அ Girl-Looking-Out-Window-at-Moon-Painting-55445

மோனிகா

85

தீவிரமாக கண்களை மூடி

பகடைகளை உருட்டிப் போடுகிறேன்

எட்டும் ஐந்தும்

முகநூலை திறப்பதற்கான எண்கள் அவை

எனச் சொல்லிக் கொள்கிறேன்

நேற்றிரவு உணவு மேசையினை

படம் பிடித்து போட்டிருக்கிறாள்

ஒரு சீமாட்டி

பெண்களை சீண்டிப்பார்க்கும் ஒருவன்

அறிவு சீவியுடன்

மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறாள்

ஒரு கவிதாயினி.

கல்லாய்ச் சமைந்த வரலாற்றைக் கழுவி கழுவி

பத்தி பத்தியாய் எழுதிக் கொண்டிருக்கிறான் ஒருவன்.

சாவின் விளிம்பில் சென்று திரும்பியவர்களுக்கு

ஆதரவாய் கூக்குரலிடும் ஒருவன்

நிலைத்தகவலுக்கு “லைக்ஸ்” மற்றும் “கோபம்” காட்டும்

ஸ்மைலிக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

 

வதை. மன பிறழ்வு….. 

சாமி வந்தவள் போல் இம்முறை உடம்பைச் சுழற்றி

ஒரு முறை பகடையை எறிகிறேன்.

30

மூன்று பூச்சியத்திற்குறியது தொலைக்காட்சிப் பெட்டி

ஒளிச் சட்டகத்தை உயிர்ப்பித்தேன்.

ஒரு சானலில் சோற்றைப் பிடுங்கித்தின்ன ஒருவனை

மக்கள் அடித்தே கொன்றனர்.

மறு சானலில் மாட்டுக் கறி தின்றதற்காய் நிர்வாணமாய்

நிக்கவைத்து பின் புறம் அடித்து மகிழ்வதை

தொடரலையாக் காட்டிக் கொண்டிருந்தனர்.

பரிகாரம் தீர்க்கும் கோபூஜையும், லட்சுமி யந்திரமும் ஒரு சானலில்.

எலிகள்போல பத்து பேரை ஒரு அறையினுள் அடைத்து

அவர்கள் அடித்துக் கொள்வதை

ரியாலிடி ஆக்கி அக மகிழ்ந்தது அடுத்த காட்சி.

சட்டியுடன் பெண்ணின் வண்டியில் குதிக்கும் ஆண்மகன்,

அம்மாவைப்போலவே நெய் வாங்கி பலகாரம் செய்யும்

குடும்ப பெண் உட்பட விளம்பரம் பல.

 

இம்முறை கால் விரல்களால் சுழற்றிப் போட்டென்.

பகடைகளை.

எண்: 24

இது தொலை பேசிக்கானது.

விட்டுச் சென்ற பொருட்களை பத்திரமாகச் சேர்த்துவிடுமாறு

பணித்தான் ஒரு நண்பன்.

அடுத்தவனுக்கு அலுவலில் பிரச்சினை.

மற்றொருவன் தொடர்ந்து அடுத்தவர் பற்றி குசலம்.

வீட்டில் சமையலென்ன என்று கேட்டாள் அம்மா.

நாய்க்குட்டியைப் பற்றி சொல்லி மாய்ந்தாள் தங்கை.

உல்லாசப் பயணம் பற்றி பூரித்துப் போனாள் தோழி.

 

இம்முறை பகடையில்:

11

இது என்ன ஆப்பு? (வாட்ஸ் ஆப்)க்கான எண்.

சில மீம்ஸ்,

த்ரெட்டில் அரட்டை,

மொக்கை ஜோக்.

சங்க் பரிவார்.

காயத்ரி ஸ்லோஹம்.

இளையரஜா பாட்டு.

கணவன் மனைவி கடி ஜோக்.

 

பகடையைப் பெட்டியில் அடைத்தேன்.

தனிமையில் இருக்கிறேன் என்று சொல்லிக்

கொள்வது எனது தோல்வி.

என்னமோ தனியாகத்தான் இருக்கிறேன்.

Advertisements