13221130_10207595591065786_8265757246831498043_oநவஜோதி ஜோகரட்னம்(லண்டன்)

ர்மினியின் ‘இருள் மிதக்கும் பொய்கை’ என்ற கவிதைத் தொகுப்பு 70 பக்கங்களில் 51 கவிதைகளை உள்ளடக்கியிருக்கின்றன. இது இவருடைய 2ஆவது கவிதைத்தொகுதி.  2016 இல் வெளியிட்டுள்ளார்.

இருள் எப்போதும் அச்சுறுத்துவதாக, திகில் ஊட்டுவதாக, கொடுமையானதாக,
ஒளியை விழுங்கிவிடுவதாக, தீயை ஏற்படுத்திவிடுவதாகக் கருதப்படுகின்றது.
பைபிளில் வெளிச்சம் தெய்வமாகவும், இருள் கடவுளுக்கு எதிரான சக்தியாகவும்
நோக்கப்படுகின்றது. இருள் கொடியவர்கள் உறையும் இடமாக, இறுதித் தீர்ப்பு
வழங்கும் பொழுதாக – மரணம் சம்பவிக்கும் நேரமாக இருள் வரையறுக்கப்படுகிறது.
இறைவனின் இறுதித் தீர்ப்பினால் இருளின் நாளாகவே கணிக்கப்படுகிறது. கடவுளே இருளின்மீது ஆட்சி செலுத்துபவராகவும், தீய சக்திகளின் வலிமையின்மீது ஆட்சி செலுத்துபவராகவும் காணப்படுகின்றார். கடவுளே காரிருளை அறிபவராகவும் இருக்கின்றார்.
மனிதர்களின் கண்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்வதற்காக கடவுள்
இருளைப் பயன்படுத்துகிறார். இருளிலேயே அவர் தீயவர்களுக்குத் தண்டனை
வழங்குகிறார். இப்படியே இருள் எப்போதுமே எதிர் மறையான பொருளிலேயே
அனைத்துச் சமயங்களிலும் நோக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தர்மினி இருளிலேயே திளைக்கிறாள்.இருளைப் பவித்திரமானது என்கிறாள் – இருளே உண்மை என்கிறாள் – இருளோவெட்கம் அறியாதது என்கிறாள் – இருள் கசிந்த மனதைத் துடைக்கும் கடதாசிஎன்கிறாள் –  இவள் இருட்டைப்போன்று வனப்பானவள் என்கிறாள் – இவள்,இருளைப்போல் இரகசியங்களைப் புதைத்தவள் என்கிறாள். மென் இருள் தரும் சுதந்திரத்தை எப்போதும் தர்மினி அவாவி நிற்கின்றாள்.இருளை வாழ்தலில் சுகிக்கிறாள். தன்னைப் பருகச் சொல்கிறது இரவு என்று சந்தோஷிக்கிறாள். உறங்கி எழுவதற்குள் ஒரு காலை விடிந்துவிடும் எனப்பயப்பிடுகிறாள். இரவு கனிந்து உருகுகின்றது என்று குதூகலிக்கின்றாள். இருளுக்குள் ஒளிந்துகொள்ள ஆசைப்படுகிறாள். இருளுக்காக இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது என்று கேள்வி எழுப்புகிறாள். இரவோடு எப்போதும் கதைத்துக்கொள்கிறாள்.  நான் மணிக்கூட்டைப் பார்க்கப் பார்க்கமுடிந்து கொண்டிருக்கிறது இரவு என்று ஆயாசப்படுகிறார். இறுதிக் கண்கள் மூடிஇருட்கருமையின் பெருங்கருணை உறக்கத்தில் நிம்மதி காண்கிறார். சூரியச் செருக்கு
இரவைக் கொன்றது என்று ஒளியின் மீது வசை பாடுகின்றார்.

