிகையாளர்களிடமிருந்தும் அவர் அனுபவித்த அவமானங்களும் எதிர்ப்புகளும் எண்ணிலடங்காதவை.
சிமோன் வெய் ஃபிரான்ஸில் அழிக்கமுடியாத ஒரு தடத்தைப் பதித்தவர். இன்று  89 வயதில் காலமானார். இவர் தன்னுடைய 16 வயதில் நாஸிகளால் நாடுகடத்தப்பட்டு நாஸி முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் தப்பியவர். இந்த நாஸி முகாம்களில் நடந்த யூத மக்களின் அழிப்பில் தன்னுடைய தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரை இழந்தவர்.
இவரது சித்திரவதையான முகாம் வாழ்க்கையை ‘வாழ்க்கை’ என்ற நூலில் அறிந்துகொள்ளமுடியும்.
          பின்னர் 1979 – 1982 வரை முதலாவது பெண் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவியாகக் கடமையாற்றிவர். இந்த வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்காக அவர் மேற்கொண்ட வேலைகளும், ஜேர்மனியுடனான ஒருங்கிணைப்பும், சமரசமும் முக்கியம் எனக் குறிப்பிட்டு மன்னிப்போம் – மறப்போம் எனும் அவருடைய மனிதாபிமானமான மனநிலை இன்று வரை மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
இந்நாட்டின் உயர் ஸ்தாபனமாகக் கருதப்படும் ஃபிரான்ஸ் அக்கடமி இவருடைய சேவைக்காக 2008 இல் அக்கடமியில் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
இதுபோன்ற பெண்களை உலக சரித்திரங்களில் அதிகம் காணமுடிவதில்லை. ஆகவே இந்த பெண்ணுக்கு என்னுடைய மரியாதை கலந்த இறுதி வணக்கங்கள்.

Advertisements