றுப்புப்பணம், கறுப்புச்சந்தை, கறுப்புவேலை, கறுப்பாடு… இவ்வாறாகக் குற்றம் – களவு சம்பந்தப்பட்டதாகக் கறுப்பை அடையாளப்படுத்துகின்றனர்.
எமது நிறம் இயற்கையானது என்ற பிரக்ஞையற்றவர்களாக ஒளியைக் கூட்டி வெள்ளையடித்த ஒளிப்படங்களில் வெளுறிப் போயிருக்கும் முகங்களை இரசிக்கின்றோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது ‘ஏன் கறுத்துப் போனாய்?’ என்று துக்கம் விசாரிப்பதை எதிர்கொள்கின்றோம்.
‘கறுப்பை ஆடையாய் உடுத்துவோம்’ என்ற மாற்றுச்சிந்தனையை அறிந்து கைக்கொள்பவர்கள் கூட, தம் கோபத்தை – அவமதிப்பைக் காட்டிக்கொள்ளத் துயரம் , கெட்டது என்ற அடிப்படையில் வைத்து ‘கறுப்புநாள்’ என்று அடையாளப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. வெறுப்பையும் அவமானப்படுத்துதலுக்கான உணர்வுகளையும் அவ்வண்ணத்தில் சுமத்திவிடுதல் கறுப்பு மீதான வெறுப்பின் ஆதார எண்ணம் தானே…
இது, வெள்ளைத்தோல்களிடமிருந்து வெளிப்பட்ட கறுப்பான தோலுடைய மனிதர்கள் என்ற இழிவான பார்வையைப் பிரதிபலிக்கின்றது. இப்போது நாகரிகங் கருதி நிறவெறியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடக்க முயற்சிக்கின்றனர். அதற்காகச் சட்டங்களைப்போடுகின்றனர்.
ஆயினும், இங்கு நிறவெறி – நிறவெறுப்பு நுணுக்கமாகப் பிரயோகிக்கப்படுவதைக் கவனிக்க முடியும். வெள்ளைத்தோலர்களின் நாடுகளுக்கு அகதிகளாகவோ அல்லது பணிகள் நிமித்தமாகவோ வந்துவிட்ட தமிழர்கள், தங்களை விடச் சற்று நிற அடர்த்தி அதிகமான ஆபிரிக்க நாட்டவர்களைப் பற்றிக் ‘கறுவல்’ எனச் சற்றும் கூச்சமின்றிக் கதைப்பது சர்வசாதாரணமாயிருக்கின்றது. அவர்கள் கள்ளர்கள், நாகரிகமற்றவர்கள்,அழுக்கானவர்கள் என்ற மனோபாவத்தை அச்சொல்லில் சுமத்திவிடுகின்றனர்.
கறுப்பு அவமானத்திற்கான நிறமென்று வெள்ளைத் தோல்களால் எம்மிடம் புகுத்தப்பட்ட கருத்துருவாக்கத்தை உள்வாங்கியவர்களாகவே கறுப்பு என்பதைப் பலரும் அவமரியாதை செய்வதற்கான ஒன்றாக செயற்படுத்துகின்றோம். அவர்களது சிந்தனையில் ‘கறுப்பு’ அழகற்றது, அழுக்கானது, அவலட்சணமானது. கறுப்பானவர்கள்; இழிவானவர்கள், அடிமைகள், குற்றவாளிகள் என்பதாகவும் கருமை துக்கத்தின் அடையாளம் , வெள்ளை துாய்மையின் அடையாளம் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டதும் கறுப்பு நிறத்தின் மீதான வெறுப்பு தான்.
கருமையென்பது ஆளுமையும் அழகுமுடைய தனித்துவமான நிறம்!                     அது வெறுப்புக்குரிய -முட்டாள்தனமாக செய்கைகளுக்கான நாட்களை அடையாளப்படுத்தும் நிறமா?

தர்மினி

Advertisements