‘ஓர் அற்ப ‘ஆமாம்’அல்லது‘இல்லை’க்குக் கூட என் கண்கள் பனித்துவிடுகின்றன ’ –பியரெத் ஃப்லுசியோ-

ஆம் என்பதற்கும் இல்லையென்பதற்கும்
இடையில்
கடக்கின்றது கனவு
மறைத்து வைத்த மெல்லிய ஆடையொன்றை
அணிகின்றது மனம்
அற்றபோதில் பாறைகளைக் குடைந்து ஒளிகின்றது
 .
நரம்புகளினுள் ஊர்கின்ற ஒன்றும்
தொடுகைகள் தருகின்ற மற்றொன்றும்
மனச்சட்டைகளின் எண்ணங்கள்
 .
ஒளிவெட்டி மினுங்கும் வானத்தில் விரிவதும்
ஓர் ஆயுள் தீர்ந்தும் நிலமின்றி அலைவதும்
மனச்செட்டைகளின் வண்ணங்கள்
.
வருடங்கள், மாதங்கள், நாட்கள்,நிமிடங்கள் …
கணக்கற்ற காலமொன்றில்
ஒரு கை
ஒரு தேடல்
நதி நடுவில் தோணியொன்றைத் தள்ளிவிடுகிறது
 .
ஏறுதலும் இறங்குதலுமாக
நடுங்குகிறது நிலவு.
தர்மினி-
நன்றி: மறுகா