23795015_10212326119726046_8621061227343566630_nகட்டுரை : மாதவி சிவலீலன்
mathavy

அறிமுகம்:

யாவுமாகி இந்தப் பிரபஞ்ச இயக்கத்திற்குக் காரணமாகி வாழ்கின்ற பெண்கள் தமக்கான உணர்வுகளுக்கான வடிகாலாக எழுத்தைக் கையிலெடுக்கின்ற போது அவர்களுக்கேயுரித்தான உலகத்தை இலக்கிய உலகம் கண்டு கொண்டது. அது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாக வலிமைகளின் உச்சங்களைத் தன்னில் அடக்கியதாக தம்மைத் தாமே ஆற்றுப்படுத்திச் சென்றது. தமிழ்ப் பெண்கவிஞர்கள் என்கின்ற போது சங்கத்தமிழ்ப் பெண்புலவர்கள் பலர் மனக்கண்ணில் தோன்றினாலும், ஔவையார் போன்றோரை முதல் கொண்டு ஆண்டாள், காரைக்கால் அம்மையாரெனத் தனித்துவமான  கவிப்பாரம்பரியத்தைத் தோற்றுவித்த பெண்களை வரலாற்றில் கண்டு கொண்டோம். அதன் தொடர்ச்சியில் ஈழத்துத் தமிழ்ப் பெண்கவிஞர்களை அடையாளப்படுத்தலே இக்கட்டுரையின் நோக்கமாகவுள்ளது.
தர்மினி
ஈழத்தில் வடபகுதியின் அழகுமிகு தீவுகளில் ஒன்று அல்லைப்பிட்டி. அங்கிருந்து போரின் வதையிலிருந்து தப்பி வந்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவராக விளங்கும் தர்மினி, தற்போது பிரான்சில் வசித்து வருகின்றார். `சாவுகளால் பிரபலமான ஊர்`(2010), `இருள் மிதக்கும் பொய்கை`(2016) எனும் இரு கவிதைத் தொகுதிகளை பிரசுரித்திருக்கிறார்.
        சொந்த மண்ணைப் பிரிந்த வலியும் போரினால் வாழ்வைத் தொலைத்த அப்பாவி மக்களின் துயரங்களையும் அந்நியத்தேசங்களில் தனித்தலையும் மனதின் தவிப்புக்களையும் தன் கவிதைகளில் பதிவு செய்யும் தர்மினி, தன் வாழ்விற்கான தளங்களைக் கவிதைகளின் மூலம் கடந்து செல்கின்றார். சாவுகளால் பிரபலமான ஊர் கவிதைத்தொகுதி போரின் இடர்கள் பலவற்றை முன்னிறுத்துகின்றது. அங்கு மனித அவலங்களே பேசு பொருளாகி மனதைக் கலங்க வைக்கின்றன. தனது ஊர் பற்றிப் பேசுகையில்,