தன்னைப் பருகச் சொல்கிறது இரவு
உறங்கி எழுவதற்குள்
ஒரு காலை விடிந்து விடுமெனப் பயமாயிருக்கிறது என்று தொடங்கும் கவிதையில்

பளபளத்த இருளின் கண்களில்
ஒரு நட்சத்திரமாயிருக்க வேண்டுமென
வானத்தில் ஏறினேன்! என்று சகதியான ஒரு குட்டையில் ஒரு குழந்தை கல்லை
எறிந்து விளையாடி வளையங்கள் சுழல்வதைப் பார்த்து ரசிப்பதைப்போல படிமங்களை
உருவாக்கி அதில் ஏறி ரசிக்கிறாள் தர்மினி.
தர்மினி இந்நூலி; இருளை வாழ்தல் (11) இருளோடு(18) இருளைத் தரிசிக்க(29)
இரவோடு(35) சாமம்(46) வெறும் இரவு(60) போன்ற 6 கவிதைகளை வடித்துள்ளார்.
இருளுடனான கவியாடலை தர்மினி இருளை வரவேற்று மகிழ்ந்து ஒரு உயிர்ப்புள்ள
கவியாக நூலின் தலைப்பிற்கமைய இந்நூலில் வடித்துள்ளமை சிறப்பானவை.

Charles Baudelair, Victor Hugo, Jacques Prevert போன்ற பிரபல மிக்க பிரெஞ்சு
கவிஞர்கள் பல அற்புதமான கவிதைகளைப் படைத்திருக்கிறார்கள். தர்மினியும் அவர்களின் சாயலில் கவிதைகளைப் படைத்திருப்பதை என்னால் அவதானிக்கமுடிகிறது. பாரிஸ் நகரை இரவுக்காலங்களில் பகல்போலவே சுற்றுவார்கள்.கூடுதலான வெளிச்சத்தில் இருள் மறைந்து காணப்படுவதுண்டு.

இத்தகைய ஒரு சூழலில்  Jacques Prevert யின் கவிதையை வெ. ஸ்ரீராம்
அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்த கவிதையை இங்கே கூற விரும்புகிறேன். இரவில் பாரிஸ்…

‘இரவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தீக்குச்சிகள்
முதலாவது உன் முகத்தை முழுமையாகப் பார்க்க
இரண்டாவது உன் கண்களைக் காண
கடைசியாக உன் இதழ்களைப் பார்க்க
பின் சுற்றிலும் இருள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க
என் கரங்களில் உன்னை இறுக்கியவாறு’ என்று அழகான வரிகளால் கவிதையை முடிக்கின்றார்.

தர்மினியின் கவிதைகளின் கலைச்சொற்களும்; அவர் பார்வையும் அதன் உயிர்த்தன்மையும் என்னை ஆகர்சித்தன. அதுதான் கவிதையின் உண்மையான ஊற்று.எல்லாமே சிறிய சிறிய கவிதைகளாக அமைந்திருப்பது என்னை மேலும் கவர்ந்தது எனக் கூறுவேன்.

உலகெல்லாம் சிதறி அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் சமகாலப் பெண்
கவிதைகள் அனைத்தையும் ஒரே தன்மை உடையதாக நாம் நோக்க முடியாது.
தர்மினியின் சமகாலம் என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளில் இருந்து முற்று முழுதாக மாறி வேறொன்றாக எம் முன் காட்சி தருகின்றது.

உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் மற்ற மனிதர்களிடம் ஏதோ தேவையுள்ளது.
பிரபஞ்சம் உயிரற்ற, உயிருள்ள இயங்கு வெளி. மானுட உலகாக தனதாக்கிக்கொள்ளமுயலுகின்றது. இவ்வித முயற்சி எல்லாவற்றிற்கும் மொழி வழியாக அடையாளம்தருகின்றது. குறித்த சொற்களை, படிமங்களைக் கொண்டு நிகழ்வுகளைக் கவிதைக்குள்அடக்கும் மொழியை மிக லாவகமாக கவிதை மொழிக்கு அறிமுகப்படுத்துகின்றார் தர்மினி.

தன் சொந்த மண்ணில் அனுபவித்த சோக அனுபவங்களை நினைவுபடுத்துகையில் தன்தாயைப் பிரிந்து வருகையில் தன் தாய்க்குக் கொடுக்காத முத்தத்திற்காக வருந்துகிறார்
தர்மினி. நாங்கள் எத்தனைபோர் எங்கள் தாய்க்கு ஆசையாக முத்தம் கொடுக்கிறோம்.

