1.
தலை பனியின் உறைநிலை
கயிறால் பிணைத்த உடல்
அசைக்க முடியாதென்ற மனம்  
நோவை உணர்கின்றது  

இடக்கால் உதறலோடு விழிப்பு
தொடையிலிருந்து முறுகிய நரம்பொன்று
கருநீலமாகி நீள்கின்றது

என்ன சத்தமது?
எதை உச்சரித்தேன்?
அறையில் வழக்கமான ஒலியளவில் குறட்டை
அதனுடன்
ஒரு நுளம்பின் பறப்பு

என் மீது மீண்டும் இறங்குகின்றன
சிலந்திகள்

காலை – மாலையெனப் புனைந்த வாழ்வை
எடிட் செய்த படமாக
மூளை சுழன்றெழுப்புகின்றது

பின்னிச் செல்லும் வலையில்
ஊர்கின்ற உடல்
முதற் காட்சி.

2.
உடம்பை விசுக்கியெறிகின்றேன்
மினுங்கிய கீழ்வானும் தீயாய்  பற்றிக்கொண்டது
காட்டின் பசும்வாசத்தோடு என்  தசைகள் எரிகின்றன
உதடுகளின் இரத்தத் துளிர்ப்பில் உயிர் வடிகின்றது
எலும்புகள் வெண்மரமாய் கிளை விரித்து
ஆவெனச் சிரித்த வாயோடு அதுவும்
நான்.

3.

வானத்தில் ஒரு சொர்க்கம் இருப்பதாக
அம்மா கதை சொன்னார்

பாம்புகளும் முட்களுமற்ற
மலர்த் தோட்டம் உள்ளதென்றும்
செந்நிறமாய் செடிகளெங்கும்  பூத்திருப்பதாக
ஒரு பூவின் பெயர் சொன்னார்

நல்லவளாயிருந்தால்…
அங்கே
வயதில்லாத வாழ்வும்
பசியறியாத நாட்களும்
பூக்களின் ஆசனமும் கிடைக்குமென்றார்

அடுத்தொரு பக்கம்
நெருப்பெரியும் நரகம் உண்டென்றும்
ஆணிகளால் ஆசனமொன்றும் இருக்கென்றார்

மேகங்கள் அள்ளித்துாக்கி வைத்திருப்பதாக
வானப் பூவனத்தில் உலவும் கனவுகளின்
நித்திரையில் நான்
கோபங்களை மறைத்து
விருப்புகளை வெறுத்து
புன்னகை கீறிய வாயாய்
அப்படியொரு நடிப்பு
கதை…கதையான சொர்க்கமும் நரகமும்
பொய்யென
அம்மா சொன்ன அந்நாளில்
வளர்ந்திருந்தேன்

4.
துாரத் தெரிகின்ற வானத்தில்
மேகத் துண்டு
பறவையைத் துரத்துகின்றது

நாளை மலர்த்துகின்றது
இரவு

கடலினுள் கரைகின்றது
பகல்

சுவரில் சுழன்றபடி
வயது

விரையும் காலத்தைத் தாண்டிச் செல்ல
கனவுத் திறப்பில்
ஒரு வழி

நன்றி : ஆக்காட்டி *15 (ஒக்டோபர்-டிசம்பர் 2017)

 

Advertisements