குடை பிடிக்கும் அளவுக்குப் பனிமழை
ரயில் நிலையத்துள் நுழைந்ததும்
குடையை மடக்கி முடிக்க எட்டிப்பறித்தது ஒரு கை
இருவருள் வாக்குவாதம், அடிபாட்டுக்கு ஆயுதமாம்.

குடையைப் பறித்தவர்
இங்கு இருக்கும் தமிழ்க்கோஷ்டிகளிலொன்று தான்.
இவர் வைன் கோஷ்டி

மற்றையவர்
அதிகாலைத் துப்புரவுப்பணிக்குச் செல்லும் தொழிலாளி.
‘வேலைக்கு நேரம் போச்சு விடடா ….விடடா’ கெஞ்சுகிறார்.

இவரோ,
‘என்னோட தானே வந்தனீர் எப்ப வேலைக்குப் போகத் தொடங்கினீர்?’

‘விடு மச்சான்… விடு…வேலைக்கு நேரம் போகுது’

‘கலியாணம் கட்டிட்டீரோ என்னோட தானே வந்தனீர் எப்ப கலியாணம் முடிச்சனீர்?’
‘வீடும் வேண்டிட்டீரோ என்னோட தானே வந்தனீர்?’

அவர் ‘நாட்டுக்குப் போய்ட்டு வந்தனான்.அம்மா உன்னைத் தேடுறா’

இவர் ‘என்னோட தானே வந்தனீர் எப்ப நாட்டுக்குப் போனனீர்?’
…………….
என் குடை போனால் போகிறது.

தர்மினி