எலும்புகள் எடுத்தல்
குண்டுகள் வெடித்த கடைகள்
இடித்த பள்ளிக்கூடம்
வெடி வைத்த கோயில்
உயிரோடு எரித்தல்
கிணறுகளிற் கிழிந்த உடைப்பெண்கள்
இப்படிப் பத்திரிகைத் தலைப்புகளாற் பிரபலமானது இவ்வூர் (சாவுகளால்:பக்:9) எனக் குறிப்பிடுகின்றார்.
அதுவே யுத்தகால நாளாந்தச் செய்திகளின் பல்வேறு தருணங்களை மீட்கச் செய்கின்றது. அத்துடன் வீட்டின் விலாசமென,
சிவப்புச்சேலை சிறுசதுரம் அகன்ற ஆலமரம் அருகில் இரு பாலைமரங்கள் அக்கராயன் கிளிநொச்சி( சாவுகளால்:பக்26) என அடையாளப்படுத்துகின்றார். இன்னொரு கவிதையில் தனது மக்கள்,  நத்தையின் கூடு போன்ற வீடொன்றை நினைந்து வெதும்பியபடியே ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள் (சாவுகளால்:பக்7) எனச் சொல்வதினூடாக அகதி வாழ்வில் குந்த இடம் தேடியலைந்த அல்லலுறு நினைவுகளைக் கிளரச் செய்கின்றார். புலம்பெயர் சூழலில் வேலையிடத்தில் விடுமுறைக்கு உன் நாட்டிற்கு அல்லது உன் வீட்டிற்குப் போகவில்லையாவெனக் கேட்பது சாதாரண சம்பாக்ஷணை, ஆனால் அது தரும் வலியை இவர் குறிப்பிடும் போது,
கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா
நட்புகள் விசாரணை
அங்கிருக்கும் ஊரில் எங்கிருக்கிறது என் வீடு?
வீடென்பது
என் ஞாபகங்கள்( இருள்:பக்:17)
          என்று அந்த துயரைக் கூறுகின்றார். மனிதத்தைக் கொன்ற போர்களைப் பதிவு செய்யும் போது பிணற்காட்டில் செத்துக் கிடந்த பிள்ளைகளை பெற்றவரை துணையை அயலவரை நீள் வரிசைகளில் நின்று கேட்கின்றனர் எந்த நிவாரணத்தில் வழங்குவீர்( சாவுகளால்:பக்35) எனச் சாட்டையாகச் சாடுகின்றார். இதுபோன்றே நிகழ் தகவு கவிதை இராணுவ வீரனது அவமான வாழ்வைச் சொல்வதையும், குருதியிலெழுதும் கற்பிதங்கள் கவிதை மதங்களின் பெயரால் உலகின் அனைத்துச் சிறைகளிலும்  கொல்லப்படுகின்ற மனிதர்களையும் பேசுகின்றது.
            யுகந்தோறும் போர்கள் குழந்தைகளையும் பெண்களையும் முதியோரையும் அப்பாவிகளையும் தண்டித்தே தம் வெற்றியைப் பிரகடனப்படுத்தி வந்திருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, பேசத் தொடங்காத மழலைகள் யுத்தம் புரியாத குழந்தைகள் அரசியல் அறியாச் சிறுவர்கள் ஆயுதங்கள் மிரட்டும் போதெல்லாம் அஞ்சி நடுங்கி எதை நினைத்து அலறுவர்?(சாவுகளால்:பக்:59)என்கின்றார். இவ்வாறே தந்தையைத் தேடும் குழந்தையின் மழை நாளையும் அடையாள அட்டையின் தேவையையும் குறிப்பிடுகின்றார். 1995ஆம் ஆண்டு யாழ்குடா நாட்டிலிருந்து மக்கள் ஒரே நாளில் ஒரே இரவில் வீதிக்கு வந்த அவலம் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத சோகம். ஆனால் அதனைத் தெளிவாகச் சுருக்கிச் சொல்லும் இவர் கவிதையாற்றல் பின்வருமாறு அமைகின்றது.
அதே நாட்கள்
அதேமழை
அதே வீதி
அதேநாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்( இருள்:பக்:20)
               அத்துடன் படிமங்கள், குறியீடுகள் மூலம் பெண்ணின் இருப்பையும் வாழ்வின் நெருடல்களையும் தொட்டுக் காட்டுகின்றார். அவளொருத்தி கீறிய படம், மணற்பெண், இலையின் பிழை போன்ற கவிதைகள் இவ்வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவை.
மென்னிதழ் , மென்னிதயம்
உடையவரெல்லாம் பூவென்றழைக்கத் தகுந்தவரெனில்
ஒரு பெண்ணைத்தான் பூவென்று சொல்ல
வேண்டுமென்றில்லை ( இருள்:பக்:13)
              என்கின்ற தர்மினியிடம் உள்ள  நியாயத்தை விருப்பத்தை மனதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. இது தவிர அயல் வீட்டு யன்னல் எல்லாம் சனம் வந்து வேடிக்கை பார்க்கத் திட்டிய கணவன் அடுத்தநாள் வந்து மன்னித்து விடு என்கின்றான்.
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படிக் கேட்கும்(சாவுகளால்:பக்15)             என எமைக் கேட்பது ஒரு பெண்ணின் கையாலாகாத்தனத்துடனான வலியை உணர்த்துகின்றது. நோவா, காகம், சம்மனசு, ஆதாம், ஏவாள், அப்பிள் போன்ற பைபிள் குறிப்புகளினூடாகவும் கவி சொல்லும் பாவனையும் நோக்குதற்குரியனவாகின்றன.
           பிறந்து வளர்ந்து ஆசைகள் பலவற்றைச் சுமந்து கொண்டிருந்த வேளை திடீரென எந்த விதத்திலும் ஒட்டாத அந்நிய மண்ணில் நூல் பிடித்து மேலெழும்புதல் என்பதன் நோவுகளையும் எதிர் கொள்ளும் வசவுகளையும் வலிமைகளையும் தனக்கேயுரித்தான வகையில் தன் அந்நிய வாழ்வின் அனுபவங்களின் வழி நின்று பதிவு செய்திருப்பதும் பெற்றதன் விளைபொருளாகின்றது.
                 தர்மினியின் `இருள் மிதக்கும் பொய்கை` கவிதைத் தொகுப்பின் தலைப்பே இவரின் கவிப்பொருள் தாங்கிக் கிடக்கின்றது. நூல் முழுவதும் இரவுகளையும் இருளையும் அது தருகின்ற தனிமைகளையும் அவற்றினூடாக பிரவகிக்கும் எண்ணங்களையும் அவற்றோடு ஊடாடுகின்ற மனோபாவங்களையும் எழுத்தாக வடித்திருகின்றார். இவருக்குத் தனிமையும் மென்னிருளும் தருகின்ற சுதந்திரம் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்தியெனக் கூறுமிவர் தன்னைப் பருகச் சொல்கிறது இரவு என அதனை உள்வாங்கி அதில் நின்று கொண்டு பேச வேண்டிய அனைத்தையும் பேசுகின்றார். இரவின் கணங்கள் ஒவ்வொன்றையும் அதன் சலனங்களையும் ஆழமாக அனுபவித்துக் கவியாக்கியமையைக் கவிதைகள் பலவும் சுமந்து நிற்கின்றன. பெரும்பாலான கவிதைகளினதும் நிறைவுப்பகுதிகள் சொல்லும் சேதிகள் கவிதை வாசிப்பின் பின்னும் வாசகர் மனதைத் துரத்துவனவாக உள்ளன. இதுவும் இவரது கவிதைக்கான வெற்றிகளிலொன்றெனலாம்.

(மீண்டும் இன்னொரு பெண் கவியுடன்)
நன்றி: புதினம் (நவம்பர் 2017)