1.
பனி கொட்டிக் கொண்டிருக்கும் 
பொழுதுபட்ட நேரம்

வானும் கீழும் ஒன்று போலொரு வண்ணம்

நட்சத்திரமொன்று மின்னியதைக் கண்டேனா?
இல்லை
காற்றின் விசுக்கலில்
வீதி விளக்கின் வெளிச்சத் துண்டொன்று
தவ்விப் பறந்ததோ?

மேல் வீட்டுச் சன்னலால் விழுகிறது
கசங்கிய காகிதக் கைக்குட்டை
Oh là là
இக்கணமே நனைந்து போனதே

வசிப்பிட விண்ணப்பத்திற்காக வரிசையில் நின்ற பாதங்கள் 
ஈரம் சுவறி விறைத்து நான் வீழ்ந்த 
குளிர் நாளொன்று நினைவில் வருகிறது

அறையில் மெழுகுவர்த்தி நுார்ந்த வாசம்

இனியென்ன?
இமைகள் கற்களைக் கட்டியிழுத்துக் கனக்கின்றன

பயங்கரங்களின் தொகுப்புகளை
சேகரித்த மூளை
இயந்திரத்தைத் திருகத் தொடங்குகிறது

ஈஸ்மன்ட் கலரில் 
மாயக்காட்சிகள் திரையிடப் படுகின்றன
எல்லா நாட்களும் 
பயங்கரக்காட்சிகள்!

2.
தாகத்திற்கு ஒரு மிடறு 
ஒரு வார்த்தை உனது
பிறகு 
ஒரு மிடறு
ஒரு வார்த்தை எனது
மாறி… மாறி…
என் தனி நடிப்பிற்குக் கைகளையாவது தட்டு

மறுமொழிகளற்ற 
என் கேள்விகள்
சன்னலை உடைத்தபடி பாய்கின்றன 
அங்கு கீழே கிடப்பதும் 
உன் மூன்றாங்காது தான்

துாரத்தில்
ஒளிர்ந்த புள்ளியொன்று அணைந்து 
டப்பென்று வீழ்கிறது

வானத்தில் 
வெள்ளிப்பூக்களைச் சுமந்த கப்பல் தடுமாறுகிறதே
கவிழுமா ?

உடைந்து ஒழுகிப் பரவும் நீரைப் போல
ஓடித்திரிகின்றனவே முகில்கள்

ஒன்றுமில்லை
அலுக்காத ஆகாயத்தை வேடிக்கை பார்க்கிறேன்.

நன்றி :ஆக்காட்டி (மார்ச் 2019) இதழ் 16