புனைவுகளைப் படிப்பதற்கு ஆர்வங்குறைந்து விட்டதே என்று சில நேரங்களில் கவலையோடு நினைப்பேன். உண்மையின் முகங்களைக் காண்பது விருப்பமாயிருக்கிறது. எனது  நேரத்தைக் கொடுத்துப் படிக்கத் தன் வரலாறுகளும் கட்டுரைகளும் தான்  உவப்பாயிருக்கின்றன. இப்போதெல்லாம் வெளியாகும் புத்தகங்களில் நல்ல கதையோ நாவலோ படிக்கக் கிடைப்பதே அபூர்வமாகிவிட்டது. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான எழுத்துகள்,கதைகள் அல்லது வலிந்து சொற்களைத் திருகி முறுக்கித் தீவிரமானதாகக் காட்டும் முனைப்பு என்பதாகப் பல கற்பனைகளைப் படிக்க அலுப்பு ஏற்படுகின்றது. வாசிப்பின் அனுபவத்தை உணர்த்த எப்போதாவது சில கிடைத்து வாசிப்பைச் சோர்வடையச் செய்யாமலிருக்கின்றன. பெரும்பாலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் எனக்கு ஏமாற்றத்தைத் தருவதில்லை. அப்படித்தான் ஆலிஸ்வாக்கர் எழுதிய இந்நாவலும் வாசிப்பின் இனிய அனுபவத்தைத் தந்தது. The Color Purple என்ற பெயரில் 1982 ல் ஆங்கிலத்தில் வெளியாகியாகிய நாவல், 2018 டிசம்பர் தமிழில் ‘அன்புள்ள ஏவாளுக்கு‘ என்ற பெயரில் எதிர் வெளியீடாக வந்திருக்கிறது.  மொழியெர்த்த ஷஹிதாவின் தமிழ் எளிமை- அருமை-அழகு. யதார்த்தமான வாழ்வும் பழமொழிகளுமாக ஒவ்வொன்றையும் வேறொரு விதமாக நோக்கும் எழுத்தும் அந்நியமாக உணரச்செய்யாத மொழிபெயர்ப்புமாக நாவல் 352 பக்கங்கள். சில புத்தகங்கள் எப்போது முடியும்  எனப் பக்கங்களை எண்ணச் செய்வன. இன்னும் சில படிக்க முடியாமல் இடையில் மூடி வைக்கச் செய்வன. இப்புத்தகம் போல சில தான் முடிந்துவிடுமோ  எனக் கொஞ்சம் கவலைப்படச் செய்வன. இரண்டு  நாட்களாக வழமையான வேலைகள் எப்போது முடியும்? எப்போது படிக்க நேரங்கிடைக்கும்? எனக் காத்துக் காத்து எடுத்தெடுத்து ஆவலோடு படித்த நாவலாகிப்போனது ‘அன்புள்ள ஏவாளுக்கு’. அன்பளித்த கிருபா முனுசாமிக்கு நன்றி!  

               வீண் வர்ணனைகளற்ற எளிமையான தொடக்கம் ‘எனக்குப்  பதினான்கு வயதாகிறது’. சிறுமி சீலி தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது முதல் பக்கத்திலேயே கடவுளுக்கொரு கடிதமாக எழுதப்பட்டுவிடுகிறது. அவளுக்கு ஆதரவளிக்க யாருமில்லை. கடவுளுக்குக் கடிதங்களாகக் கதை தொடர்கிறது. இதற்கிடையில் தந்தை மூலமாக இரு குழந்தைகள் பிறந்து அவை காணாமலாக்கப்படுகின்றன. சீலியின் தாயின் இறப்பு இன்னும்  மோசமான நிலைமையை ஏற்படுத்துகின்றது. தங்கை நெட்டியையும் தகப்பனிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும். வயதான மூன்று பிள்ளைகளுடைய மனிதனை மணம் செய்யச் சம்மதிக்கிறாள் சீலி. பின்பு சீலியோடு  அவ்வீட்டிற்குச் சென்று வாழ்ந்த தங்கை நெட்டி, அம்மனிதனிடமிருந்து தப்பித்துச்  சென்றுவிடுகிறார். இவர்களோடு வந்து சேரும் உறவும் பகையுமான பெண்கள் நாவலில் ஆண்களை ஒன்று சேர்ந்து கேலி செய்வதும் பெண்களது அவலங்களை அவர்கள் ஆளுக்காள் புரிந்தவர்களாக அரவணைப்பதும் எனச்  சம்பவங்கள் மனித மனதின் நுட்பங்களைத் தொட்டுச் சொல்கின்றன. அமெரிக்காவில் அடிமைகளாக்கப்பட்ட ஆபிரிக்க வம்சாவழியினருடைய துன்பங்களும் அதனுள்ளும் கொண்டாட்டமான வாழ்வுமாக இம்மனிதர்கள். அவர்களிடம் நிரந்தரக் கோபமில்லை. மன்னித்து விடுகிறார்கள். எளிதாக வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். உறவுகளின் புனிதங்களையெல்லாம்; இது தான் மனித இயல்பென்று உடைத்துவிடுகிறார்கள், பாடுகிறார்கள், ஆடுகிறார்கள். 

