1.

யாரென்று 
ஒவ்வொரு இடத்திலும் அடையாளப்படுத்தும் 
கட்டாயம் / கட்டளை.

சலுகைகளுக்கும் உரிமைகளுக்கும் 
இருப்பிற்கும் இன்மைக்கும் 

எண்கள்…ஊர்கள்…பெயர்கள்…கையெழுத்துகள்…
மையொற்றிய குத்துகள்…

தாள்களும் கோப்புகளுமாக
சந்தேகத்தின் புற்றுகளிலிருந்து 
பயமுறுத்தும் பேருருக்கள்.

 
காற்றிற்கும் வெப்பத்திற்கும்
ஒளிக்கும் இருளுக்கும் இசைய,
பசிக்கும் தீர்வுக்குமாக  
அடையாளம் சுமக்காத ஒரு காலம்
படிவங்களை நிரப்பாத
தரவுகளும் ஆதாரங்களும் கேட்காத  ஒரு வாழ்வு
ஓர் உடல் எளிதுகளோடு வாழ
தான் யாரென நிறுவத் தேவையற்ற

ஓரிடம்  தேடல்

வேறு வழியற்ற நிமித்தமிது.
விண்ணப்பங்களை நிரப்புகின்ற 
அடுத்த இலக்கம் நீங்கள்.

***

2.
இரவும் பகலும்  எனை மீறி நிகழ்கின்றன 
திசையைத்  திட்டமிட்டதில்லை
கால்கள்  தானாகப் போயின

கைகளில் 
கொஞ்சக் கதைகளோடு வந்து சேர்ந்திருந்தேன்
கானகம் போன்று வளர்த்த  இரகசியங்கள்
சுனைகளின் இனிப்பையும்
கொடுமை கொண்ட விலங்கின் அழகுமாக
இரக்கமற்ற வசீகரத்தில் வனப்போடு பேச்சுகள்

மென்னொளி சற்றுத் தெறிப்பதாக 
ஆகாயம் ஒரு நிறத்தைக் காட்டிவிட்டுப் போகிறது 
அந்நியம் நெளிந்தது
தேர்ந்தெடுத்த வசனங்களில்  சுவர் வளர்ந்தது
உரையாடல்களில்  கயிறுகளின் இறுக்கம்
வெறுப்பின் சில்லுகள் கடகடவென ஓடி வருகின்றன
மெலிந்த கால்களை  வைத்து  
உறுதியாக நின்று
என் உள்ளங்கைகளை 
ஒன்றை மற்றொன்றால் பொத்திப்பிடித்துக்கொண்டேன்
அமைதி !
விரைந்த இரயிலை விடப் பெருஞ்சத்தமாக
இப்போது கேட்கிறது
***

3.

இரவின் கண்
பயப்பிடாதே எனச் சிமிட்டுகின்றது.
இருளழகில் பித்தும் வெறியும் கூடி விடுகின்றன.
அப்பொழுதில் சரி-பிழை சத்தம் செய்வதில்லை.
ஒளிப்படங்களில் சுயத்தின் பெருமைகள் மினுங்கும்.
நியாயத் தடி இல்லாமல் சில வரிகள் எழுதப்படுகின்றன.  

திடீரென்று
அப்பாடல் காதுகளினுள் தெவிட்டாமல் ஒலிக்க
இன்புறுங்கள் எனப்பகிர்வு
காலையில்  புதுக்கண்களால் ஒரு பார்வை
வெளிச்சத்தின் வெருட்டு
எல்லாம் ஓன்லி மீ.

விடியவிடிய விழித்திருந்தவர்கள் 
மின்னி மறைந்தவற்றைப் பார்த்திருப்பர்.

***

தர்மினி

நன்றி :அம்ருதா நவம்பர் 2018