woman sitting
-செங்கவின் தமிழ்-

2007-08 கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக செயலாராய்ச்சி செய்தேன். வழக்கமாக table work ஆக முடிந்துவிடக்கூடிய பணிதான். அவ்வாறில்லாமல் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

“கருவுறாத அண்ட அணுக்களின் வெளியேற்றமும் அறிவியல் மனப்பான்மையும்” எனும் தலைப்பு முடிவானது. அதாவது மாதவிடாய் என்பதை எவ்வாறு அறிவியல் பூர்வமாக அணுகுவது என்பது குறித்தும், மாதவிடாய் நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அணுகுமுறை குறித்தும் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அதன் நோக்கம்.

தொடக்க கல்வி ஆசிரியரான நான் நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டுமென்றால் Aeeo மட்டுமின்றி DEEO,CEO வரை அனுமதி வாங்கிவேண்டியிருந்தது. AEEO வைப் பொறுத்தவரை அது கூடுதல் வேலை. ஏனெனில் செயலாராய்ச்சிக்காக இப்படிப்பட்ட அணுகுமுறை மேற்கொள்வது குறித்தோ ,இதையெல்லாம செயலாராய்ச்சியாகச் செய்வார்களா என்பது குறித்தோ யாரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நான் தேவையற்ற ரிஸ்க் எடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனது செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்ததால் நிர்வாக ஒத்துழைப்பு எனக்கு எளிதாகக் கிடைத்தது.

அலுவலகத்தில் அனுமதிக் கடிதத்தை தட்டச்சு செய்த டைப்பிஸ்ட் முதற்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் என நிறையப் பேருக்கு தலைப்பு குறித்து விளக்கமளிப்பதே ஒரு வேலையாகப் போய்விட்டது.

கருவுறாத அண்ட அணுக்களா அப்படீனா? Scientific mentality யா அப்படீனா ? இப்படி நிறைய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. ( மாதவிடாயின் மூன்று நாட்களில் மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காத நிறைய ஆசிரியர்களை நான் பார்த்திருந்தேன் என்பதால் நான் பொறுமையாகவே விளக்கமளித்தேன்)

முன்தேர்வு, பின்தேர்வு வினாத்தாள்களோடும் விளக்கப்படங்களோடும், சில புத்தகங்களோடும்,பல்வேறு துறைகளில் சாதித்த பெண் ஆளுமைகள் குறித்த தகவல்களோடும் ,கூடவே புகைப்படக்காரரோடும் பள்ளிகளுக்குச் சென்றேன். மறக்காமல் ஒரு நாப்கின் பாக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டும் செல்வேன். நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாத மாணவிகளையும் நான் சந்திக்க வேண்டியிருந்ததால் அந்த ஏற்பாடு. நாப்கினைப் பற்றி அறிவதைவிடவும், மாதவிடாய் குறித்து இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதும், கலந்துரையாடுவதும், விவாதிப்பதும் மாணவிகளுக்கு மிகுந்த உந்துதலையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நிறையப் பேசினோம். ஆனால் நாப்கின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதியளிக்க மாணவிகளால் முடியவில்லை. ஏனெனில் அது பெண்களின் சுகாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இருந்தது.

அந்த அனுபவம் எனக்கும் இருந்ததால் அது எளிதில் புரிந்தது. முதல் மாதவிடாயின் போதே எனக்கு நாப்கின் கிடைத்துவிட்டது. ஆறேழு மாதங்கள் நாப்கின் பயன்படுத்தினேன்.
“நம்ம குடும்பங்க இருக்கற நிலைல இதெல்லாம் தேவையா இதுக்குப் போய் மாசாமாசம் இவ்வளவு செலவு செய்யறதா? ” என்ற தோழிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலால் நானும் துணிக்கு மாறிவிட்டேன்.

ஒரேமுறை பயன்படுத்திவிட்டு அதைத் தூக்கி எறியாமல் நான்கைந்த முறை பயன்படுத்த வேண்டும் எனும் உத்தரவு வேறு. கருடன் கண்ணில் படாமல் காயப்போட வேண்டும் என்றுஅம்மாவின் உத்தரவு. அதன் பிறகு அந்த துணியை துவைப்பதும் காயப்போடுவதும் எனக்கு கொடுமையாகவே இருந்தது. அதற்கும் என் தோழிகள் நிறைய்ய ஐடியாக்கள் கொடுத்தார்கள்.

எல்லாவற்றையும் எதிர்கொண்ட என்னால் பேருந்திலோ பள்ளியிலோ அந்த துணி நழுவி விழுந்து விடுமோ எனும் பயத்தை மட்டும் எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியும் ஒரு முறை நடந்தேவிட்டது. நல்லவேளை எங்க காட்டில் நடந்தது. அந்த துணி கீழே நழுவி விழ ,அதுகூட ததெரியாமல் நான் விளையாடிக் கொண்டிருக்க என் அப்பா பார்த்து அம்மாவிடம் சொல்ல, அம்மா என்னிடம் சொன்னார் ( புள்ளய வளக்கற லட்சணமா இதுனு அப்பாவோ இது கூட தெரியாம அப்படியென்ன விளையாட்டுனு அம்மாவோ கேட்கவில்லை. அந்தப்பழக்கம் எங்கள் வீட்டில் இல்லை.)

உள்ளாடையோடு சேர்த்து அந்த துணிக்கு சேப்டிபின் குத்தியும் பயன்படுத்த தோழிகள் தங்களின் அனுபவத்தைபகிர்ந்தார்கள். ஒருவழியாக நான் மீண்டும் நாப்கினுக்கே மாறிவிட்டேன். இவ்வளவு சம்பாதிக்கும் இந்ந நிலையிலும் கூட ஒரு நாளைக்கு மூன்று நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்  என்பதை முதல் இரண்டு நாட்கள்தான் கடைப்பிடிக்கமுடியும். மற்றபடி இரண்டுதான் முடியும். ஏனெனில் அது பொருளாதாரம் சார்ந்தது.

அதனால் எனது செயலாய்வில் நிறையப் பரிந்துரைகளை முன்மொழிந்தேன். .
★பள்ளிகளில் நாப்கின் இலவசமாக வழங்க வேண்டும்.
.
★நியாய விலைக்கடையில் நாப்கின் வழங்க வேண்டும்.

★அனைத்துப பள்ளிகளிலும் எரியூட்டி வசதி வேண்டும்.
கழிப்பிட வசதி,தண்ணீர் வசதி வேண்டும்.

என்று நிறையப் பரிந்துரைகள் பரிந்துரைத்தேன். மாநில அளவில் எனது செயலாய்வு தேர்வு செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் பள்ளி் கல்வித்துறை சார்பாக பெரும்பாலானவை நடைமுறையாகிவிட்டன. மகிழ்ச்சி.

ஆனாலும்…

இவ்வளவு போராடிப் பெற்ற நாப்கினுக்கு 12% ஜிஎஸ்டி வரி.

அடப்பாவிகளா உங்கள எதால அடிக்க..

அதாலதான் அடிக்கணும்.

Advertisements