-புஷ்பராணி-

சுழிபுரத்தில் ஆறு வயதுப் பாலகி ரெஜினா படுகொலைசெய்யப்பட்டுச் சடலமாக தனியே தூரத்தில் இருந்த கிணறொன்றிலிருந்து மீட்பு…மீண்டுமொரு கொடுமையான செய்தி!

பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?பாவிகளின் வெறித்தனத்துக்கு ஒரு அளவேயில்லையா என்று பதறுகின்றோம்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் இப்போதுதான் நடைபெறுவதுபோல ஒரு சிலர் பேசுவது பெரும் எரிச்சலைத் தருகின்றது. இப்போது பரவலாக வெளியில் தெரிய வருகின்றது.

போதை மருந்துப் பழக்கம் இப்போது அதிகரித்திருப்பதாலேயே இத்தகைய குற்றச் செயல்கள் இடம் பெறுகின்றன என்பதை நான் முற்றுமுழுதாக ஒப்புக்கொள்ளமாட்டேன். காலங்காலமாகவே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பேசப்படாத பொருளாக மறைக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி நான் எழுதிய * ‘இருள் படர்ந்த பெருங்கொடுமைகள்’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்..

இங்கு, நான் வாழும் ஃபிரான்ஸ் நாட்டில் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளை  பள்ளிக்கூடத்திலிருந்து தனியே போக விடமாட்டார்கள். பெற்றோர் அல்லது தெரியப்படுத்திய பாதுகாவலர்கள் வந்தால் தான் அனுமதி கிடைக்கும். குறிப்பிட்ட நேரம் கடந்தும் யாரும் வரவில்லையென்றால் போலீசிடம் ஒப்படைப்பார்கள். பாதுகாப்பே அருகிவரும் இன்றைய நாட்களில் குறிப்பிட்ட வயது வரும் வரையும் குழந்தைகளைத் தனியே விடுவதைப் பள்ளிகளும் அனுமதிக்கக்கூடாது

கொஞ்ச நாட்களுக்கு முன் இந்தியாவில் குதிரை மேய்க்கப் போன எட்டு வயதுப்பாலகியைக் கோவிலுக்குள் வைத்து ஐந்து பேர் கூட்டு வன்புணர்வு செய்து கொலைசெது வீசியதை இன்னும் மறக்கமுடியவில்லை. என்னதான் வறுமையென்றாலும் ஒரு குழந்தையைக் குதிரை மேய்க்க அனுப்பியது நெருடலாகவேயுள்ளது.

குழந்தைகளை என்னவும் செய்யலாம் ,அவர்கள் யாரிடமும் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியமும் ,இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடம் உறைந்திருக்கின்றன, உண்மையான குற்றவாளிகள் கடும் தண்டனைக்கு ஆளானால் மட்டும் போதாது. எமது குழந்தைகளையும் எம் கண்ணுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க வேண்டும்.