17626212_1478624598838936_9064663175453013079_n
நாங்கள்
அழகானவர்கள்
மென்மனதுக்காரர்கள்
வீதிகளில் உதவுகிறவர்கள்
விடுமுறைகளுக்குப் பயணங்களைச் செய்பவர்கள்
விதவிதமாகச் சமைத்துப் படம்பிடிப்பவர்கள்
தின்பதையும் குடிப்பதையும் இன்பமாய் பகிர்பவர்கள்
மரணச் செய்தியறிந்தவுடன் அஞ்சலிப்பவர்கள்
இன்று மழை-வெய்யில் வேகுறதென்று அறிக்கை எழுதுபவர்கள்
வந்த படம் எதுவென்றாலும் விழுந்தெழும்பி விமர்சிப்பவர்கள்
பகிடிகள் எழுதிப் படித்துச் சிரி்த்துக்கொண்டிருப்பவர்கள்
தம் புகழ்பாடும் குறிப்புகளை மெச்சுபவர்கள்
விருது பெற்றவர்களை அவமானப்படுத்துபவர்கள்
சமூகச் சிந்தனை-இலக்கிய இரசனையை நிரூபிப்பவர்கள்
அரசியற்தீர்வுகளை எழுதித் தீர்ப்பவர்கள்
ஒன்றென்றால் கண்டிக்கவும் தண்டிக்கவும் திரண்டு நிற்பவர்கள்
பிராணிகளில் நேசமானவர்கள்
பிரச்சினையென்று வந்தால் மோசமானவர்கள்
இன்பொக்ஸில் இனிப்பாயும் பின்னால் புளிப்பாயும் கதைப்பவர்கள் அன்பிரன்டென்றும் புளொக்கென்றும் கோபம் காட்டி
லவ்வெனவும் லைக்கெனவும் நேசம் காட்டி
அய்ந்தாறு பேர்களோடு கதைக்க நினைத்து
அய்ந்தாயிரம் ‘பெயர்’களுக்கு எழுதுபவர்கள்
பிரிந்தவர்களைக் கண்டுபிடித்தும்
காணாதவர்களை ஆரத்தழுவியும்
உறவுகளைப் பராமரிப்பவர்கள்
மனங்களைப் பிரதிபலிக்கும் பாட்டுகளை ஒலிபரப்புபவர்கள்
கவிதைகளென்று முறைப்பாடுகளை முன்வைப்பவர்கள்
ஒளிப்படங்களில் சிரிப்பதும் முறைப்பதுமாகப் பாவனை செய்பவர்கள்
அவரவர் அத்தியாயங்களை அவரவர் எழுதிக் கொள்கின்றோம்
நல்லதொரு நாவல் இப்புத்தகம்.
-தர்மினி
Advertisements