சிஸ்ரர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ புத்தகத்தின் நினைவு வருகிறது. சிஸ்ரர் அபயா வழக்கின் தீர்ப்பு துறவு மடங்களின் போலித்தனங்களை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வழக்கை முன்வைத்து; கொலை, கத்தோலிக்கத் திருச்சபையின் வேடங்கள்,போலித் துறவிகளாக வாழும் மனிதர்களும் அவர்களது பாலியல் விழைவுகளுமென ஒரு திரைப்படமோ குறும்படமோ வெளியாகினால் அல்லது நாவலென்று எழுதினால் மதவெறுப்பு, ஆபாசம் என்பார்கள். கத்தோலிக்கத் துறவிகளை கொலைகாரர்களாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் சித்திரிப்பதாகக் கொதிப்பார்கள்.களவெடுக்கப் போனவரைத் தூயவராக்கியிருப்பதை ஏற்க முடியாமலிருப்பார்கள். சாட்சியமளித்த திருடர் அந்த மடத்தில் அப்படி என்ன இருக்குமென்று களவெடுக்கப் போனார் என்று கேட்பார்கள்.
தீர்ப்பு 28 ஆண்டுகளின் பின் கிடைத்திருக்கிறது.ஆனால், இதுவரை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடக்கும் காலத்தில் சமுதாயத்திலும் சபையிலும் மதிப்பும் பதவியுமாகவே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் துறவற ஆடையைக் கழட்டிவிட்டு சாதாரணர்களாக இவர்கள் வாழத் தொடங்கியிருக்கலாம். தாங்கள் செய்த கொலை பற்றிய குற்றவுணர்வற்றவர்களாகத் தொடர்ந்தும் போலி வேடங்களோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கத்தோலிக்கச் சபை அதற்குள் நடக்கும் இவை போன்ற குற்றங்களை மூடி மறைத்துத் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் போலிப் புனிதம் காக்கிறது.
சிறுவர் மீதான அத்துமீறல்கள்,கொலைகள், துறவிகளுக்கிடையிலான அத்துமீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடியே இருக்கின்றன.பக்தியான குடும்பங்களில் துறவிகள் மதிக்கப்படுவதும் சமுதாயத்தில் வழங்கப்படும் அந்தஸ்தும் கல்வியுமாக சிறார்கள் இதில் கவரப்படுகின்றனர். அதே போல பெற்றவர்களும் பக்திமயமாகித் தமது பிள்ளைகளை மடங்களில் சேர்த்து விடுகின்றனர். துறவறமென்றும் ஒழுக்கமென்றும் இயற்கைக்கு முரணாகப் பாலின்பம் துய்க்க முடியாதவாறு சபையின் விழுமியங்களோடு இறைபணி செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபை மொழி,பண்பாட்டுச்சடங்குகள் என வழிபாட்டு முறைகளைத் தளர்வுக்குட்படுத்தியது போல, விரும்பியவர்கள் தமது காதலுறவு மற்றும் பாலுறவுத் தேர்வுகளைச் செய்யலாம் களவும் பயமுமற்று வாழலாமென மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

-தர்மினி-