ருபத்தொன்பது வயதுக்குள் இவ்வளவு அனுபவங்களும் துன்பங்களுமா என்று திகைப்பு ஏற்படுகிறது. தமது பாலினம் பற்றிய தடுமாற்றங்களும் குழப்பமுமாக வாழும் பலருக்கு வழிகாட்டியாகவும் இந்நுால் அமையும்.பால்மாற்றுச் சிகிச்சை தொடர்பான மருத்துவ ரீதியான பல விளக்கங்களும் மற்றவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டுமென்ற அக்கறையோடும் எழுதப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் வசித்த ஆணொருவன் குழந்தையை விளையாடுவதற்கு என்று கூப்பிடும் போது, எதுவித சந்தேகமுமின்றி அம்மா கூட அனுப்பியது, சிறுவர்களைத் தனியாக உறவினர்களோடு விட்டுவிட்டு ஜேர்மனிக்கு வந்தது என்று அம்மாவின் மீது கோபம் வருகிறது. அம்மா உலகின் கள்ளங்களை, வன்மங்களை, வக்கிரங்களை அறியாதவராக, உணராதவராகவே இருக்கிறார்.

இதிலே புலம்பெயர்ந்த தமிழர்களது வாழ்வு பற்றிய இன்னுமொரு பக்கத்தையும் காண முடிகிறது. போலித்தனங்களையும் வரட்டு கௌரவங்களையும் கொண்டவர்களாக இருப்பவர்களின் மற்றுமொரு பக்கம்.ஆண்கள்; பெண்ணுடலை,பெண்ணாகத் தன்னை உணர்ந்த ஆணுடலை எவ்விதமெல்லாம் தம் வக்கிரங்களுக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்! பெண்மையின் நளினமுடைய சிறுவனை ஏன் இப்படித் துரத்திச் செல்கிறார்கள்? பெண்களுக்கு இருக்கும் அனுதாபமும் பாதுகாப்பும் கூட பாலினத்தேடலுடன் வாழ்பவர்களுக்கு இல்லை.இயற்கையின் வஞ்சனையை,செய்யாத தவறுக்கான தண்டனை போல எதற்காக அனுபவிக்கிறார்கள்? பெற்றவர்களின் அலட்சியமும் சமூகத்தின் ஏளனமும் எவ்வளவு வதைக்கிறது! உணர்வுகளை விளங்கிக் கொள்ளாமல் அடித்து உதைத்துக் குற்றவாளிகளாகவும் அருவருப்புக்குரியவர்களாகவும் ஏன் பார்க்கப் படுகிறார்கள்? இப்படியான சூழல் தான் உலகம் முழுதும். அது சற்றுக் கூடவோ குறையவோ இருக்கலாம். உடலும் மனமும் தன் பாலின அடையாளம் என்ன என்ற தேடலில் அதற்கான தீர்வுகளில் எந்நேரமும் உலைவுறும் தவிப்பை இந்நுாலைப்படித்து மனம் கலங்காமலிருக்க முடியாது. அச்சிடும் முன்பே படித்து விட்டதால் புத்தகமாகத் திரும்பப் படித்து அத்துயரை மீளவும் அனுபவிக்க மனத் திராணியற்றவளாகி, தயக்கத்தோடு தான் புத்தகத்தைக் கையிலெடுத்தேன். தனுஜாவின் துணிச்சலும் தவறுகளிலிருந்து கற்று மீண்டெழுதலும் என்னைத் திரும்பவும் படிக்க வைத்தன.

அக்காவின் அரவணைப்பு, ஆதரவு, புரிந்துணர்வு நம்மையும் நெகிழச் செய்யும். ஜேர்மனியில் வகுப்புத் தோழிகளின் அன்பு, தனுஜாவின் ஆசிரியையின் கண்ணீர், சிகிச்கையின் பின் வலியில் துடிக்கும் மகளைப் பார்த்து அழும் அம்மா என்று படிக்கும் போது, பெண்களது நேசமும் பரிவும் நமக்கும் ஆங்காங்கே சிறுசிறு ஆசுவாசத்தைத் தருவன.

பாலினத் தேடலை, தம்மை உணர்ந்து கொண்டதை, ஆடைகளை அணிந்தும் சிகிச்சைகள் மூலமாகவும் வெளிப்படுத்துவதுடன் பிறப்புச் சான்றிதழ் வழியாகச் சட்டப்படியாக அடையாளப் படுத்தக் கூடியதாகவும் நிலை மாறி வருகிறது. ஆனால் சமுதாயம் இயல்பாக தம்மில் ஒருவராக ஏற்கும் நிலை வரவேண்டும்.

முதலில் குடும்பங்களில், பள்ளிக்கூடங்களில் புரிந்துணர்வோடு தத்தளிப்பான மனங்களோடு தம் அடையாளத்தைப் பற்றிய தேடுதலோடு வாழுபவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செய்வதே அவசியம். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் இது பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும். பள்ளிக்கூடங்களில் தம் சக மாணவரை மரியாதையோடு அணுகவேண்டுமென்று மாணவர்களுக்குக் கற்பிக்கவும் தெளிவுபடுத்தவும் வேண்டும். கேலிகளும், துன்புறுத்தல்களும் பிஞ்சு மனங்களை எவ்வளவு வதைக்கும் என்பதை அறியாதவர்களாக ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் சிறார்களின் தடுமாற்றங்களை அறிந்து கொண்டவர்களாக, அத்துமீறுபவர்களில் இவர்களும் அடங்குவார்கள்.பள்ளிக்கூடங்களில் இது பற்றிய தெளிவை ஏற்படுத்தும் போது எதிர்காலச் சமூகத்தின் சிந்தனையில் தெளிவு ஏற்படும்.

வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் உற்சாகம் மிகுந்த இவரது பயணமும் போராட்டமும் எல்லோருக்குமான பாடம்.தனுஜா, தன் வாழ்வைத் திறந்த புத்தகமாக்கியது போலவே, வெளிப்படையாகவும் உண்மையாகவும் நட்போடு பழகும் இயல்புடையவர்.சொல்லொன்று எழுத்தொன்று என்றில்லாது, இவள் தான் தனுஜா என்று திமிராகவும் அழகாகவும் தன்னை முன் வைக்கும் கம்பீரமானவள்.
வெளியீடு : கருப்புப்பிரதிகள்
தர்மினி