        சீலி மிஸ்டர் ______ என்று தான் தன்னை மணம் செய்தவரைக் குறிப்பிடுகிறார். அவ்வீட்டில் சீலி பணியாள் போல நடத்தப்பட்டு வேலைகளும் அடிகளும் வாழ்வாக இருக்கிறது. மிஸ்டர்_______தன் காதலியான ஷூக் ஏவரி என்ற  பாடகியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடவும்  பணிவிடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சீலி இருக்கிறார். சீலி, ஷூக் ஏவரி மீது ஈர்ப்பும் அன்புமாக  நோய்வாய்ப்பட்டவரைப் பராமரிக்கிறார்.  ஷூக் ஏவரிக்குக்  காதலனாக, அறிவாளியாக,கௌரவமானவராகத் தெரிந்த மிஸ்டர் _____பற்றிய சீலியின் முறைப்பாடுகள், இப்போது  ஷூக் ஏவரிக்கு அம்மனிதன் மீது வெறுப்பை ஏற்படுத்துகின்றது. கடவுள் நம்பிக்கை பற்றிய நிறையக் கேள்விகளையும்  பெண் உடல் -உணர்வுகள்-வழமைகளை மீறல் என உரையாடும் ஒரு தோழியாக ஷூக் ஏவரி சீலிக்கு வாழ்வை இனிமையாக்குகின்றார். ஒரு கட்டத்தில் சீலியும் ஷூக் ஏவரியும் காதலர்களாகி விடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் சேரும் விலகும் உறவுகள் ஒவ்வொருவரும் பிறரை நட்போடு நாடுகின்றனர். 

        ஷூக் ஏவரி, அடிகளும் வேலைகளும் வாங்கும்  இந்த ஆண்களிடமிருந்து சீலியையும் மிஸ்டர் ______ன் மகனது துணைவியையும்  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறார். அவர்களைப் பாடகியாகவும் தையற்கலையில் தேர்ச்சி பெற்று சம்பாதிப்பவராகவும் ஆளுமை மிக்க பெண்களாக்குகின்றார். குழுவில்  புதிதாக இணைந்த பத்தொன்பது வயது ஃப்ளூட் இசைக்கலைஞன் ஜெர்மைன் மீது காதல் வயப்பட்ட ஷூக் ஏவரி ‘இப்படி ஓர் ஆள் மயக்கிப் பேரை அவனுக்கு யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை’ எனச் சீலியோடு தன் புதிய காதலைப் பற்றிப் பரவசமாகச் சொல்வதைச் சீலியால் தாங்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து  ஷூக் ஏவரி  இவர்களிடமிருந்து விலகிவிடுகிறார். மிஸ்டர் ______சீலியின் மேல் மரியாதை கொள்கிறார்,நண்பர்களாகின்றனர். அவர்கள் இருவருமாகத் தங்கள் காதலி  ஷூக் ஏவரியின் அழகும் அன்பும் பற்றிப் பிரிவாற்றாமையோடு கூடியிருந்து சோகமாகப் பேசுவது!மனங்களை எப்படி வாசிப்பது என ஆச்சரியப்படுத்தும் எழுத்தது.

      நெட்டி, மதப்பரப்புரை செய்பவர்களிடத்தில் சேர்ந்து அக்காவிற்குக் கடிதங்கள் எழுதுகிறாள். மதப்பிரச்சாரகர்களோடு ஆபிரிக்காவின் செனகலை சென்றடைந்த போது அங்கு கண்ட கறுப்பர்களை கறுப்பிலும் கறுப்பு என்பதோடு இப்படி எழுதுகிறார்… ‘ அந்தக் கறுப்பு அத்தனை ஆழமாய் இருக்கிறது; அது நம் கண்களில் பட்டுத் தகதகக்கிறது, நிலவொளி பட்டு மினுங்குகிறது, சூரிய ஒளியிலும் அவ்வளவு ஒளிர்கிறது‘. கொக்கோ பண்ணைத்தோட்டத்தில் வேலை செய்தவர்கள் களைப்பிலும் பாடுகிறார்கள்.களைத்துப் போனவர்கள் ஏன் பாடுகிறார்கள்?என்ற கேள்விக்கு,‘வேறெதுவும் இயலாத அளவுக்குக் களைத்திருப்பதால் எனப் பதில் வருகிறது. அவர்களது நம்பிக்கைகளும்  உபசரிப்பும் கூடி வாழ்தலும் நெட்டிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.  ஆபிரிக்காவை  இருண்ட கண்டமென்றும் மக்கள் நாகரிகமற்றவர்களென்றும் வெளியுலகுக்கு வெள்ளையர்கள் கதை பரப்பியதற்கு எதிரான பார்வையை அமெரிக்க -ஆபிரிக்கரான நெட்டியின் கடிதங்களில் ஆலிஸ்வாக்கர்  எழுதிச் சென்றுள்ளார். வெள்ளையர்களால், ஒலிங்கா கிராமத்தின் ஊடாகச் சாலைகளை போடப்பட்டு பயிர்கள், குடியிருப்புகள் அழிக்கப்பட்டு இறப்பர் கம்பனி தொடங்கப்படுகிறது. ‘ஒலிங்காக்களுக்கு இனியும் தங்கள் கிராமம் சொந்தமில்லை என்பதால் அவர்கள் அதற்கு வாடகை தந்தாக வேண்டும், தண்ணீரும் அவர்களுக்கு சொந்தமில்லை, அதனால் அதற்கு அவர்கள் வரி கட்ட வேண்டும். முதலில் சனங்கள் சிரித்தார்கள். அவர்கள் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு ரொம்பப் பைத்தியக்காரத் தனமாகத் தெரிந்தது. ஆனால் தலைவர் சிரிக்கவில்லை.’ அவர்களது நிலை போலத்தான் வெள்ளைக்காரர்கள் கைப்பற்றிய நாடுகள் என்பதை ஒரு தரம் யோசித்து, நிதானித்துத் தான் மிகுதியை வாசிக்க முடிந்தது.  

 இவர்கள் இருவரது கடிதங்களும் அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்கர்களின் அவலத்தைச் சொல்கின்றன. அவ்வாறான கடிதங்களில் ‘அப்பா நம் அப்பாவல்ல’ என்றும் குழந்தைகள் இருவரும் உயிரோடு வளர்கின்றனர் என்றும் சீலிக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. அன்புள்ள கடவுளுக்கு… எனக் கடிதங்களை எழுதிய சீலி இப்போது அன்பு நெட்டி… என எழுதுகிறார். பல வருடங்களாகப் பிரிந்த சகோதரிகள் இப்போது கடிதங்கள் மூலமாக உரையாடத் தொடங்கிவிடுகின்றனர்.
வெள்ளையர்களின் பைபிளில் கடவுளாக இருப்பவர், ஏன் வெள்ளை மனிதனாக இருக்கிறார்?கடவுள் எப்படி இருப்பார்? என உருவ இலட்சணங்களைப் பற்றி விமர்சிக்கின்றனர். ‘அக்கடவுள் வெள்ளைக்காரர்களின் கடவுளாயிருப்பதால் வெள்ளையர் போலவே இருக்கிறார்’ என்று சொல்லும் நெட்டி இயேசுவின் கேசம் செம்மறி ஆட்டுக்குட்டியின் மயிரைப் போலவே என்று பைபிளில் எழுதப்பட்ட வாக்கியத்தை முன் வைத்து அவரது நிறம், கேசம், கண்கள் எல்லாம் எவ்வாறு வெள்ளையராகத் தோற்றப்பாட்டைத் தருமாறு மாற்றப்பட்டன என்று மேலும் வினவுகிறார். சீலி; நெட்டிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு…‘பைபிளைப் படித்தவர்களுக்குக் கடவுள் வெள்ளையர் என்ற பிம்பம் தான் தோன்றும். நானும் கடவுள் வெள்ளையர் அதிலும் ஆண் என்றறிந்ததில் மனம் வெறுத்துப் போனேன். அவர் உன் பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்று நீ கோபமாக இருக்கிறாய்.சட்! கறுப்பர்கள் பேச்சுக்கு எந்த மேயராவது மதிப்பளிக்கிறாரா?என்பது சோஃபியாவின் கேள்வி'(இந்த சோஃபியா வெள்ளைகார மேயரின் வீட்டிற்குப் பணிப்பெண்ணாகப் போகமாட்டேன் என்றதால் அடித்து ஊனமாக்கப்பட்டு தண்டனையாக  மேயர் வீட்டில் சிறைக்கைதி வாழ்வை வாழ்ந்தவர்)

மீண்டும் ஷூக்…’ஒரு நட்சத்திரத்தைப் போல உடுத்திக்கொண்டு காரிலிருந்து இறங்கியவள், ஓ! சீலி  என் அம்மாவை எண்ணி ஏங்கியதை விடவும் உன்னைப் பிரிந்து ஏங்கினேன் என்றாள்’. 
இந்நாவல் பல சுவாரசியமான உரையாடல்களும் பொருள் கொண்ட வசனங்களுமாக எழுதப்பட்டுள்ளது. ஆயினும், மாறிமாறிக் கடிதங்களில் கதை நகர்வதால் தன்கூற்று- பிறர்கூற்று எதுவெனச் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகின்றது. குறியீடுகள்  இடப்பட்டிருப்பின் இலகுவாக இருந்திருக்கும். அவர்கள் தம்மைத் தாமே கேள்வி கேட்கிறார்கள்.பிறரோடு உரையாடுகிறார்கள். அவை வாசகராகிய நமது சுயவிசாரணையாகவும் ஆகின்றது.  ஆலிஸ்வாக்கர் கவிஞராகவுமிருப்பதால், இப்புத்தகத்தில் வார்த்தைகள் கச்சிதமாகவும் எழிலாகவும் வசனங்களில் வந்தமர்கின்றன. 

தர்மினி

நன்றி : அம்ருதா ஜூலை 2019