– ஷமீலா யூசுப் அலி-

திறக்கப்படாத  கதவுகளுக்குப்  பின்னால்
வெகுநேரமாக
அவள்  நின்று  கொண்டிருக்கிறாள்.

இலகுவில் நெம்பி உடைத்து  விடமுடியாத  உறுதியில்
இறுமாந்து தொங்கிக்கொண்டிருக்கும்
அந்தப் புராதனமான பூட்டு
துருப்பிடித்திருக்கிறது.

கனக்கத்  தொடங்கியிருக்கும்  கால்களை
மாற்றி  நின்றுகொள்கிறாள்
ஷெஹ்ர்சாதைப்  போல் ஆயிரத்தோர் கதைகள்
அவளறியாள்.

அதனால் ஷெஹ்ரியார்களினால்  ஒவ்வொரு இரவும்
அவள்  கொல்லப்பட்டாள்
மீண்டெழுதலையும் இரகசியக்கனவுகாணலையும்
அவளிடமிருந்து பிய்த்தெடுக்க முடியவில்லை.

அவளின் துயரந்தோய்ந்த விழிகளில் எழுதியிருக்கும்
நம்பிக்கையின் பச்சை நிறக்கீற்றுகள்
கதவுகளில் அறைந்து கொண்டேயிருந்தன.

எப்போதாவது கதவிடுக்குகள் அகன்ற போது
அவளது பார்வைகள் ஊசியாய் உள்நுழைந்தன.
அவர்கள் பதட்டப்பட்டார்கள்.
அவள் மற்றக்காலை மாற்றி வைத்துக்கொண்டாள்.

வானம்இருண்டு சூல் கொண்ட மேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்
நகர்ந்து கொண்டிருந்தன.

ஊழியின்கோரத்தாண்டவங்களோ
எரிக்கும்வெயிற்பாலைக்கோடைகளோ
அவளுக்குப் புதிதல்ல

மழைநீர்
அவளது மெல்லிய தேகத்தைக் கரைத்துவிடுமளவு வஞ்சத்துடன்
இடைவிடாது
பொழிந்துகொண்டிருந்தது.

அவளோ சலனங்களற்ற சந்நியாசி போல
பூட்டினை
வெறித்துக்கொண்டிருந்தாள்.

காலம் அவளை வெகுவேகமாகக் கடந்துகொண்டிருந்தது.

அவள் பேசவில்லை.
அதிகம் பேசுவது பற்றிய அபரிமிதமான
நம்பிக்கை அவளுக்கில்லை
ஆனால் அவள் தனக்காகப் பேசக்கூடியஏதோவொன்றைத் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

காலங்களின் இருண்மையில் கனக்கும்அந்தப்பூட்டு
மெளனித்திருந்தது.

அதன் சாவிகளோ அகங்காரத்தின் பெருவெளியில்
கைகட்டிவாய் பொத்தி நின்றிருந்தன.

அவள் வெறும்கனவுகளைப் பொறுக்கும்
பட்டாம்பூச்சியல்ல
கனவுகளுக்கு இறக்கை கட்டுபவள்.

புறக்கணிக்கத் தக்கதோர் கணத்தின்
ஓர் அசட்டுத்துணிச்சலில்
அவள் எம்பி அந்தப் பூட்டினைத்தொட்டாள்.

பூட்டுஉதிர்ந்துவிழுந்தது.

நன்றி : ஆக்காட்டி 14

 

Advertisements