1.

ஒரு புலம்பெயர்ந்தவரைக் கவனித்தால்
முதன் முதலாக நாட்டை விட்டு ஓடத் தொடங்கிய தோற்றத்தில் நின்றபடி
நினைப்பார்-கதைப்பார்-எழுதுவார்-போவார்-வருவார்.
இல்லையென்றால்…
தன்னை நிரூபிக்க 
மகளின் சாமத்தியச்சடங்கை
நேர்முக வர்ணனையோடு கொண்டாடுவார்.

2.

ஒவ்வொரு நாளைக் கடந்த பின்பும்
ஒவ்வொன்றாகப் பிழைகள் தொடர்கின்றன
கைப்புகளை மென்றபடி …
நாக்குக் கேட்கின்றது
சரியாக எதைச்செய்தாய்?

3.

 

‘சேவல் கூவுவதற்கு முன் மூன்று முறை நீயென்னை மறுதலிப்பாய்’
அது துாரமான காலம்.
இப்போது மிக இலகு நட்பிலிருந்து நீக்குவது.
Likes தின்று வாழ இதென்ன சத்தற்ற உலகமா?
தொடுபேசியில்
விரல் நுனியால்
கவனமாகப் பெயரைத் தொட்டு Unfriend ஆக்கலாம்.
Profile Photos குற்றவாளிகளது பட்டியலாக காட்டுகின்றன
மறு தோற்றம்.
மலை-குகை-காடு தேடி ஓடிப்போன மனிதர்கள்
ஏன் நினைவுக்கு வருகின்றனர்?
இது மனநோயின் அறிகுறி என்கிறது ஒரு குறிப்பு.

4.

முடிவு உண்டு என்று நம்பி
ஊர்கின்ற வாழ்வே
கொஞ்சம் வேகமாக …வேகமாக…

5.

அள்ளியள்ளி மணலாய் குமித்துக்குமித்து
எறும்பாக ஊர்ந்து ஊர்ந்து
ஒன்றொன்றாக
சொற்கள்…சொற்களென்று…
எப்படி முடிக்கலாம்?
அடுப்பில் கொதிக்கின்ற தேநீர்க்குடுவை
ஆமை முட்டையிடும் குழி இரகசியம்
ஃபேஸ்புக்கில் பகிராத
பழைய கொப்பிகளின் கடைசி ஒற்றைகள்
எல்லா இடங்களிலும் தேடிச் சேர்த்து வைத்து
தேர்ந்தெடுப்பதற்கும்
விலக்குவதற்கும்
ஒரு வளர்ந்த மூளையும்
சரி-பிழையறிந்த விரல்களும் தேவை.