முத்தங்கள்(47)
அம்மாவைப் பிரிந்து பதினைந்து வருடங்களாகின்றன
ரயில் நிலையத்தில் வைத்து
போய் வருகிறேன்
சொன்ன போது
உறுதியாக எனக்குத் தெரியும்
இம்முறை ஏஜென்சி
ஐரோப்பிய நாடொன்றில் இறக்கிவிடுவார்

ரயில் நிலைய மேடையோடு
அம்மா நிற்க
அய்ரோப்பாவில் அகதியாக இறங்கி நின்றேன் …என்று தொடர்கின்ற கவிதை

வீட்டுக் வரும் எல்லோரையும்
இரு கன்னங்களிலும்
இவ்விரண்டு தடவைகள்
முத்தமிட்டு வரவேற்கின்றேன்

அம்மாவையும் கொஞ்சி அணைத்திருக்கலாமோ? என்ற ஒரு ஏக்கத்தோடு கவிதையை
முடிக்கிறார்.

அதே வேளையில் ரயில் பணயத்தின்போது இயல்பாக ஒரு ஆணிடமிருந்து கிடைத்த
முத்தங்களைப் பற்றி இப்படி நினைவு படுத்துகிறார்.

பெயர் அறியாத ஒருவனின் முத்தம்
முகம் மறந்துவிட்டது
பெயர் கேட்டறியவில்லை
இரு முத்தங்கள் மட்டும்
அத்தருணத்தின் நினைவாக
என்னோடு; பயணிக்கின்றன…
என்று பிரலாபிக்கின்றாள்.
பிரான்சில் தர்மினி வாழ்ந்து கொண்டிருப்பதால் இத்தகைய தங்களது அன்பை
முத்தங்களால்; கன்னங்களில் பரிமாறுவது – அன்பாகத் தழுவுவது மிகவும்
சாதாரணமானவை. ஆண் பெண் வேறுபாடின்றி அவர்கள் இதனை வழங்குவதுண்டு.
ஆனால், அவை விரசமாகப் பார்க்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட 9 வருடங்கள் பிரெஞ்சுமக்களோடு சேர்ந்து பணிபுரிந்த இனிமையான எனது அனுபவங்கள் இன்னும்பசுமையாகத்தான் இருக்கிறது. புதிய புதிய அனுபவங்களால் உலகை வேறு விதத்தில்என்னைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அது மிகையாகாது. பிரெஞ்சு மக்களின்நல்ல பக்கங்கள் நிறையவே இருக்கின்றன. நல்லவனவற்றை இன்றும் என் வாழ்வில் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.

அடுத்து இவருடைய ‘1995 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி’ என்ற கவிதையில்: தமிழ்மக்களின் வெளியேற்றத்தைப் பேசும் அதே சமயம், 1990 இல் இஸ்லாமிய மக்களைபலவந்தமாக வெளியேற்றப்பட்டதையும் நினைவு படுத்துவதுபோல் படைத்துள்ளார்.

அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்

என்று வரலாற்றில் அவர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையைத் தான் தமிழ்
மக்களாகிய நாங்களும் அனுபவித்தோம் என்பதை தர்மினி சுட்டிக் காட்டும் ஒரு சிறந்த கவிதையாக எனக்குத் தோன்றுகின்றது.

வீடென்பது என் ஞாபகங்கள் என்ற கவிதையை ஒரு முக்கிய கவிதையாக
பார்க்கின்றேன்(16).நாம் புலம்பெயர்ந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எம் ஒவ்வொருவருக்கும் அது ஞாபகங்களாகத் தான் இருக்கிறது என்பதை தர்மினி அழகாக கவிதையால் வடிவமைத்துச் செதுக்கிக் காட்டுகிறார்.
மாங்கிளைகள் முறிந்தன
தென்னங்கன்றுகள் புகைந்தெழுந்தன- என்று தொடங்கி…

கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா?
நட்புகள் விசாரணை
அங்கிருக்கும் ஊரில் எங்கிருக்கிறது என் வீடு?
வீடென்பது…
என் ஞாபகங்கள்.

என்று முடிக்கிறார் தர்மினி கவிதையை…
இத்தகைய ஞாபகங்களை நம் எல்லோருள்ளும் விதைத்து தனக்கான மொழியின்அலகில் பயணத்தை மேற்கொள்ளும் தர்மினியைத் தொடர்ந்தும் சிறந்தகவிதைகளைப் படைக்க வேண்டுமென வாழ்த்தி – தற்செயலானநம் சந்திப்பின் புள்ளியைப் பெரிதாக்கலாம் என்ற தர்மினியின் நம்பிக்கையை உங்களுக்கு முன் வைத்து விடைபெறுகின்றேன்.
நன்றி!

03//11/2018

விம்பம் (லண்டன்) நடாத்திய கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை