குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்
அவர் மென்னுடல் தடவி மகிழ்தல் பிடிக்கும்

மழலைகள் பேச்சில் கிறங்குதல் பிடிக்கும்,
மழையென முத்தம் சொரிவதும் பிடிக்கும்,
எழுதப் பிடிக்கும் ,படிக்கப் பிடிக்கும்
புத்தகங்கள் பிடிக்கும்…பிடிக்கும்…பிடிக்கும்…
இனிய கனவுகள் தொடரப் பிடிக்கும்
அதன் நினைவுகள் கூட மீட்டல் பிடிக்கும்

ஒளியின் சிதறல் காணப் பிடிக்கும்,
இருளின் கருமை அதுவும் பிடிக்கும்
உறக்கம் வந்து தழுவுதல் பிடிக்கும்
தூங்கா இரவு நீளுதல் பிடிக்கும்

காடு கரம்பை சுற்றுதல் பிடிக்கும்,
அதில் தெறிக்கும் வெப்பம் சுடுவதும் பிடிக்கும்
இயற்கையின் அழகு எல்லாம் பிடிக்கும்
அதைப் புகைப்படமாகப் பார்க்கவும் பிடிக்கும்

மனதையுருக்கும் கவிதை பிடிக்கும்

அதை எழுதிய மனதின் துள்ளல் பிடிக்கும்
சமையலில் இறங்கும் பரவசம் பிடிக்கும்
சுவை தரும் உணவை உண்ணப் பிடிக்கும்
அழகழகாக உடுத்தப் பிடிக்கும்

உடுத்தபின் என்னை இரசிக்கப் பிடிக்கும்

இசையின் இனிமை பருகிடப் பிடிக்கும்

திரைப்படம் நன்றாய் இருந்தால் பிடிக்கும்

துணிகள் துவைப்பது என்றும் பிடிக்கும்
துவைத்தபின் தெறிக்கும் சுகந்தம் பிடிக்கும்
மரஞ்செடி கொடிகள் வளர்ப்பது பிடிக்கும்
தினமும் அவற்றில் மயங்குதல் பிடிக்கும்

மலர்கள் இறைக்கும் வாசம் பிடிக்கும்
அவை எழிலினைத் தீற்றி மலர்வதும் பிடிக்கும்
செல்லம் கொஞ்சும் நாய்கள் பிடிக்கும்
அவைதரும் அன்பின் வருடல் பிடிக்கும்
பாம்பினை நீக்கி விலங்குகள் எல்லாம் பார்ப்பது பிடிக்கும்….தொடுவதும் பிடிக்கும்

தொல்லைகள் நீங்கித் தனித்ததும் பிடிக்கும்
அது தரும் சுதந்திரம் அள்ளுதல் பிடிக்கும்.

சி.புஷ்பராணி